செய்திகள்
225 ரன்கள் குவித்த டி காக்-மாலன் ஜோடி

மாலன், டி காக் அதிரடி சதம் - அயர்லாந்தை வீழ்த்தி ஒருநாள் தொடரை சமன் செய்தது தென் ஆப்பிரிக்கா

Published On 2021-07-17 02:59 IST   |   Update On 2021-07-17 02:59:00 IST
தென் ஆப்பிரிக்க தொடக்க ஆட்டக்காரர்களான ஜேன்மேன் மாலன், டி காக் ஜோடி அதிரடியாக ஆடி முதல் விக்கெட்டுக்கு 225 ரன்கள் குவித்தது.
டப்ளின்:

தென் ஆப்பிரிக்கா அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. இரண்டாவது ஒருநாள் போட்டியில் 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தென் ஆப்பிரிக்காவுக்கு அதிர்ச்சி அளித்தது அயர்லாந்து.

இந்நிலையில் அயர்லாந்து, தென் ஆப்பிரிக்கா இடையிலான 3-வது ஒருநாள் போட்டி டப்ளினில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 346 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர்களான ஜேன்மேன் மாலன், டி காக் ஜோடி அதிரடியாக ஆடி சதமடித்தது.

டி காக் 120 ரன்னில் வெளியேறினார். மாலன் 177 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

இதையடுத்து, 347 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் அயர்லாந்து களமிறங்கியது. முன்னணி வீரர்கள் விரைவில் அவுட்டாகினர். காம்பர் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து 54 ரன்னில் ஆட்டமிழந்தார்.



ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் சிமி சிங் சிறப்பாக ஆடி சதமடித்து அவுட்டாகாமல் உள்ளார்.

இறுதியில், அயர்லாந்து அணி 276 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 70 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 1-1 என சமன் செய்தது தென் ஆப்பிரிக்கா அணி.

ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருது ஜேன்மேன் மாலனுக்கு அளிக்கப்பட்டது. இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி 19-ம் தேதி நடக்கிறது.

Similar News