செய்திகள்
ரோஜர் பெடரர்

டோக்கியோ ஒலிம்பிக்கில் இருந்து ரோஜர் பெடரர் விலகல்

Published On 2021-07-14 11:20 GMT   |   Update On 2021-07-14 11:20 GMT
விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் தோல்வியடைந்து வெளியேறிய முன்னணி வீரர் ரோஜர் பெடரர், டோக்கியோ ஒலிம்பிக்கில் இருந்து விலகியுள்ளார்.
சுவிட்சர்லாந்தின் முன்னணி டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர். டென்னிஸ் தரவரிசையில் நீண்ட காலமாக நம்பர் ஒன் இடத்தில் இருந்தவர். 20 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ளார். என்றாலும் கடந்த சில வருடங்களாக அவரால் கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வெல்ல முடியவில்லை.

கடைசியாக 2018-ம் ஆண்டு ஆஸ்திரேலிய ஓபனை வென்றிருந்தார். இந்த வருடம் மூன்று கிராண்ட்ஸ்லாம் நடைபெற்றுள்ளது. மூன்றிலும் அவர் ஜொலிக்கவில்லை.

கடந்த வாரத்துடன் முடிவடைந்த விம்பிள்டன் டென்னிஸில் போலந்து வீரரிடம் காலிறுதியில் நேர்செட் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார்.

விம்பிள்டன் டென்னிஸில் விளையாடும்போது அவருக்கு மூட்டு வலி இருந்துள்ளது. இதனால் டோக்கியோ ஒலிம்பிக்கில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். காயத்தில் இருந்து மீள்வதற்கான நடைமுறையை தொடங்கிவிட்டதாகவும், இந்த கோடைக்காலத்தின் இறுதியில் மீண்டும் விளையாட்டுக்கு திரும்பும் நம்பிக்கை  உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News