செய்திகள்
சிலாட்டர் - வார்னர்

ஆஸ்திரேலிய வீரர்கள் வார்னர்-சிலாட்டர் மாலத்தீவு மதுபாரில் சண்டை?

Published On 2021-05-09 08:17 GMT   |   Update On 2021-05-09 08:17 GMT
ஐ.பி.எல்.லில் விளையாடிய ஆஸ்திரேலிய வீரர்கள், பயிற்சியாளர்கள், வர்ணணையாளர்கள் என 38 பேரை கிரிக்கெட் வாரியம் மாலத்தீவுக்கு அனுப்பி வைத்தது.

மும்பை:

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பாதியிலேயே ஒத்தி வைக்கப்பட்டது. வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இந்த முடிவை எடுத்தது.

இதைத்தொடர்ந்து ஐ.பி.எல். போட்டியில் விளையாடி வந்த வெளிநாட்டு வீரர்களை அவர்களது நாட்டுக்கு கிரிக்கெட் வாரியம் பத்திரமாக அனுப்பி வைத்தது.

இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, வங்காளதேச வீரர்கள் அவர்களது நாடுகளுக்கு திரும்பி இருந்தனர். இந்திய பயணிகள் விமானத்துக்கு ஆஸ்திரேலியாவில் வருகிற 15-ந்தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஐ.பி.எல்.லில் விளையாடிய ஆஸ்திரேலிய வீரர்கள், பயிற்சியாளர்கள், வர்ணணையாளர்கள் என 38 பேர் நாடு திரும்ப முடியாமல் தவித்தனர்.

இதைத்தொடர்ந்து அவர்கள் அனைவரையும் கிரிக்கெட் வாரியம் மாலத்தீவுக்கு அனுப்பி வைத்தது. மாலத்தீவில் அவர்கள் தனிமையில் இருந்த பிறகு தங்களது நாட்டுக்கு திரும்ப முடிவு செய்து இருந்தனர்.

இதற்கிடையே மாலத்தீவில் உள்ள மதுபாரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வீரர் டேவிட் வார்னரும், முன்னாள் வீரரும், டெலிவி‌ஷன் வர்ணனையாளருமான மைக்கேல் சிலாட்டர் சண்டையிட்டுக் கொண்டதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

முதலில் அவர்களுக்குள் வாய் தகராறு ஏற்பட்டது. பின்னர் அது மோதலாக மாறியதாகவும் அந்த தகவல் தெரிவிக்கிறது.

இதை சிலாட்டர் மறுத்துள்ளார். இது முற்றிலும் வதந்தியான தகவல் என்று அவர் தெரித்துள்ளார். இது தொடர்பாக சிலாட்டர் கூறும்போது, ‘நானும் டேவிட் வார்னரும் நல்ல நண்பர்கள். எங்களுக்குள் சண்டை வருவதற்கான வாய்ப்பே இல்லை. இதுமாதிரியான தகவல் எங்கிருந்துதான் வருகிறது என்று தெரிய வில்லை’ என்றார்.

ஐ.பி.எல். போட்டியில் ஐதராபாத் அணியின் தொடர்தோல்வியால் வார்னர் கேப்டன் பதவியை இழந்தார். வில்லியம்சனுக்கு கேப்டன் பதவி வழங்கப்பட்டது.

டெலிவி‌ஷன் வர்ணனையாளரான சிலாட்டர் ஆஸ்திரேலிய பிரதமரை கடுமையாக சாடி இருந்தார். இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமானதை தொடர்ந்து ஆஸ்திரேலியர்கள் இந்தியாவில் இருந்து நாடு திரும்ப பிரதமர் தடை விதித்ததால் அவர் கண்டனம் தெரிவித்து இருந்தார்.

சிலாட்டர் தான் முதலில் மாலத்தீவு சென்றார். அதன்பிறகுதான் மற்ற ஆஸ்திரேலிய குழுவினர் அங்கு சென்றனர். 

Tags:    

Similar News