செய்திகள்
பீட்டர்சன்

தள்ளி வைக்கப்பட்ட ஐ.பி.எல். ஆட்டங்களை இங்கிலாந்தில் நடத்தலாம் - முன்னாள் வீரர் பீட்டர்சன் விருப்பம்

Published On 2021-05-09 04:49 GMT   |   Update On 2021-05-09 04:49 GMT
இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து நீடித்தால் ஐக்கிய அரபு எமிரேட்சில் எஞ்சிய ஆட்டங்களை நடத்த கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.

லண்டன்:

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஐ.பி.எல். 20 ஓவர் போட்டி கடந்த ஆண்டு ஐக்கிய அரபு எமிரேட்சில் நடந்தது.

இந்த ஆண்டுக்கான 14-வது ஐ.பி.எல். போட்டி ரசிகர்கள் இன்றி இந்தியாவிலேயே நடத்தப்பட்டது. சென்னை, மும்பை, டெல்லி, அகமதாபாத், கொல்கத்தா, பெங்களூர் ஆகிய 6 நகரங்களில் ஐ.பி.எல். போட்டி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

கடந்த மாதம் 9-ந்தேதி இந்த போட்டி தொடங்கியது. சென்னை, மும்பையில் போட்டிகள் நடைபெற்று முடிந்தன.

டெல்லி, அகமதாபாத்தில் ஆட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. கொரோனா பாதுகாப்பு வளையத்தில் இருந்த வீரர்கள் பாதிக்கப்பட்டதால் ஐ.பி.எல். போட்டி காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டது.

52 நாட்களுக்கு நடைபெறுவதாக இருந்த ஐ.பி.எல். போட்டியில் 60 ஆட்டங்கள் இடம்பெற்று இருந்தன. ஆனால் 24 நாளில் 29 ஆட்டங்கள் மட்டுமே நடைபெற்றது.

ஐ.பி.எல். போட்டியில் விளையாடிய வீரர்களில் இதுவரை 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதோடு சி.எஸ்.கே. அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக்ஹஸ்சி, பந்துவீச்சு பயிற்சியாளர் எல்.பாலாஜி ஆகியோரும் பாதிப்புக்கு உள்ளாகி இருந்தனர்.

ஐ.பி.எல். போட்டி காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டதால் கிரிக்கெட் வாரியத்துக்கு ரூ.2,500 கோடி இழப்பு ஏற்பட்டது. இதனால் எஞ்சிய ஆட்டங்களை எப்படியாவது நடத்துவது என்பதில் கிரிக்கெட் வாரியம் தீவிரமாக இருக்கிறது.

செப்டம்பர் மாதத்தில் எஞ்சிய ஐ.பி.எல். ஆட்டங்களை நடத்த முடிவு செய்துள்ளது. அதாவது உலக கோப்பைக்கு முன்பு நடத்தி முடிக்க வேண்டும் என்று திட்டமிட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து நீடித்தால் ஐக்கிய அரபு எமிரேட்சில் எஞ்சிய ஆட்டங்களை நடத்த கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.

இதற்கிடையே இங்கிலாந்தில் உள்ள 4 கவுண்டி கிளப்புகளும், இலங்கை கிரிக்கெட் வாரியமும் ஐ.பி.எல். போட்டியை நடத்த விருப்பம் தெரிவித்துள்ளன.

இந்தநிலையில் ஐ.பி.எல். போட்டிகளை இங்கிலாந்தில் நடத்தலாம் என்று அந்நாட்டு முன்னாள் வீரரும் டெலிவி‌ஷன் வர்ணணையாளருமான கெவின் பீட்டர்சன் யோசனை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

ஐக்கிய அரபு எமிரேட்சில் ஐ.பி.எல். எஞ்சிய ஆட்டங்களை நடத்துவது குறித்து பேசிக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் ஐ.பி.எல். போட்டிகளை இங்கிலாந்தில் நடத்த வேண்டும் என்று கருதுகிறேன்.

இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு பிறகு சிறிது இடைவெளி இருக்கிறது. இந்தியா, இங்கிலாந்து அணிகளின் அனைத்து முன்னணி வீரர்களும் இங்கிலாந்தில் இருப்பார்கள். இதனால் செப்டம்பர் இறுதியில் ஐ.பி.எல். போட்டியை நடத்தினால் அற்புதமாக இருக்கும்.

மான்செஸ்டர், லீட்ஸ், பர்மிங்காம், லண்டனில் இரு மைதானங்கள் ஆகியவற்றை பயன்படுத்திக்கொள்ளலாம். ஐ.பி.எல். ஆட்டங்களுக்கு ரசிகர்களை அனுமதிக்கவும் வாய்ப்பு உள்ளது.

லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியாவுக்கு எதிரான 20 ஓவர் போட்டியில் விளையாடி உள்ளேன். இந்திய ரசிகர்களின் ஆரவாரத்தால் வெளிநாட்டில் விளையாடுவதுபோல் இருக்கும். அந்த அளவுக்கு இங்கிலாந்தில் இந்திய வீரர்களுக்கு ஆதரவு இருக்கும்.

இவ்வாறு பீட்டர்சன் கூறியுள்ளார். 

Tags:    

Similar News