செய்திகள்
ஜடேஜா

ஒரே ஓவரில் 36 ரன் எடுத்து சாதனை: ஜடேஜா எப்போதுமே ஆட்டத்தை மாற்றுபவர் - டோனி புகழாரம்

Published On 2021-04-26 05:52 GMT   |   Update On 2021-04-26 05:52 GMT
கிறிஸ் கெய்ல் 2011-ம் ஆண்டில் ஒரே ஓவரில் 36 ரன்கள் எடுத்திருந்த சாதனையை தற்போது சிஎஸ்கே அணியின் ஆல் ரவுண்டர் ஜடேஜா சமன் செய்துள்ளார்.

மும்பை:

ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 69 ரன் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை மிகவும் எளிதாக வீழ்த்தி புள்ளிகள் பட்டியலில் மீண்டும் முதலிடத்தை பிடித்தது.

இந்த போட்டியில் ஜடேஜாவின் ஆல்ரவுண்டர் பணி மிகவும் அபாரமாக இருந்தது. பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங் என 3 துறையிலும் சிறப்பாக செயல்பட்டார்.

5-வது வீரராக களம் இறங்கிய ஜடேஜா 28 பந்தில் 62 ரன் எடுத்தார். இதில் 4 பவுண்டரிகளும், 5 சிக்சர்களும் அடங்கும்.

ஹர்‌ஷல் படேல் வீசிய ஆட்டத்தின் கடைசி ஓவரை ஜடேஜா முற்றிலும் மாற்றினார். அந்த ஓவரில் மட்டும் நோ பால் உட்பட 37 ரன் கிடைத்தது. ஜடேஜா 36 ரன்கள் (6,6,6,6,2,6,4) விளாசி புதிய சாதனை படைத்தார்.

இதற்கு முன்பு கிறிஸ் கெய்ல் 2011-ம் ஆண்டில் ஒரே ஓவரில் 36 ரன்கள் (6,6,4,4,6,6,4) ரன்கள் விளாசினார். அதை ஜடேஜா தற்போது சமன் செய்துள்ளார்.

பேட்டிங்கில் அதிரடியை வெளிப்படுத்திய ஜடேஜா பந்துவீச்சிலும் சாதித்தார். அவர் 13 ரன் கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார். அதிரடி பேட்ஸ்மேன்களான மேக்ஸ்வெல், டிவில்லியர்ஸ் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோரை அவுட் செய்தார்.

அதோடு கிறிஸ்டியனை ரன் அவுட் செய்தார்.

ஜடேஜாவின் ஆட்டத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் டோனி வெகுவாக பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

ஜடேஜா எப்போதுமே ஆட்டத்தை மாற்றுபவர். அவர் தனது சொந்த ஆட்டத்தையே மாற்றக்கூடியவர். ஒருசில ஆண்டுகளாகவே அவர் பேட்டிங்கில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை கொண்டுள்ளார் என்பதை நாங்கள் அறிவோம்.

இவ்வாறு டோனி கூறினார்.

ஆட்ட நாயகன் விருது பெற்ற ஜடேஜா கூறியதாவது:-

பொதுவாக ஆல்ரவுண்டராக இருப்பது கடினமானது. ஏனெனில் அனைத்து பிரிவுகளிலும் சிறந்து விளங்கவேண்டும். பயிற்சியின்போது 3 பிரிவிலும் கவனம் செலுத்த மாட்டேன்.

பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என இதில் ஏதாவது ஒன்றில் மட்டும் பயிற்சி செய்வேன். ஆட்டத்தின் கடைசி ஓவரில் எனக்கு டோனி நம்பிக்கை அளித்தார். ஹர்‌ஷல் படேல் ‘அவுட் சைடு ஆப்’ திசையில்தான் பந்து வீசுகிறார். தைரியமாக விளாசு என்றார்.

அதிர்ஷ்டவசமாக அனைத்தும் சிக்சர்களாக மாறியது. தொடக்கத்தில் நான் கொடுத்த கேட்சை பிடித்திருந்தால் எனது நாளாக அமைந்திருக்காது.

இவ்வாறு அவர் கூறினார்.

சி.எஸ்.கே. 6-வது ஆட்டத்தில் ஐதராபாத்தை 28-ந் தேதி டெல்லியில் எதிர்கொள்கிறது. பெங் களூர் அணி 27-ந் தேதி டெல்லியுடன் (அகமதாபாத்) மோதுகிறது.

ஐ.பி.எல். போட்டியில் சென்னை, மும்பையில் நேற்றுடன் ஆட்டங்கள் முடிந்தது. இனி டெல்லி, அகமதாபாத்தில் போட்டிகள் நடைபெறுகின்றன. 

Tags:    

Similar News