செய்திகள்
மோர்கன் - விராட் கோலி

இந்தியா-இங்கிலாந்து மோதும் முதல் ஒருநாள் போட்டி புனேயில் நாளை நடக்கிறது

Published On 2021-03-22 12:18 IST   |   Update On 2021-03-22 12:18:00 IST
இங்கிலாந்து அணிக்கு எதிராக நாளை நடக்கவுள்ள ஒருநாள் போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி வெற்றியுடன் கணக்கை தொடங்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

புனே:

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

இரு அணிகள் இடையேயான 4 டெஸ்ட் கொண்ட தொடரை 3-1 என்ற கணக்கிலும், 5 ஆட்டம் கொண்ட 20 ஓவர் தொடரை 3-2 என்ற கணக்கிலும் இந்தியா கைப்பற்றியது.

அடுத்து இரு அணிகள் இடையே 3 ஒருநாள் போட்டி தொடர் நடக்கிறது. கடைசி 2 டெஸ்டும், 20 ஓவர் போட்டிகளும் உலகின் மிகப்பெரிய ஸ்டேடியமான அகமதாபாத்தில் நடந்தது. தற்போது 3 ஒருநாள் போட்டிகளும் மராட்டிய மாநிலமபுனேயில் நடத்தப்படுகிறது.

இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் ஒரு நாள் போட்டி புனேயில் நாளை (23-ந் தேதி) நடக்கிறது.

இந்திய அணி இந்த தொடரில் கடைசி 2 ஆட்டத்திலும் வெற்றி பெற்று இருந்தது. இதனால் இங்கிலாந்து அணியை மிகுந்த நம்பிக்கையுடன் எதிர்கொள்ளும். இரு அணிகளும் கடைசியாக 2019 உலக கோப்பையில் மோதின. இதில் இங்கிலாந்து அணி 31 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது.

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மிகவும் நல்ல நிலையில் உள்ளார். அவர் 20 ஓவர் தொடரில் 5 ஆட்டத்தில் 231 ரன்கள் எடுத்தார். இதில் 3 அரை சதம் அடங்கும். அதிக பட்சமாக 80 ரன் குவித்தார்.

இதே போல ரோகித் சர்மா, ரி‌ஷப்பண்ட், ஹர்த்திக் பாண்ட்யா, சூர்யகுமார் யாதவ் ஆகியோரும் பேட்டிங்கில் சிறப்பான நிலையில் உள்ளனர். பந்து வீச்சில் புவனேஷ்வர் குமார், முகமது சிராஜ், நடராஜன், யசுவேந்திர சாஹல் ஆகியோர் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர்கள்.

டெஸ்ட், 20 ஓவர் தொடரை இழந்த இங்கிலாந்து அணி ஒரு நாள் தொடரையாவது கைப்பற்றி பதிலடி கொடுக்க வேண்டும் என்ற வேட்கையில் உள்ளது.

மார்கன் தலைமையிலான இங்கிலாந்து அணியில் பட்லர், பேர்ஸ்டோவ், பென்ஸ்டோக்ஸ், ஜேசன்ராய், மார்க்வுட், மொய்ன்அலி போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.

இரு அணிகளும் நாளை மோதுவது 101-வது ஒருநாள் போட்டியாகும். இதுவரை நடந்த 100 ஆட்டத்தில் இந்தியா 53-ல், இங்கிலாந்து 42-ல் வெற்றி பெற்றுள்ளன. 2 ஆட்டம் டை ஆனது. 3 போட்டி முடிவு இல்லை.

நாளைய ஆட்டம் பகல் இரவாக நடக்கிறது. பிற்பகல் 1.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவி‌ஷனில் இந்த போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

Similar News