செய்திகள்
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான முதல் டெஸ்ட்: வங்காளதேசம் முதல் நாளில் 242/5
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான முதல் டெஸ்டில் வங்காளதேசம் முதல்நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 242 ரன்கள் அடித்துள்ளது.
வங்காளதேசம் - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் சிட்டோகிராமில் உள்ள ஜகுர் அகமது சவுத்ரி மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற வங்காளதேசம் பேட்டிங் தேர்வு செய்தது.
ஷத்மான் இஸ்லாம், தமிம் இக்பால் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். தமிம் இக்பால் 9 ரன்னில் வெளியேறினார். ஆனால் ஷத்மன் இஸ்லாம் அரைசதம் அடித்தார். இருந்தாலும் அவர் 59 ரன்னில் வெளியேறினார்.
அதன்பின் வந்த மொமினுல் ஹக் (26), முஷ்பிகுர் ரஹிம் (38), நஜ்முல் ஹொசைன் ஷான்டோ (25) சீரான இடைவெளியில் வெளியேறினர்.
6-வது விக்கெட்டுக்கு ஷாகிப் அல் ஹசன் உடன் லித்தோன் தாஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 49 ரன்கள் சேர்த்து முதல்நாள் ஆட்டம் முடியும் வரை மேலும் விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டது.
இதனால் வங்காளதேசம் முதல் நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 242 ரன்கள் எடுத்துள்ளது. ஷாகிப் அல் ஹசன் 39 ரன்களுடனும், லித்தோன் தாஸ் 34 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் ஜோமெல் வாரிகன் 3 விக்கெட் வீழ்த்தினார்.