செய்திகள்
பஞ்சாப் கேப்டன் ராகுல்

அடுத்த போட்டிகளிலும் வெற்றிபெற நாங்கள் கடுமையாக போராடுவோம் - பஞ்சாப் கேப்டன் கேஎல் ராகுல்

Published On 2020-10-27 09:05 GMT   |   Update On 2020-10-27 09:05 GMT
கொல்கத்தா அணிக்கு எதிரான வெற்றி கூட்டு முயற்சியால் கிடைத்தது என்று பஞ்சாப் அணியின் கேப்டன் கேஎல் ராகுல் தெரிவித்துள்ளார்.
சார்ஜா:

ஐ.பி.எல். போட்டியில் பஞ்சாப் அணி கொல்கத்தாவை வீழ்த்தி தொடர்ச்சியாக 5-வது வெற்றியை பெற்றது.

சார்ஜாவில் நடந்த 46-வது லீக் ஆட்டத்தில் முதலில் விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 149 ரன்னே எடுக்க முடிந்தது.

சுப்மன்கில் அதிகபட்சமாக 45 பந்தில் 57 ரன்னும் (3 பவுண்டரி, 4 சிக்சர்), கேப்டன் மார்கன் 25 பந்தில் 40 ரன்னும் (5 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர். முகமது ‌ஷமியின் பந்துவீச்சு மிகவும் அபாரமாக இருந்தது. அவர் 3 விக்கெட்டும், ரவிபிஷ்னோய், ஜோர்டான் தலா 2 விக்கெட்டும், மேக்ஸ்வெல், முருகன் அஸ்வின் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

பின்னர் விளையாடிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 18.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 150 ரன் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

தொடக்க வீரர் மன்தீப் சிங் 56 பந்தில் 66 ரன்னும் (8 பவுண்டரி, 2 சிக்சர்), கிறிஸ் கெய்ல் 29 பந்தில் 51 ரன்னும் (2 பவுண்டரி, 5 சிக்சர்) எடுத்தனர். வருண் சக்ரவர்த்தி, பெர்குசன் தலா 1 விக்கெட் கைப்பற்றினார்கள்.

பஞ்சாப் அணி தொடர்ச்சியாக 5-வது வெற்றியை பெற்று முத்திரை பதித்தது. ஒட்டுமொத்தத்தில் அந்த அணிக்கு கிடைத்த 6-வது வெற்றி இதுவாகும். இதன் மூலம் பஞ்சாப் அணி 5-வது இடத்தில் இருந்து 4-வது இடத்துக்கு முன்னேறியது.

இந்த வெற்றி குறித்து பஞ்சாப் அணியின் கேப்டன் லோகேஷ் ராகுல் கூறியதாவது:-

நான் மிகவும் சந்தோசத்தில் இருக்கிறேன். கூட்டு முயற்சியால் இந்த வெற்றி கிடைத்தது. வீரர்கள் மட்டுமின்றி அணியில் உள்ள பயிற்சியாளர் கும்ப்ளே, ஜான்டிரோட்ஸ், வாசிம்ஜாபர் உள்ளிட்ட எல்லோரது பங்களிப்பும் இதில் இருக்கிறது. அவர்கள் பின்னால் இருந்து செய்யும் பணிகள் சிறப்பானது.

அடுத்த போட்டியிலும் நாங்கள் சிறப்பாக விளையாடி வெற்றிபெற கடுமையாக போராடுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 6-வது தோல்வியை தழுவியது. இதனால் அந்த அணி 4-வது இடத்தில் இருந்து 5-வது இடத்துக்கு பின்தங்கியது.

தோல்வி குறித்து கொல்கத்தா அணி கேப்டன் மார்கன் கூறும்போது, ‘தொடக்கத்திலேயே விக்கெட் சரிந்துவிட்டது. நல்ல பார்ட்னர்ஷிப் அமையாதது ஏமாற்றமே. இன்னும் கூடுதலாக 35 முதல் 40 ரன் எடுத்திருக்க வேண்டும். விக்கெட் சரிந்ததால் ஒன்றும் செய்யமுடியாமல் போய்விட்டது. நாங்கள் மீண்டும் நல்ல நிலைக்கு திரும்புவோம்’ என்றார்.

பஞ்சாப் அணி 13-வது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 30-ந்தேதி அபுதாபியில் எதிர்கொள்கிறது. கொல்கத்தா அணி அடுத்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்சை 29-ந்தேதி சந்திக்கிறது.
Tags:    

Similar News