செய்திகள்
3 விக்கெட் வீழ்த்திய முகமது ஷமி

பஞ்சாப் அணிக்கு 150 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது கொல்கத்தா

Published On 2020-10-26 16:05 GMT   |   Update On 2020-10-26 16:05 GMT
டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்ப ஷுப்மான் கில் சிறப்பாக விளையாடி அரைசதம் அடிக்க பஞ்சாப் அணிக்கு 150 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது கொல்கத்தா.
ஐபிஎல் தொடரின் 46-வது லீக் ஆட்டம் ஷார்ஜாவில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற கிங்ஸ் லெவன்  பஞ்சாப் அணி கேப்டன் கேஎல் ராகுல் பந்து வீச்சை தேர்வை செய்தார். அதன்படி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஷுப்மான் கில், நிதிஷ் ராணா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

முதல் ஓவரை மேக்ஸ்வெல் வீசினார். 2-வது பந்திலேயே நிதிஷ் ராணா ரன்ஏதும் எடுக்காமல் வெளியேறினார். அடுத்து வந்த ராகுல் திரிபாதி 7 ரன்னிலும், தினேஷ் கார்த்திக் ரன்ஏதும் எடுக்காமலும் முகமது ஷமி பந்தில் அடுத்தடுத்து வெளியேறினர். இதனால் கொல்கத்தா 10 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டை இழந்து தடுமாறியது.

4-வது விக்கெட்டுக்கு ஷுப்மான் கில் உடன் கேப்டன் மோர்கன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அதிரடியாக விளையாடியது இதனால் ஜெட் வேகத்தில் ரன் உயர்ந்தது.

இருவரும் விளையாடியதை பார்க்கும்போது கொல்கத்தா 200 ரன்களுக்கு மேல் குவிக்கும் போல் இருந்தது. அணியின் ஸ்கோர் 9.5 ஓவரில் 91 ரன்கள் இருக்கும் இருக்கும்போது மோர்கன் 25 பந்தில் 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.



அதன்பின் முருகன் அஸ்வின், ரவி பிஷ்னோய் சுழற்பந்து வீச்சில் மாயாஜாலம் காட்ட கொல்கத்தாவின் ரன் அப்படியே படுத்து விட்டது.

சுனில் நரைன் 6, நாகர்கோட்டி 6, கம்மின்ஸ் 1, வருண் சக்ரவர்த்தி 2 என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதற்கிடையில் ஷுப்மான் கில் அரைசதம் அடித்து 45 பந்தில் 57 ரன்களில் ஆட்டமிழக்க, லூக்கி பெர்குசன் 13 பந்தில் 24 ரன்கள் அடிக்க கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்களே எடுத்தது.

பஞ்சாப் அணி சார்பில் முகமது ஷமி 3 விக்கெட்டும் பிஷ்னோய், முருகன் அஸ்வின் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
Tags:    

Similar News