செய்திகள்
எம்எஸ் டோனி

மீண்டும் அதே தவறுகளை செய்கிறோம்- தோல்வி குறித்து டோனி வேதனை

Published On 2020-10-03 05:51 GMT   |   Update On 2020-10-03 05:51 GMT
ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அடைந்த தோல்வி குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் எம்எஸ் டோனி வேதனை தெரிவித்துள்ளார்.
துபாய்:

ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐதராபாத்திடம் வீழ்ந்து ஹாட்ரிக் தோல்வியை தழுவியது.

துபாயில் நடந்த 14-வது லீக் ஆட்டத்தில் முதலில் விளையாடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 164 ரன் எடுத்தது.

19 வயது வீரரான பிரியம் கார்க் 26 பந்தில் 51 ரன்னும் (6 பவுண்டரி, 1 சிக்சர்), அபிஷேக் சர்மா 24 பந்தில் 31 ரன்னும் (4 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். தீபக் சாஹர் 2 விக்கெட்டும், ‌ஷர்துல் தாகூர், பியூஸ் சாவ்லா தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

பின்னர் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 157 ரன் எடுத்தது. இதனால் சி.எஸ்.கே. அணி 7 ரன்னில் தோற்றது.

ஜடேஜா 35 பந்தில் 50 ரன்னும் (5 பவுண்டரி, 2 சிக்சர்), கேப்டன் டோனி 36 பந்தில் 47 ரன்னும் (4 பவுண்டரி, 1 சிக்சர்)எடுத்தனர். தமிழகத்தைச் சேர்ந்த டி. நடராஜன் 2 விக்கெட்டும், புவனேஷ்வர் குமார், அப்துல் சமத் தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

சென்னை அணி தொடர்ந்து 3-வது தோல்வியை தழுவியது. தொடக்க ஆட்டத்தில் மும்பை இந்தியன்சை வீழ்த்தி இருந்தது. 2-வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்சிடம் 16 ரன்னிலும், 3-வது ஆட்டத்தில் டெல்லியிடம் 44 ரன்னிலும் தோற்றது.

ஐதராபாத்திடம் ஏற்பட்ட தோல்வி குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் டோனி கூறியதாவது:-

என்னால் நிறைய பந்துகளை சரியாக ஆட முடியவில்லை. பந்தை அடித்து ஆட வேண்டும் என்ற முடிவினால் இப்படி ஆகியிருக்கலாம். ஆடுகளம் மந்தமாக இருக்கும்போது பந்தை நேரம் எடுத்துக் கொண்டு ஆடுவதுதான் சிறந்தது.

நாங்கள் நிறைய வி‌ஷயங்களை சரி செய்ய வேண்டி உள்ளது. கேட்ச்களை தவறு விடுவது, நோ-பால் வீசுவது ஆகியவை நல்லது அல்ல. இவையெல்லாம் நம்மால் கட்டுப்படுத்தக் கூடியவைதான்.

நாங்கள் அதே தவறை மீண்டும் செய்கிறோம். 16-வது ஓவருக்கு பிறகு 2 ஓவர் மோசமாக இருந்தது. ஒட்டுமொத்தமாக ஆட்டத்தில் இன்னும் மேம்பட வேண்டும்.

இந்த சூழ்நிலையில் எனக்கு தொண்டை வறண்டு விடுகிறது. இதனால் இருமல் வருகிறது. இவை அறிகுறியாக இருக்கும்போது, நாம் நேரம் எடுத்து கொண்டு ஆடுவது நல்லதுதான். மற்றபடி நான் ஆரோக்கியமாகவே இருக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஐதராபாத் அணி 2-வது வெற்றியை பெற்றது. இந்த வெற்றி குறித்து அந்த அணி கேப்டன் வார்னர் கூறும்போது, இந்த ஆடுகளத்தில் 150 ரன்னுக்கு மேல் நல்ல ஸ்கோராகும். எங்களது பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். ஆனால் இது ஒரு மோசமான ஆடுகளம் என்றார்.

சென்னை அணி 5-வது ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்பை நாளை (4-ந் தேதி) துபாயில் சந்திக்கிறது. சன்ரைசர்ஸ் ஐதராபாத்தும் அதே தினத்தில் மும்பையை எதிர்கொள்கிறது.
Tags:    

Similar News