செய்திகள்
ஷேன் வாட்சன்

துபாய் சென்றடைந்த வாட்சன் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டார்

Published On 2020-08-22 16:05 IST   |   Update On 2020-08-22 16:05:00 IST
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடுவதற்காக துபாய் சென்றுள்ள வாட்சன் புர்ஜ் கலிஃபா ஓட்டலில் தனிமைப்படுத்திக் கொண்டார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19-ந்தேதி முதல் நவம்பர் 10-ந்தேதி வரை ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது.

இதற்காக ஒவ்வொரு அணிகளும் துபாய் சென்று கொண்டிருக்கின்றன. வெளிநாட்டைச் சேர்ந்த வீரர்கள் அவர்கள் நாடுகளில் இருந்து நேரடியாக துபாய் வந்து விடுவார்கள்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் நேற்று சென்னையில் இருந்து புறப்பட்டுச் சென்றார்கள். துபாய் சென்றதும் அவர்கள் கட்டாயம் 7 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். அதன்பின் அவர்களுக்கு கொரோனா டெஸ்ட் பரிசோதனை மேற்கொள்ளப்படும். நெகட்டிவ் முடிவு வந்தபின் அணியாக ஒன்று சேர்ந்து பயிற்சி மேற்கொள்வார்கள்.

சென்னை அணியின் ஆல்-ரவுண்டரான ஆஸ்திரேலியாவின் ஷேன் வாட்சன் நேற்று துபாய் சென்றடைந்துள்ளார். அங்குள்ள புகழ்பெற்ற புர்ஜ் கலிஃபாயில் உள்ள அறை ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

இதுகுறித்து வாட்சன் வெளியிட்டுள்ள வீடியோ செய்தியில் ‘‘நான் சில உடற்பயிற்சிகளை செய்ய இருக்கிறேன். அறைகளில் மேலும் கீழும் இறங்கி பயிற்சி மேற்கொண்டு சிஎஸ்கே பயிற்சிக்காக தயாராகிக் கொண்டிருக்கிறேன். ஐபிஎல் தொடருக்காக மீண்டும் ஒருமுறை வந்துள்ளது மூலம் மகிழ்ச்சி அடைகிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

ஷேன் வாட்சன் வெளியிட்டுள்ள வீடியோவை ரீ-டுவீட் செய்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் ‘‘வாட்சன் 7-உடன் இன்னிங்சை தொடங்குவார்’’ என்று அதில் தெரிவித்துள்ளது.

Similar News