செய்திகள்
சவுரவ் கங்குலி

இந்தியாவில் அடுத்த ஆண்டுதான் சர்வதேச கிரிக்கெட்: பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி

Published On 2020-08-22 09:51 GMT   |   Update On 2020-08-22 09:51 GMT
இந்திய அணி ஆஸ்திரேலியா சென்று நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும் என சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதத்தில் இருந்து இந்தியாவில் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறாமல் உள்ளன. உள்ளூர் போட்டிகளும் நடைபெறவில்லை.

உள்ளூர் போட்டிகள் எப்போது நடைபெறும், சர்வதேச போட்டிகள் இந்தியாவில் எப்போது ஆரம்பிக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

இந்தியாவில் தற்போது கிரிக்கெட் போட்டியை நடத்துவதற்கான சூழ்நிலை ஏற்படவில்லை. ஐபிஎல் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் அடுத்த மாதம் 19-ந்தேதி முதல் நவம்பர் மாதம் 10-ந்தேதி வரை நடக்கிறது. அதன்பின் ஆஸ்திரேலியா சென்று நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா விளையாடுகிறது. டிசம்பர் மாதம் இந்தத் தொடர் நடக்கிறது. இதுதான் இந்தியா கொரோனா வைரஸ் காலத்திற்குப் பிறகு விளையாடும் முதல் சர்வதேச கிரிக்கெட் தொடர் ஆகும். அதன்பின் இந்திய அணி சொந்த நாடு திரும்புகிறது.

அதன்பின் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இங்கிலாந்து அணி இந்தியா வந்து ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்தியாவில் நடைபெறும் முதல் சர்வதேச போட்டி இதுவாகும்.

அதன்பின் ஐபிஎல் போட்டி நடக்கும். 2023 உலக கோப்பை இந்தியாவில் நடைபெறும் என பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த வருடத்திற்குள் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளை நடத்த வாய்ப்புள்ளது என கிரிக்கெட் சங்கங்களுக்கு பிசிசிஐ கடிதம் அனுப்பி உள்ளது.

அந்தக் கடிதத்தில் பிசிசிஐ தலைவர் கங்குலி‘‘உள்ளூர் கிரிக்கெட் போட்டியை நடத்துவதற்கான அனைத்து முயற்சிகளும் நடைபெற்று வருகிறது. சூழ்நிலை சரியாக வரும்போது போட்டி நடத்தப்படும். வீரர்களின் உடல்நிலை, பாதுகாப்பு, மேலும் சில விஷயங்கள் உள்ளூர் கிரிக்கெட் போட்டியின் போது முக்கியமானது. தொடர்ச்சியாக நாங்கள் அதை கண்காணித்து வருகிறோம்.

உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள் தொடங்கும்முன் எதிர்கால திட்டம் குறித்து முறையாக அறிவிக்கப்படும். அடுத்த சில மாதங்களில் கொரோனாவில் இருந்து விடுபடுவோம், உள்ளூர் கிரிக்கெட் சிறந்த பாதுகாப்பு, சுகாதாரச் சூழ்நிலையில் நடைபெறும் என்று நம்புவோம்’’ என்று  குறிப்பிட்டுள்ளார்.
Tags:    

Similar News