செய்திகள்
இந்திய கிரிக்கெட் வீரர் தோனி

இந்திய கிரிக்கெட் வீரர் தோனியின் சாதனைகளும், விருதுகளும்...

Published On 2020-08-15 16:30 GMT   |   Update On 2020-08-15 16:30 GMT
இந்திய கிரிக்கெட் வீரர் தோனி கடந்த காலத்தில் மேற்கொண்ட சாதனைகள் மற்றும் பெற்ற விருதுகள் பற்றிய விவரங்களை காணலாம்.
புதுடெல்லி:

இந்திய கிரிக்கெட் வீரர் எம்.எஸ். தோனி கடந்த 2004ம் ஆண்டு வங்காளதேசத்திற்கு எதிராக நடந்த ஒரு நாள் போட்டியில் இந்தியாவுக்காக முதன்முறையாக விளையாட தொடங்கினார்.

அதன்பின்னர் கடந்த 2005ம் ஆண்டில் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதன்முறையாக விளையாடினார்.

ராகுல் டிராவிட் தலைமையில் செயல்பட்ட இந்திய கிரிக்கெட் அணிக்கு கடந்த 2007ம் ஆண்டு தோனி கேப்டனானார்.  9 ஆண்டுகளாக ஒரு நாள் போட்டிக்கான கேப்டனாகவும், 6 ஆண்டுகளாக டெஸ்ட் போட்டி கேப்டனாகவும் அவர் செயல்பட்டு அணிக்கு பெருமை தேடி தந்துள்ளார்.

இவரது தலைமையிலான அணி, கடந்த 2007ம் ஆண்டில் ஐ.சி.சி. உலக கோப்பை 20 ஓவர் போட்டியில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.  பின்னர் கடந்த 2010 மற்றும் 2016ம் ஆண்டுகளில் நடந்த ஆசிய கோப்பை போட்டிகளிலும், கடந்த 2011ம் ஆண்டில் நடந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டியிலும் சாம்பியன் பட்டம் பெற்றது.

2013ம் ஆண்டில் ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கோப்பைக்கான போட்டியிலும் டோனி தலைமையிலான இந்திய அணி வெற்றி பெற்றது.

இதனால் ஐ.சி.சி.யின் 3 நிலைகளிலான (உலக கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி மற்றும் 20 ஓவர் உலக கோப்பை) போட்டிகளிலும் வென்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

கடந்த 2011ம் ஆண்டு லெப்டினென்ட் கர்னல் என்ற ராணுவத்தின் உயரிய அந்தஸ்து இவருக்கு வழங்கப்பட்டது.  கபில்தேவுக்கு பின்னர் இந்த பெருமையை பெற்ற 2வது கிரிக்கெட் வீரர் தோனியாவார்.

இந்திய அணியின் சாதனை கேப்டனாக விளங்கிய எம்.எஸ். தோனி கடந்த 2015ம் ஆண்டு நடந்த உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில் இந்தியா தோல்வியடைந்தபோது கடும் விமர்சனத்திற்கு ஆளானார்.  இதன்பின்னர் கடந்த 2017ம் ஆண்டு ஒரு நாள்  போட்டியின் கேப்டன் பதவியில் இருந்து அவர் விலகினார்.

சிறந்த விக்கெட் கீப்பராகவும் செயல்பட்ட தோனியின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு, எம்.எஸ். தோனி த அன்டோல்டு ஸ்டோரி என்ற பெயரில் இந்தி படம் ஒன்று தயாரானது.  இதன் 2ம் பாகம் உருவாக திட்டமிடப்பட்ட நிலையில், அந்த படத்தின் நாயகன் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்து கொண்டார்.  இதனால் இந்த முயற்சி கைவிடப்பட்டது.

கடந்த 2019ம் ஆண்டிலேயே அவர் ஓய்வு பெற போகிறார் என தகவல்கள் வெளிவந்தன.  ஆனாலும், இதற்கு அவரது மனைவி சாக்சி மறுப்பு தெரிவித்து டுவிட்டரில் கண்டனமும் வெளியிட்டார்.  இதனால் அந்த தகவல் புரளியானது.

இந்தியாவில் விளையாட்டில் சாதனை புரிந்தோருக்காக வழங்கப்படும் மிக உயரிய கேல் ரத்னா விருது 2007-2008ம் ஆண்டுக்காக தோனிக்கு வழங்கப்பட்டது.  இதன்பின்னர் கடந்த 2009ம் ஆண்டில் பத்மஸ்ரீ விருதும், 2018ம் ஆண்டில் பத்ம பூஷண் விரும் வழங்கி அவர் கவுரவிக்கப்பட்டார்.

இதுதவிர கடந்த 2011ம் ஆண்டு மான்ட்போர்டு பல்கலைகக்கழகம் அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்தது.

இந்நிலையில், சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் அறிவிப்பு வெளியிட்டு ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளார்
Tags:    

Similar News