செய்திகள்
உமர் அக்மல்

சூதாட்ட புகார்: பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் உமர் அக்மலின் தண்டனை குறைப்பு

Published On 2020-07-30 03:14 GMT   |   Update On 2020-07-30 03:14 GMT
சூதாட்ட புகாருக்கு ஆளான, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் உமர் அக்மலின் தண்டனை குறைக்கப்பட்டது.
கராச்சி:

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேனான உமர் அக்மலை, இந்த ஆண்டு தொடக்கத்தில் நடந்த பாகிஸ்தான் சூப்பர் லீக் 20 ஓவர் போட்டியின்போது சூதாட்ட தரகர்கள் தொடர்பு கொண்டு சூதாட்டத்துக்கு ஒத்துழைப்பு அளிக்கும்படி ஆசைவார்த்தை கூறியதை அவர் கிரிக்கெட் வாரியத்துக்கு தெரிவிக்கவில்லை.

இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய ஊழல் தடுப்பு பிரிவினர் விசாரணை நடத்தியபோது சூதாட்ட தரகர்கள் தன்னை 2 முறை அணுகியதை அவர் ஒப்புக்கொண்டார். இதையடுத்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உமர் அக்மலுக்கு 3 ஆண்டுகள் விளையாட தடை விதித்து கடந்த ஏப்ரல் மாதம் நடவடிக்கை எடுத்தது.

தடையை எதிர்த்து உமர் அக்மல் அப்பீல் செய்து இருந்தார். இந்த மனுவை விசாரித்த ஓய்வு பெற்ற நீதிபதி பாகிர் முகமது கோக்ஹர், உமர் அக்மலுக்கு விதிக்கப்பட்டு இருந்த 3 ஆண்டு கால தடையை 18 மாதங்களாக குறைத்து நேற்று உத்தரவிட்டார். கருணையின் அடிப்படையில் இந்த தண்டனை குறைப்பு செய்யப்பட்டு இருப்பதாக நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து உமர் அக்மல் கூறுகையில், ‘எனக்கு முன்பு பல வீரர்கள் இதுபோல் சூதாட்ட புகாரில் சிக்கி இருக்கிறார்கள். ஆனால் யாருக்கும் என்னை போல் கடுமையான தண்டனை அளிக்கப்படவில்லை. எனது தண்டனையை மேலும் குறைக்க வேண்டும் என்று மீண்டும் அப்பீல் செய்வேன்’ என்றார். 30 வயதான அக்மல் பாகிஸ்தான் அணிக்காக 16 டெஸ்ட், 121 ஒருநாள் மற்றும் 84 இருபது ஓவர் போட்டியில் விளையாடி இருக்கிறார்.

Tags:    

Similar News