செய்திகள்
ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்

ஆசிய சாம்பியன்ஷிப் குத்துச்சண்டை நவம்பர்- டிசம்பரில் நடைபெறும்: இந்தியா நம்பிக்கை

Published On 2020-04-13 21:25 IST   |   Update On 2020-04-13 21:25:00 IST
கொரோனா வைரஸ் தொற்று கட்டுக்குள் வந்து ஆசிய சாம்பியன்ஷிப் குத்துச்சண்டை இந்தியாவில் நடைபெறும் என இந்திய குத்துச்சண்டை பெடரேசன் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உலகளவிலான அனைத்து விளையாட்டுப் போட்டிகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இனிமேல் விளையாட்டு போட்டிகள் எப்போது தொடங்கும் என்று யாருக்கும் தெரியாத நிலை உள்ளது.

இந்நிலையில் நவம்பர்-டிசம்பர் மாதம் நடத்த திட்டமிள்ள ஆசிய சாம்பியன்ஷிப் குத்துச்சண்டை இந்தியாவில் நடக்கும் என்று இந்திய குத்துச்சண்டை பெடரேசன் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இந்திய குத்துச்சண்டை பெடரேசனின் நிர்வாக இயக்குனர் ஆர்.கே. சாசேத்ரி இதுகுறித்து கூறுகையில் ‘‘ஆசிய குத்துச்சண்டை கூட்டமைப்பு கூட்டத்திற்குப்பின் கடந்த பிப்ரவரி மாதம் ஆசிய சாம்பியன்ஷிப் குத்துச்சண்டையை நடத்த அனுமதி பெற்றோம். இந்தத் தொடர் நவம்பர் - டிசம்பர் மாதத்தில் நடைபெற இருக்கிறது. எந்த நகரில் நடைபெறும் என்பது கொரோனா வைரஸ் தொற்று கட்டுக்குள் வந்த பின்னர் முடிவு செய்யப்படும்.

தற்போது மிகவும் கடினமான காலக்கட்டத்தில் இருக்கிறோம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், ஜூன் மாதத்திற்குள் கட்டுக்குள் வந்துவிடும் என நாம் எல்லோரும் நம்புகிறோம். அதன்பின் நான்கு மாதங்களில் அனைத்து நடவடிக்கைகளும் இயல்பு நிலைக்கு வந்துவிடும்’’ என்றார்.

இந்தியா 1980-ம் ஆண்டு மும்பையில் ஆசிய சாம்பியன்ஷிப் குத்துச்சண்டையை நடத்தியது, பெண்களுக்கான ஆசிய சாம்பியன்ஷிப்பை 2003-ல் ஹிசாரில் நடத்தியது. கடந்த ஆண்டில் இருந்து ஆண்கள், பெண்களுக்கான தொடர் சேர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.

Similar News