செய்திகள்

இலங்கை மோசமான தோல்வி - 366 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி

Published On 2019-02-04 07:36 GMT   |   Update On 2019-02-04 07:36 GMT
ஆஸ்திரேலிய வீரர்களின் அபாரமான பந்துவீச்சால் இலங்கை அணி 366 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை சந்தித்தது.
கான்பெரா:

ஆஸ்திரேலியா- இலங்கை அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கான்பெராவில் நடந்தது.

ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 5 விக்கெட் இழப்புக்கு 534 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய இலங்கை அணி 215 ரன்னில் ‘ஆல் அவுட்’ ஆனது.

319 ரன்கள் முன்னிலையில் ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சை விளையாடியது. அந்த அணி 3 விக்கெட் இழப்புக்கு 196 ரன் எடுத்து டிக்ளேர் செய்தது. இதனால் இலங்கைக்கு 516 ரன் நிர்ணயிக்கப்பட்டது.

இலங்கை அணி நேற்றைய 3-வது நாள் ஆட்டத்தின் முடிவில் விக்கெட் இழப்பின்றி 17 ரன் எடுத்து இருந்தது. இன்று 4-வது நாள் ஆட்டம் நடந்தது. வெற்றிக்கு மேலும் 499 ரன் தேவை. கைவசம் 10 விக்கெட் என்ற நிலையில் இலங்கை தொடர்ந்து விளையாடியது.

ஆஸ்திரேலிய வீரர்களின் அபாரமான பந்துவீச்சால் அந்த அணி நிலை குலைந்தது. இலங்கை அணி 51 ஓவர்களில் 149 ரன்னில் சுருண்டது.

இதனால் ஆஸ்திரேலியா 366 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மெண்டீஸ் அதிகபட்சமாக 42 ரன் எடுத்தார். ஸ்டார்க் 5 விக்கெட்டும், கும்மின்ஸ் 3 விக்கெட்டும் எடுத்தனர்.

இந்த டெஸ்டில் ஸ்டார்க்கின் பந்துவீச்சு மிகவும் அபாரமாக இருந்தது. அவர் மொத்தம் 10 விக்கெட் வீழ்த்தினார்.

இந்த வெற்றிமூலம் ஆஸ்திரேலியா 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. பிரிஸ்பேனில் நடந்த முதல் டெஸ்டில் அந்த அணி இன்னிங்ஸ் மற்றும் 40 ரன்னில் வெற்றி பெற்று இருந்தது. #SLvAUS
Tags:    

Similar News