செய்திகள்

அடிலெய்டு டெஸ்ட்: புஜாரா, ரகானே அரைசதத்தால் வலுவான நிலையில் இந்தியா

Published On 2018-12-09 03:00 GMT   |   Update On 2018-12-09 03:23 GMT
அடிலெய்டில் நடைபெற்று வரும் முதல் டெஸ்டில் புஜாரா மற்றும் ரகானே ஆகியோரின் அரைசதத்தால் இந்தியா வலுவான முன்னிலைப் பெற்றுள்ளது. #AUSvIND
ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் அடிலெய்டில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா முதல் இன்னிங்சில் 250 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா 235 ரன்னில் சுருண்டது.

15 ரன்கள் முன்னிலையுடன் இந்தியா 2-வது இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் இந்தியா 3 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்திருந்தது. புஜாரா 40 ரன்னுடனும், ரகானே 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இன்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். புஜாரா 140 பந்தில் அரைசதம் அடித்தார். மறுமுனையில் ரகானே நம்பிக்கையுடன் விளையாடினார். இதனால் இந்தியாவின் ஸ்கோர் சீராக உயர்ந்து கொண்டே வந்தது.

இந்தியாவின் ஸ்கோர் 234 ரன்னாக இருக்கும்போது இந்த ஜோடி பிரிந்தது. புஜாரா 204 பந்தில் 71 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். புஜாரா - ரகானே ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 87 ரன்கள் சேர்த்தது. அடுத்து ரோகித் சர்மா களம் இறங்கினார். இவர் 1 ரன் எடுத்த நிலையில் நாதன் லயன் பந்தில் ஆட்டமிழந்தார்.



அடுத்து ரகானே உடன் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் ஜோடி சேர்ந்தார். ரகானே 111 பந்தில் அரைசதம் அடித்தார். இந்திய அணி 4-வது நாள் மதிய உணவு இடைவேளை வரை 5 விக்கெட் இழப்பிற்கு 260 ரன்கள் சேர்த்தது. ரகானே 57 ரன்களுடனும், ரிஷப் பந்த் 10 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். அப்போது இந்தியா 275 ரன்கள் முன்னிலைப் பெற்று வலுவான நிலையில் இருந்தது.

மதிய உணவு இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கியதும் ரிஷப் பந்த் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். நாதன் லயன் ஓவரில் மூன்று பவுண்டரிகள், ஒரு சிக்ஸ் விளாசினார். ஆனால் லயன் வீசிய அடுத்த ஓவரில் ஆட்டமிழந்தார். அவர் 16 பந்தில் 28 ரன்கள் சேர்த்தார்.

7-வது விக்கெட்டுக்கு ரகானே உடன் அஸ்வின் ஜோடி சேர்ந்தார். இந்தியா 98 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 285 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
Tags:    

Similar News