செய்திகள்

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் கண்ணோட்டம்

Published On 2018-10-03 07:09 GMT   |   Update On 2018-10-03 07:21 GMT
இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இதுவரை மோதியுள்ள டெஸ்ட் ஆட்டங்கள் குறித்து சில விவரங்களை காண்போம். #INDvWI
இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையே இதுவரை 22 டெஸ்ட் தொடர் நடைபெற்றுள்ளது. இதில் இந்தியா 8 டெஸ்ட் தொடரையும், வெஸ்ட்இண்டீஸ் 12 தொடரையும் வென்றுள்ளன. 2 டெஸ்ட் தொடர் சம நிலையில் முடிந்தது.

வெஸ்ட்இண்டீசுக்கு எதிராக கடைசியாக விளையாடிய 6 டெஸ்ட் தொடரையும் (2002-2016) இந்திய அணியே கைப்பற்றி வலுவானதாக இருக்கிறது. இதில் 3 தொடர் சொந்த மண்ணிலும், 3 தொடர் வெஸ்ட்இண்டீசிலும் நடந்தவையாகும். வெஸ்ட்இண்டீஸ் அணி இந்தியாவில் 11 டெஸ்ட் தொடரில் விளையாடி உள்ளது. இதில் இந்தியா 4-ல், வெஸ்ட்இண்டீஸ் 5-ல் வெற்றி பெற்றன. 1983-ம் ஆண்டுக்கு பிறகு அந்த அணி இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றது கிடையாது.

இரு அணிகளும் 94 டெஸ்டில் மோதியுள்ளன. இதில் இந்தியா 18-ல், வெஸ்ட்இண்டீஸ் 30-ல் வெற்றி பெற்றுள்ளன. 46 டெஸ்ட் ‘டிரா’ ஆனது.

இந்திய அணி 1979-ம் ஆண்டு கான்பூர் மைதானத்தில் 7 விக்கெட் இழப்புக்கு 644 ரன் குவித்ததே அதிகபட்ச ஸ்கோராக இருக்கிறது. வெஸ்ட்இண்டீஸ் டெல்லியில் 8 விக்கெட் இழப்புக்கு 644 ரன் (1959) குவித்து இருந்தது.

இந்திய அணி 1987-ம் ஆண்டு டெல்லியில் 75 ரன்னில் சுருண்டதே குறைந்தபட்ச ஸ்கோராகும். வெஸ்ட்இண்டீஸ் அணியின் குறைந்தபட்ச ஸ்கோர் 103 ரன் ஆகும்.

கவாஸ்கர் 27 டெஸ்டில் விளையாடி 2749 ரன் எடுத்து முதல் இடத்தில் உள்ளார். அதிகபட்சமாக 236 ரன் குவித்துள்ளார். கிளைவ் லாயிட் 2344 ரன்னும், சந்தர்பால் 2171 ரன்னும், டிராவிட் 1978 ரன்னும், விவியன் ரிச்சர்ட்ஸ் 1927 ரன்னும் எடுத்துள்ளனர்.

ரோகன் கசாய் (வெஸ்ட்இண்டீஸ்) 1958-ம் ஆண்டு கொல்கத்தாவில் 256 ரன் குவித்ததே ஒரு இன்னிங்சில் அதிகபட்ச ரன் ஆகும். கவாஸ்கர் அதிகபட்சமாக 13 சதம் எடுத்துள்ளார். சோபர்ஸ், ரிச்சர்ட்ஸ் தலா 8 செஞ்சூரி அடித்துள்ளனர்.

கபில்தேவ் 89 விக்கெட் (25 டெஸ்ட்) கைப்பற்றி முதல் இடத்தில் உள்ளார். மால்கம் மார்‌ஷல் 76 விக்கெட்டும், கும்ப்ளே 74 விக்கெட்டும், வெங்கட்ராகவன் 68 விக்கெட்டும், ஆன்டி ராபர்ட்ஸ் 67 விக்கெட்டும் கைப்பற்றி உள்ளனர்.

கபில்தேவ் 83 ரன் கொடுத்து 9 விக்கெட் கைப்பற்றியது ஒரு இன்னிங்சின் (அகமதாபாத், 1983) சிறந்த பந்துவீச்சு ஆகும். ஒரு டெஸ்ட்டில் அதிகபட்சமாக நரேந்திர ஹர்வானி 16 விக்கெட் (சென்னை, 1988) கைப்பற்றினார். #INDvWI
Tags:    

Similar News