செய்திகள்

ஆசிய விளையாட்டுப் போட்டி: குத்துச்சண்டை - சீட்டு விளையாட்டில் இந்தியாவுக்கு 2 தங்கம்

Published On 2018-09-01 08:10 GMT   |   Update On 2018-09-01 08:10 GMT
ஆசிய விளையாட்டுப் போட்டியில் குத்துச்சண்டை மற்றும் சீட்டு விளையாட்டுப் பிரிவுகளில் இந்தியாவுக்கு இன்று 2 தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது. #AsianGames2018
ஜகார்த்தா:

இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இன்று குத்துச்சண்டையில் இந்தியாவுக்கு தங்கப் பதக்கம் கிடைத்தது. 49 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் அமித் பங்கல், இறுதிச்சுற்றில் ஒலிம்பிக் சாம்பியனான ஹசன்பாய் துஸ்மதோவை (உஸ்பெகிஸ்தான்) எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் 3-2 என்ற புள்ளிக் கணக்கில் அமித் பங்கல் வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை தட்டிச்சென்றார்.  இவர் அரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர்.

இதன்மூலம் குத்துச்சண்டையில் இந்தியா இரண்டாவது பதக்கத்தை வென்றுள்ளது. இதற்கு முன்பு 75 கிலோ எடைப்பிரிவில் விகாஷ் கிரிஷன் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார்.



இதேபோல் இன்று நடைபெற்ற சீட்டு விளையாட்டிலும் இந்தியாவுக்கு தங்கம் கிடைத்தது. ஆண்கள் இரட்டையர் பிரிவு சீட்டு விளையாட்டில் இந்தியாவின் பர்தான் பிரணாப்-சர்க்கார் ஷிப்நாத் ஜோடி இறுதிச்சுற்றில் 384 புள்ளிகள் பெற்று தங்கம் வென்றது. சீனாவின் யாங் லிக்சின்-சென் காங் ஜோடி 378 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கம் வென்றது. மூன்று மற்றும் 4-வது இடங்களைப் பிடித்த இந்தோனேசியா மற்றும் ஹாங்காங் ஜோடிகளுக்கு வெண்கலப் பதக்கங்கள் வழங்கப்பட்டன.

இந்த போட்டியின் முடிவில் இந்தியா 15 தங்கம், 23 வெள்ளி, 29 வெண்கலம் என மொத்தம் 67 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் 8-வது இடத்தில் நீடிக்கிறது.  #AsianGames2018 
Tags:    

Similar News