செய்திகள்

ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்றவர்களுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து

Published On 2018-08-31 10:14 IST   |   Update On 2018-08-31 10:14:00 IST
இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் 18-வது ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கங்களை வென்றுள்ள இந்திய வீரர்கள் அனைவருக்கும் திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். #AsianGames2018 #MKStalin
சென்னை:

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இந்தோனேஷியாவில் நடைபெற்று வரும் 18-வது ஆசிய விளையாட்டு போட்டியில் தொடர்ந்து பதக்கங்களை வென்று வரும் இந்திய வீரர்கள் அனைவருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். அதில், தமிழகத்தைச் சார்ந்த வீரர்களும் வெற்றிவாகை சூடி வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்களை வென்றிருப்பது மன மகிழ்ச்சியளிக்கிறது.

குறிப்பாக, 4x400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த ஆரோக்கிய ராஜீவ் வெள்ளிப் பதக்கமும், 400 மீட்டர் ஆடவருக்கான தடைதாண்டும் ஓட்டப்போட்டியில் தருண் அய்யாச்சாமி வெள்ளிப்பதக்கத்தையும் தட்டிச் சென்றிருக்கின்றனர்.



ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு ஸ்குவாஷ் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த சவுரவ் கோஷல் வெண்கலப்பதக்கமும், டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவில் பிரஜ்னேஷ் குணேஸ்வரன் வெண்கலப்பதக்கத்தையும் வென்று பெருமை சேர்த்திருக்கிறார்கள்.

அதேபோல், ஸ்குவாஷ் போட்டிகளில் வெண்கலப் பதக்கங்களை வென்றிருக்கும் தீபிகா பல்லிகல், ஜோஷ்னா சின்னப்பா ஆகியோருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து, சர்வதேச அளவிலான போட்டிகளில் மென்மேலும் பல பதக்கங்ளை வாங்கிக் குவித்து தமிழ்நாட்டிற்கும், இந்திய திருநாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  #AsianGames2018 #MKStalin
Tags:    

Similar News