செய்திகள்

டிரண்ட் பிரிட்ஜ் டெஸ்டின் 4ம் நாள் முடிவில் இங்கிலாந்து 311/9 - வெற்றியின் விளிம்பில் இந்தியா

Published On 2018-08-21 18:19 GMT   |   Update On 2018-08-21 18:19 GMT
டிரண்ட் பிரிட்ஜில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில் 4ம் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி 9 விக்கெட்டுக்கு 311 ரன்கள் எடுத்துள்ளது. #ENGvIND #INDvENG

இங்கிலாந்து - இந்தியா இடையிலான 3-வது டெஸ்ட் டிரென்ட் பிரிட்ஜியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

இந்தியா அணி தனது முதல் இன்னிங்சில் விராட் கோலி மற்றும் ரகானேயின் சிறப்பான பேட்டிங்கால் முதல் இன்னிங்சில் 329 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து ஹர்திக் பாண்ட்யாவின் பந்துவீச்சில் சிக்கியதையடுத்து, முதல் இன்னிங்சில் 161 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

அடுத்து, இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கிய இந்திய வீரர் விராட் கோலி சதமடித்தார். அவருக்கு புஜாரா ஒத்துழைப்பு கொடுத்தார். அவர் 72 ரன்களில் அவுட்டானார். இறுதியில், 7 விக்கெட் இழப்புக்கு 352 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

இதைத்தொடர்ந்து, இங்கிலாந்துக்கு 521 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்தியா. இமாலய இலக்குடன் இங்கிலாந்து அணியின் அலஸ்டைர் குக், ஜென்னிங்ஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.

ஜென்னிங்ஸ் 13 ரன்னிலும், குக் 17 ரன்னிலும், ஜோ ரூட் 13 ரன்னிலும், போப் 16 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். 62 ரன்னுக்குள் இங்கிலாந்து முதல் நான்கு விக்கெட்டுக்களையும் இழந்து திணறியது.



ஐந்தாவது விக்கெட்டுக்கு பென் ஸ்டோக்ஸ் உடன் ஜோஸ் பட்லர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 169 ரன்கள் சேர்த்தது. இந்த ஜோடியை பும்ரா பிரித்தார். அணியின் எண்ணிக்கை 231 ஆக இருக்கும்போது ஜோஸ் பட்லர் 106 ரன்களில் அவுட்டானார்.

அடுத்து இறங்கிய பேர்ஸ்டோவ், கிறீஸ் வோக்ஸ் ஆகியோரையும் பும்ரா வெளியேற்றினார். தொடர்ந்து நிதானமாக ஆடிய பென் ஸ்டோக்ஸ்சை 62 ரன்களில் பாண்ட்யா வெளியேற்றினார். அப்போது அணியின் எண்ணிக்கை 8 விக்கெட் இழப்புக்கு 241 ரன்கள் எடுத்திருந்தது.

தொடர்ந்து இறங்கிய அடில் ரஷித்தும், ஸ்டூவர்ட் பிராடும் அடித்து ஆடினர். இந்த ஜோடி அரை சதம் கடந்தது. பிராடு 20 ரன்னில் பும்ரா பந்துவீச்சில் அவுட்டானார். ஆட்ட நேர இறுதியில் இங்கிலாந்து அணி 9 விக்கெட்டுக்கு 311 ரன்கள் எடுத்துள்ளது.

இன்னும் ஒருநாள் ஆட்டம் மீதமிருக்கும் நிலையில் இந்தியாவுக்கு ஒரு விக்கெட் மட்டுமே தேவைப்படுவதால் எளிதில் வெற்றி பெறும் வாய்ப்புள்ளது. #ENGvIND #INDvENG
Tags:    

Similar News