செய்திகள்

எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட்- ஜோஸ் பட்லருக்கு காயம்- தொடர்ந்து விளையாடுவாரா?

Published On 2018-08-02 14:26 GMT   |   Update On 2018-08-02 14:26 GMT
எட்ஜ்பாஸ்டன் டெஸ்டில் விராட் கோலி அடித்த பந்தை கல்லி திசையில் நின்று பிடிக்க முயன்ற ஜோஸ் பட்லருக்கு கைவிரலில் காயம் ஏற்பட்டது. #ENGvIND
இங்கிலாந்து - இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் பர்மிங்காம் எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அஸ்வின் (4), முகமது ஷமி (3) ஆகியோரின் சிறப்பான பந்து வீச்சால் 287 ரன்னில் ஆல்அவுட் ஆனது.

பின்னர் இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கியது. முதல் 13 ஓவர் வரை இந்தியா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 14-வது ஓவரை சாம் குர்ரான் வீசினார். இந்த ஓவரில் முரளி விஜய், லோகேஷ் ராகுல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

முதல் இரண்டு விக்கெட்டுக்களை இழந்ததால் அடுத்து விராட் கோலி களம் இறங்கினார். 2014-ம் ஆண்டு ஆண்டர்சனை ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியில் பந்து வீசி விராட் கோலியை அவுட்டாக்கியது போல் தற்போதும் அதே யுக்தியை கடைபிடித்தார்.



ஆண்டர்சன் பந்தை விராட் கோலி தொட்டுவிட அது ஸ்லிப் அருகில் கல்லியில் நின்ற ஜோஸ் பட்லரின் அருகே பாய்ந்து சென்றது. பட்லர் இடது கையால் பந்தை பிடிக்க முயன்றார். அப்போது பட்லர் கைவிரலில் பந்தை பலமாக தாக்கிச் சென்றது.

இதில் பட்லரின் இடது கையின் நடுவிரலில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு எக்ஸ்-ரே பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்த பரிசோதனை முடிவில்தான் அவரது காயத்தின் வீரியம் தெரியவரும். ஒருவேளை எலும்பு முறிவு இருந்தால் தொடர்ந்து விளையாடுவது சந்தேகமே.
Tags:    

Similar News