செய்திகள்

முத்தரப்பு டி20 கிரிக்கெட்: நியூசிலாந்தை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது ஆஸ்திரேலியா

Published On 2018-02-21 11:48 GMT   |   Update On 2018-02-21 11:48 GMT
முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி, நியூசிலாந்தை வீழ்த்தி தொரை கைப்பற்றி உள்ளது. #t20cricket #AustraliavsNewZealand #triseriesfinal
ஆக்லாந்து:

ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா இரண்டு முறை மோதியது. இதில் முதல் இரண்டு இடங்களை பிடித்த ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தின. 

ஆக்லாந்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக ராஸ் டெய்லர் ஆட்டமிழக்காமல் 43 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலிய தரப்பில் அகர் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். ரிச்சர்ட்சன், டை இருவரும் தலா 2 விக்கெட் எடுத்தனர்.

இதையடுத்து 151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலி அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. விக்கெட் இழப்பின்றி 55 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை பெய்ததால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. மழை நின்றதும் போட்டி மீண்டும் தொடங்கியது. ஆஸ்திரேலியாவின் துவக்க வீரர் ஷார்ட் 50 ரன்களில் ஆட்டமிழந்தார். மற்றொரு துவக்க வீரர் வார்னர் 25 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அகர் 2 ரன்களில் அவுட் ஆனார். 

அணியின் ஸ்கோர் 14.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 121 ரன்கள் என்ற நிலையில் இருந்தபோது மீண்டும் மழை குறுக்கிட்டது. தொடர்ந்து மழை பெய்ததால் ஆடுகளம் ஈரமாகி பந்து வீச முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து டக்வொர்த் லீவிஸ் முறை கடைப்பிடிக்கப்பட்டது. இதில், ஆஸ்திரேலிய அணி 14.4 ஓவர்களில் 103 ரன்கள் எடுத்தால் வெற்றி என கணிக்கப்பட்டது. ஆஸ்திரேலிய அணி ஏற்கனவே 121 ரன்கள் எடுத்திருந்ததால், 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இந்த வெற்றியின் மூலம், முத்தரப்பு டி20 தொடரை ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியது. ஐ.சி.சி. தரவரிசையிலும் முதலிடத்திற்கு முன்னேறியது. கடைசி போட்டியின் ஆட்டநாயகனாக அகர் தேர்வு செய்யப்பட்டார். தொடர் நாயகனாக கிளென் மேக்ஸ்வெல் தேர்வு செய்யப்பட்டார். #t20cricket #AustraliavsNewZealand #triseriesfinal
Tags:    

Similar News