செய்திகள்

நான்கு நாள் பகல் இரவு டெஸ்ட்: 120 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா இன்னிங்ஸ் வெற்றி

Published On 2017-12-27 22:03 IST   |   Update On 2017-12-27 22:03:00 IST
ஜிம்பாப்வே அணிக்கெதிரான நான்கு நாள் பகல் இரவு டெஸ்ட் போட்டியில் தென்னாப்ரிக்கா அணி 120 ரன்கள் வித்தியாசத்தில் இன்னிங்ஸ் வெற்றி பெற்றது.

ஜொகனஸ்பெர்க்:

கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக நான்கு நாள் பகல் இரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நேற்று தொடங்கியது.  தென்ஆப்பிரிக்கா - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான இப்போட்டி தென்னாப்பிரிக்காவில் உள்ள போர்ட் எலிசபெத் மைதானத்தில் தொடங்கியது. 

டாஸ் வென்ற தென்னாப்ரிக்கா கேப்டன் டிவில்லியர்ஸ் பேட்டிங் தேர்வு செய்தார். டீன் எல்கரும், மார்கிராமும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். இந்த ஜோடி 72 ரன்கள் குவித்த நிலையில் எல்கர் அவுட்டானார். அவரை தொடர்ந்து இறங்கிய டி வில்லியர்ஸ், பவுமா ஆகியோர் ஓரளவு ஆடி ரன்கள் சேர்த்தனர். ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும், மார்கிராம் சிறப்பாக ஆடி சதமடித்து அசத்தினார். அவர் 125 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

டி வில்லியர்ஸ் 53 ரன்களிலும், பவுமா 44 ரன்களும் எடுத்து அவுட்டாகினர். இறுதியில், தென்னாப்பிரிக்கா அணி 78.3 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 309 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்துள்ளது. ஜிம்பாப்வே தரப்பில் ஜார்விஸ், மோஃபு ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளும், கிரீமர் 2 விக்கெட்டுகளும் விழ்த்தினர்.



இதையடுத்து, ஜிம்பாப்வே தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக மசகட்சாவும், சிபாபாவும் களமிறங்கினர். ஆனால், தென் ஆப்பிரிக்கா அணியினரின் துல்லியமான பந்து வீச்சுக்கு தாக்குபிடிக்க முடியாமல்  ஜிம்பாப்வே வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஜிம்பாப்வே 16 ஓவர்களுக்கு 4 விக்கெட் இழப்புக்கு 30 ரன்கள் எடுத்திருந்தது. 

இந்நிலையில், இரண்டாம் நாளான இன்று தொடர்ந்து ஆடிய ஜிம்பாப்வேக்கு அதிர்ச்சி தொடக்கமாக அமைந்தது. அந்த அணி முதல் இன்னிங்சில் 68 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஜிம்பாப்வே அணியில் ரியான் பர்ல் 16 ரன்களும், கைல் ஜார்விஸ் 23 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களிலும், ரன் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். மார்னே மார்கல் 5 விக்கெட்களும், ககிசோ ரபாடா, அண்டிலே பேலுக்வாயோ தலா 2 விக்கெட்களும், வெர்னான் பிலாண்டர் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 241 ரன்கள் பின்தங்கிய நிலையில் இருந்த ஜிம்பாப்வே பாலோ ஆன் பெற்று மறுபடி களமிறங்கியது. இந்த முறையும் எதிரணியினரின் பந்துவீச்சுக்கு தாக்குபிடிக்க முடியாமல் ஜிம்பாப்வே வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஆனால் இந்த முறை சற்று தாக்குபிடித்து விளையாடிய ஜிம்பாப்வே 121 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இந்த முறை கிரேக் எர்வின் 23 ரன்களும், கிரெம் கிரீமர் 18 ரன்களும், பிரண்டன் டெய்லர் 16 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.



இதனால் தென்னாப்ரிக்கா அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 120 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்று டெஸ்ட் தொடரை கைப்பற்றியது. தென்னாப்ரிக்கா பந்துவீச்சில் கேஷவ் மகராஜ் 5 விக்கெட்களும், அண்டிலே பேலுக்வாயோ 3 விக்கெட்களும், பிளாண்டர், ரபாடா தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

Similar News