செய்திகள்

வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான முதல் டெஸ்ட்: நியூசிலாந்து 9 விக்கெட் இழப்பிற்கு 447 ரன்கள் குவிப்பு

Published On 2017-12-02 16:43 IST   |   Update On 2017-12-02 16:43:00 IST
வெலிங்டனில் நடைபெற்று வரும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான முதல் டெஸ்டில் நியூசிலாந்து 2-வது நாள் ஆட்ட முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 447 ரன்கள் குவித்துள்ளது.
நியூசிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வெலிங்டனில் நடைபெற்று வருகிறது. நேற்று தொடங்கிய இந்த டெஸ்டில் நியூசிலாந்து டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்தது.

அதன்படி முதலில் களம் இறங்கிய வெஸ்ட் இண்டீஸ், வாக்னரின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 134 ரன்னில் சுருண்டது. வெஸ்ட் இண்டீஸ் அணியால் 45.4 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடிந்தது. வாக்னர் 14.4 ஓவர்கள் வீசி 39 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். போல்ட் 2 விக்கெட் கைப்பற்றினார்.


சதத்தை தவறவிட்ட டெய்லர்

பின்னர் நியூசிலாந்து முதல் இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய முதல்நாள் ஆட்ட முடிவில் நியூசிலாந்து 2 விக்கெட் இழப்பிற்கு 85 ரன்கள் எடுத்திருந்தது. ராவல் 29 ரன்னுடனும், ராஸ் டெய்லர் 12 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ராவல் 42 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். ஆனால் டெய்லர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருந்தாலும் 93 ரன்கள் எடுத்த நிலையில் எல்.பி.டபிள்யூ மூலம் அவுட்டாகி சதத்தை தவறவிட்டார். அதன்பின் வந்த நிக்கோல்ஸ் 67 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.


அரைசதம் அடித்த நிக்கோல்ஸ்

7-வது வீரராக களம் இறங்கிய கிராண்ட்ஹோம் அதிரடியாக விளையாடி 71 பந்தில் 11 பவுண்டரி, 3 சிக்சருடன் சதம் அடித்தார். இவரது சதத்தால் நியூசிலாந்தின் ஸ்கோர் 400-ஐ தாண்டியது. தொடர்ந்து விளையாடிய கிராண்ட்ஹோம் 74 பந்தில் 105 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தார்.

கிராண்ட்ஹோம் சதத்தால் நியூசிலாந்து 2-வது நாள் ஆட்ட முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 447 ரன்கள் குவித்துள்ளது. ப்ளெண்டெல் 57 ரன்னுடனும், போல்ட் 2 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். தற்போது வரை நியூசிலாந்து 313 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

Similar News