செய்திகள்

தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட்: இலங்கை 131 ரன்னில் சுருண்டு பாலோ-ஆன் ஆனது

Published On 2017-01-14 09:46 GMT   |   Update On 2017-01-14 09:46 GMT
ஜோகன்னஸ்பர்கில் நடைபெற்று வரும் தென்ஆப்பிரிக்காவிற்கு எதிராக கடைசி டெஸ்டின் முதல் இன்னிங்சில் இலங்கை அணி 131 ரன்னில் சுருண்டு பாலோ-ஆன் ஆனது.
தென்ஆப்பிரிக்கா - இலங்கை அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஜோகன்னஸ்பர்கில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்சில் 426 ரன்கள் குவித்தது. அம்லா 134 ரன்களும், டுமினி 155 ரன்களும் குவித்தனர். இலங்கை அணி சார்பில் பிரதீப் மற்றும் லஹிரு குமாரா ஆகியோர் தலா 4 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.

பின்னர் இலங்கை அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் இலங்கை அணி 4 விக்கெட் இழப்பிற்கு 80 ரன்கள் எடுத்திருந்தது. மேத்யூஸ் 11 ரன்னுடனும், சண்டிமல் 3 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.


விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் பிளாண்டர்

இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய மேத்யூஸ் மேலும் 8 ரன்கள் எடுத்து 19 ரன்னில் ஆட்டம் இழந்தார். சண்டிமல் 5 ரன்னோடு வெளியேறினார். அதன்பின் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழக்க இலங்கை அணி 45.4 ஓவர்களை மட்டுமே சந்தித்து 131 ரன்னில் சுருண்டது. தென்ஆப்பிரிக்கா அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் பிளாண்டர், ரபாடா ஆகுயோர் தலா நாக்கு விக்கெட்டுக்களும், பர்னெல் மற்றும் ஆலிவியர் தலா 2 விக்கெட்டுக்களும் வீழ்த்தினார்கள்.

தென்ஆப்பிரிக்காவை விட இலங்கை அணி முதல் இன்னிங்சில் 295 ரன்கள் பின்தங்கிய நிலையில் இருப்பதால் பாலோ-ஆன் ஆகியுள்ளது. தென்ஆப்பிரிக்கா அணியின் கேப்டன் டு பிளிசிஸ் பாலோ-ஆன் கொடுத்தார்.

இதனால் இலங்கை அணி தொடர்ந்து 2-வது இன்னிங்சை தொடங்கியுள்ளது.

Similar News