செய்திகள்

2-வது டெஸ்ட்: இலங்கை அணிக்கு 507 ரன்கள் இலக்கு வைத்தது தென் ஆப்பிரிக்கா

Published On 2017-01-04 16:19 GMT   |   Update On 2017-01-04 16:19 GMT
கேப்டவுனில் நடைபெற்று வரும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி, இலங்கை அணியின் வெற்றிக்கு 507 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது.
கேப்டவுன்:

தென்ஆப்பிரிக்கா - இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி கேப்டவுனில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் தென்ஆப்பிரிக்கா அணி 392 ரன்கள் குவித்தது. டீன் எல்கர் 129 ரன்களும், டி காக் 101 ரன்களும் குவித்தனர். இலங்கை அணி சார்பில் குமாரா 6 விக்கெட்டுக்கள் சாய்த்தார்.

பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய இலங்கை அணி, தென் ஆப்பிரிக்காவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 110 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக உபுல் தரங்கா 26 ரன்கள் (நாட் அவுட்) எடுத்தார். துவக்க வீரர் கருணாரத்னே 24 ரன்கள் சேர்த்தார். தென் ஆப்பிரிக்கா தரப்பில் பிளாண்டர், ரபாடா ஆகியோர் தலா நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.

இலங்கை அணி 282 ரன்கள் பின்தங்கியதால் பாலோ-ஆன் ஆனது. ஆனால் பாலோ-ஆன் கொடுக்காமல் தொடர்ந்து 2-வது இன்னிங்சை ஆடிய தென் ஆப்பிரிக்கா, இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 35 ரன்கள் சேர்த்திருந்தது.

இன்று 3-ம் நாள் ஆட்டம் நடைபெற்றது. தொடர்ந்து ஆடிய தென் ஆப்பிரிக்கா 7 விக்கெட் இழப்பிற்கு 224 ரன்கள் சேர்த்த நிலையில் டிக்ளேர் செய்தது. அதிகபட்சமாக எல்கர் 55 ரன்களும், கேப்டன் டுபிளசிஸ் 41 ரன்களும் சேர்த்தனர். இதனால், இலங்கை அணியின் வெற்றிக்கு 507 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இந்த இலக்குடன் இரண்டாம் இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி, முதல் இன்னிங்சைப் போன்றே வேகப்பந்துகளை எதிர்கொள்ள முடியாமல் திணறியது. 25 ரன்கள் எடுப்பற்குள் 2 விக்கெட்டுகளை (கருணாரத்னே-6, மென்டிஸ்-4) இழந்தது. அதன்பின்னர் குஷால் சில்வா 29 ரன்களிலும், டிசில்வா 22 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். கேப்டன் மேத்யூஸ், சண்டிமால் இருவரும் அணியை சரிவில் இருந்து மீட்க போராடினர்.

இரண்டு நாட்கள் ஆட்டம் மீதமிருந்தாலும், விக்கெட்டை காப்பாற்றி இலக்கை எட்டுவது மிகவும் கடினமானது என்பதால் தென் ஆப்பிரிக்காவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

Similar News