செய்திகள்

4-வது டெஸ்ட் போட்டி முரளி விஜய் அபார சதம்

Published On 2016-12-10 07:31 GMT   |   Update On 2016-12-10 07:31 GMT
இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 4-வது டெஸ்ட் போட்டியில் முரளி விஜய் தனது 8-வது சதத்தை பூர்த்தி செய்தார்

மும்பை, டிச. 10-

இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 4-வது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடந்து வருகிறது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 400 ரன் குவித்து ஆல்-அவுட் ஆனது.

இந்தியா தரப்பில் அஸ்வின் 6 விக்கெட்டும், ஜடேஜா 4 விக்கெட்டும் கைப்பற்றினர்.

பின்னர் இந்தியா முதல் இன்னிங்சை விளையா டியது. தொடக்க வீரர் லோகேஷ் ராகுல் 24 ரன்னில் அவுட் ஆனார்.

அதன்பின் ஜோடி சேர்ந்த முரளி விஜய்-புஜாரா இருவரும் சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்தினர். நேர்த்தியாக விளையாடி ரன்களை சேர்த்தனர்.

நேற்றைய 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 52 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 146 ரன் எடுத்தது.

முரளி விஜய் 70 ரன்களுடனும், புஜாரா 47 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இன்று 3-வது நாள் ஆட்டம் நடந்தது. இருவரும் தொடர்ந்து விளை யாடினார்கள்.

இன்றைய ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே புஜாரா மேலும் ரன் எடுக்காமல் அவுட் ஆனார். ஜாக்பால் வீசிய அந்த ஓவரின் 2-வது பந்தில் போல்டு ஆகி வெளியேறினார். அவர் 47 ரன் எடுத்தார்.

அடுத்து முரளி விஜய்யுடன் கேப்டன் வீராட் கோலி ஜோடி சேர்ந்தார். பவுண்டரி அடித்து ரன் கணக்கை வீராட் கோலி தொடங்கினார்.

இந்த ஜோடி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இந்தியா 54.5 ஓவரில் 150 ரன்னை தொட்டது.

அதன்பின்னர் வீராட் கோலி ரன் குவிப்பில் ஈடுபட்டார். இதனால் ஸ்கோர் மளமளவென்று உயர்ந்தது. இருவரும் 73 பந்துகளில் 50 ரன் சேர்த்தனர். 65.5-வது ஓவரில் இந்தியா 200 ரன்னை தொட்டது.

மறுமுனையில் இருந்த முரளிவிஜய்யும் சிறப்பான ஆட்டத்தை வெளிப் படுத்தினார். அவர் சதம் அடித்தார். 46-வது டெஸ்டில் விளையாடும் அவருக்கு இது 8-வது சதமாகும்.

Similar News