செய்திகள்

ஊக்க மருந்து சோதனையில் சிக்கிய இந்திய ஓட்டப்பந்தய வீரர் தரம்பிர்சிங்: ஒலிம்பிக் போட்டிக்கு செல்ல தடை

Published On 2016-08-04 09:35 IST   |   Update On 2016-08-04 09:35:00 IST
ரியோ ஒலிம்பிக்கில் 200 மீட்டர் ஓட்டத்தில் பங்கேற்க தகுதி பெற்று இருந்த இந்திய தடகள வீரர் தரம்பிர்சிங் ஊக்க மருந்து சோதனையில் சிக்கி இருக்கிறார். இதனால் அவர் ஒலிம்பிக் போட்டிக்கு புறப்பட்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி :

பிரேசிலில் நாளை தொடங்கும் ரியோ ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய தடகள வீரர் தரம்பிர்சிங் தகுதி பெற்று இருந்தார். கடந்த மாதம் பெங்களூருவில் நடந்த இந்திய கிராண்ட்பிரி தடகள போட்டியில் 200 மீட்டர் ஓட்டத்தில் தரம்பிர்சிங் 20.45 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து தேசிய சாதனை படைத்ததுடன், ஒலிம்பிக் போட்டிக்கான தகுதி இலக்கையும் எட்டினார். இதன் மூலம் ஒலிம்பிக் போட்டியில் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்துக்கு 36 ஆண்டுகளுக்கு பிறகு தகுதி பெற்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார்.

அரியானாவை சேர்ந்த 27 வயதான தரம்பிர்சிங்கிடம் தேசிய ஊக்க மருந்து தடுப்பு ஏஜென்சியினர் (நாடா) ரத்த மாதிரி எடுத்து பரிசோதனை செய்தனர். இதில் அவர் ஊக்க மருந்து பயன்படுத்தியது தெரியவந்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இதனால் நேற்று முன்தினம் பிரேசிலுக்கு புறப்பட்டு செல்ல இருந்த தரம்பிர்சிங்குக்கு கடைசி நேரத்தில் தடை விதிக்கப்பட்டது. இதனால் அவர் பிரேசில் செல்லவில்லை. ஒலிம்பிக் போட்டி தொடங்க இன்னும் ஒருநாளே இருக்கும் நிலையில் மேலும் ஒரு இந்திய வீரர் ஊக்க மருந்து சர்ச்சையில் சிக்கி இருப்பது ரசிகர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

தரம்பிர்சிங்கின் ‘பி’ மாதிரி சோதனை முடிவும் தோல்வி அடைந்தால் அவருக்கு ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தடை விதிக்கப்படும் என்று தெரிகிறது.

2012-ம் ஆண்டில் நடந்த மாநிலங்களுக்கு இடையிலான தேசிய தடகள போட்டியில் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப்பதக்கம் வென்ற தரம்பிர்சிங் போட்டி முடிந்ததும் ஊக்க மருந்து சோதனைக்கு உட்படாமல் தவிர்த்து சர்ச்சையில் சிக்கியதால் அவரது பதக்கம் பறிக்கப்பட்டது. இந்த நிலையில் தரம்பிர்சிங் மீண்டும் ஊக்க மருந்து பிரச்சினையில் சிக்கி இருப்பதால் அவருக்கு 8 ஆண்டு காலம் வரை தடை விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

Similar News