செய்திகள்

ரியோ ஒலிம்பிக் போட்டி நாளை தொடக்கம்: இந்திய அணியில் 118 வீரர்-வீராங்கனைகள்

Published On 2016-08-04 07:43 IST   |   Update On 2016-08-04 07:43:00 IST
ரியோ ஒலிம்பிக் போட்டியில் 118 வீரர்-வீராங்கனைகள் அடங்கிய இந்திய அணி பங்கேற்கிறது.
ரியோ டி ஜெனீரோ:

ரியோ ஒலிம்பிக் போட்டியில் 118 வீரர்-வீராங்கனைகள் அடங்கிய இந்திய அணி பங்கேற்கிறது.

31-வது ஒலிம்பிக் போட்டி பிரேசில் நாட்டில் உள்ள ரியோடிஜெனீரோவில் நாளை (வெள்ளிக்கிழமை) கோலாகலமாக தொடங்குகிறது. ரியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் 118 வீரர்-வீராங்கனைகளை உள்ளடக்கிய இந்திய அணி 15 விளையாட்டுகளில் களம் காணுகிறது.

ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் மிகப்பெரிய இந்திய அணி இது தான். இந்திய அணிக்கு துப்பாக்கி சுடுதல் வீரர் அபினவ் பிந்த்ரா தலைமை தாங்கி அணிவகுப்பில் கொடியேந்தி செல்கிறார். கடந்த (2012) ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் 83 வீரர்-வீராங்கனைகள் கலந்து கொண்டனர். முந்தைய போட்டியில் இந்திய அணி 2 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் 6 பதக்கம் வென்றது. அதனை விட இந்த முறை இந்திய அணி அதிக பதக்கம் வெல்லும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

தேசிய கொடியேற்றுதல் மற்றும் இந்திய அணிக்கு அதிகாரபூர்வ வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சி ஒலிம்பிக் கிராமத்தில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இந்திய வீரர்கள் உற்சாகமாக செல்பி எடுத்து ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். ரியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் இந்திய வீரர்-வீராங்கனைகள் விவரம் வருமாறு:-

வில்வித்தை :

ஆண்கள்: அதானு தாஸ் (ரிகர்வ் தனிநபர் பிரிவு).

பெண்கள்: தீபிகா குமாரி, பாம்பய்லா தேவி, லட்சுமி ராணி (ரிகர்வ் தனிநபர் மற்றும் அணிகள் பிரிவு).

தடகளம் :

ஆண்கள்: முகமது அனாஸ் (400 மீட்டர் ஓட்டம்), ஜின்சன் ஜான்சன் (800 மீட்டர் ஓட்டம்), அங்கித் ஷர்மா (நீளம் தாண்டுதல்), ரஞ்சித் மகேஸ்வரி (டிரிபிள்ஜம்ப்), விகாஸ் கவுடா (வட்டு எறிதல்), தோனாகல் கோபி, கேதா ராம், நிதேந்திர சிங் ராவத் (மூவரும் மாரத்தான்), கணபதி, மனிஷ்சிங், குர்மீத்சிங் (20 கிலோ மீட்டர் நடைபந்தயம்), சந்தீப் குமார், மனிஷ் சிங் (50 கிலோ மீட்டர் நடைபந்தயம்), முகமது அனாஸ், தருண், குன்கு முகமது, ஆரோக்ய ராஜீவ், மோகன்குமார், லலித் மாத்தூர் (6 பேரும் 400 மீட்டர் தொடர் ஓட்டம்).

பெண்கள்: டுட்டீ சந்த் (100 மீட்டர் ஓட்டம்), ஸ்ரபானி நந்தா (200 மீட்டர் ஓட்டம்), நிர்மலா ஷெரோன் (400 மீட்டர் ஓட்டம்), டின்டு லூக்கா (800 மீட்டர் ஓட்டம்), லலிதா பாபர், சுதாசிங் (இருவரும் 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள்சேஸ்), மன்பிரீத் கவுர் (குண்டு எறிதல்), சீமா அன்டில் (வட்டு எறிதல்), ஜெய்ஷா, கவிதா ராவுத் (இருவரும் மாரத்தான்), குஷ்பிர் கவுர், சப்னா பூனியா (இருவரும் 20 கிலோ மீட்டர் நடைபந்தயம்), அஸ்வினி அகுன்ஜி, தேபஸ்ரீ மஜூம்தார், ஜிஸ்னா மேத்யூ, பூவம்மா, நிர்மலா ஷெரோன், அனில்டா தாமஸ் (6 பேரும் 400 மீட்டர் தொடர் ஓட்டம்).

பேட்மிண்டன் :

ஸ்ரீகாந்த் (ஆண்கள் ஒற்றையர்), மனு அட்ரி-சுமித் ரெட்டி (ஆண்கள் இரட்டையர்), சாய்னா நேவால், பி.வி. சிந்து (பெண்கள் ஒற்றையர்), ஜூவாலா கட்டா-அஸ்வினி பொன்னப்பா (பெண்கள் இரட்டையர்).

குத்துச்சண்டை :
 
ஆண்கள்: ஷிவதபா (பாந்தம் வெயிட் பிரிவு), மனோஜ்குமார் (லைட் வெல்டர் வெயிட்), விகாஸ் கிருஷ்ணன் (மிடில் வெயிட்).

கோல்ப் :

ஆண்கள்: அனிர்பன் லஹிரி, ஷிவ் சவ்ராசியா. பெண்கள்: அதிதி அசோக்.

ஜிம்னாஸ்டிக்ஸ் :


பெண்கள்: திபா கர்மாகர் (ஆர்டிஸ்டிக் தனிநபர் ஆல்-ரவுண்ட் பிரிவு).

ஜூடோ :

ஆண்கள்: அவ்தார்சிங் (90 கிலோ உடல் எடைப்பிரிவு).

துடுப்பு படகு :

ஆண்கள்: டட்டு பாபன் போகனல் (சிங்கிள் ஸ்கல்ஸ்).

துப்பாக்கி சுடுதல் :

ஆண்கள்: அபினவ் பிந்த்ரா (10 மீட்டர் ஏர் ரைபிள்), பிரகாஷ் நஞ்சப்பா (50 மீட்டர் பிஸ்டல்), ககன் நரங் (10 மீட்டர் ஏர் ரைபிள், 50 மீட்டர் ரைபிள் புரோன், 50 மீட்டர் ரைபிள் 3 நிலை), ஜிது ராய் (10 மீட்டர் ஏர் பிஸ்டல், 50 மீட்டர் பிஸ்டல்), செயின்சிங் (50 மீட்டர் ரைபிள் புரோன், 50 மீட்டர் ரைபிள் 3 நிலை), குர்பிரீத்சிங் (10 மீட்டர் ஏர் பிஸ்டல், 25 மீட்டர் ரேபிட் பயர் பிஸ்டல்), மனவ்ஜித் சிங் சந்து, கைனன் செனாய் (இருவரும் டிராப்), மைராஜ் அகமது கான் (ஸ்கீட்).

பெண்கள்: அபூர்வி சன்டிலா, அயோனிகா பால் (இருவரும் 10 மீட்டர் ஏர் ரைபிள்), ஹீனா சித்து (10 மீட்டர் ஏர் பிஸ்டல், 25 மீட்டர் பிஸ்டல்).

நீச்சல் :

ஆண்கள்: சஜன் பிரகாஷ் (200 மீட்டர் பட்டர்பிளை), பெண்கள்: ஷிவானி கட்டாரியா (200 மீட்டர் பிரீஸ்டைல்).

டேபிள் டென்னிஸ் :

சரத்கமல், சவுமியாஜித் கோஷ் (இருவரும் ஆண்கள் ஒற்றையர்), மவுமா தாஸ், மானிகா பத்ரா (இருவரும் பெண்கள் ஒற்றையர்).

டென்னிஸ் :

ரோகன் போபண்னா- லியாண்டர் பெயஸ் (ஆண்கள் இரட்டையர்), சானியா மிர்சா-பிராத்தனா தோம்ப்ரே (பெண்கள் இரட்டையர்), சானியா மிர்சா-ரோகன் போபண்ணா (கலப்பு இரட்டையர்).

பளுதூக்குதல் :

ஆண்கள்: சதீஷ்குமார் (77 கிலோ பிரிவு), பெண்கள்: மீராபாய் சானு (48 கிலோ பிரிவு).

மல்யுத்தம் :

பிரீஸ்டைல் ஆண்கள்: சந்தீப் தோமர் (57 கிலோ பிரிவு), யோகேஷ்வர் தத் (65 கிலோ பிரிவு), நார்சிங் யாதவ் (74 கிலோ பிரிவு), கிரீகோ ரோமன் ஆண்கள்: ரவிந்தர் காத்ரி (85 கிலோ பிரிவு), ஹர்தீப்சிங் (98 கிலோ பிரிவு).

பிரீஸ்டைல் பெண்கள்: வினேஷ் போகத் (48 கிலோ பிரிவு), பபிதா குமாரி (53 கிலோ பிரிவு), சாக்ஷி மாலிக் (58 கிலோ பிரிவு).

ஆக்கி :

ஆண்கள் அணி: ஸ்ரீஜேஷ் (கேப்டன் மற்றும் கோல்கீப்பர்), சுரேந்தர்குமார், டேனிஷ் முஜ்தபா, ரகுநாத், ஆகாஷ்தீப்சிங், சிங்லென்சனாசிங், ஹர்மன்பிரீத்சிங், கோதாஜித்சிங், மன்பிரீத்சிங், ரமன்தீப்சிங், ரூபிந்தர்பால்சிங், சர்தார்சிங், எஸ்.வி.சுனில், நிகின் திம்மையா, உத்தப்பா, தேவிந்தர் வால்மிகி.

பெண்கள் அணி: சுசிலா சானு (கேப்டன்), சவிதா பூனியா, தீப் கிரேஸ் எக்கா, தீபிகா தாகூர், நமிதா தோப்போ, சுனிதா லக்ரா, லிலிமா மின்ஸ், ரேணுகா யாதவ், நிக்கி பிராத்தன், மோனிகா மாலிக், நவ்ஜோத் கவுர், அனுராதா தேவி, பூனம் ராணி, வந்தனா கட்டாரியா, பிரீத்தி துபேய், ராணி ராம்பால்.

Similar News