null
- ஒருவரின் அடிமனத்தின் குணங்கள் உணர்வு மனத்தோடு இணைந்து செயல்பட்டுக் கொண்டே இருக்கும்.
- ஒருவரின் உண்மையான பலம், பலவீனத்தை ஆழ்மனமே தெரிவிக்கும்.
மனிதனின் மனம் ஒன்று தான். ஆனால் உணர்வுகளுக்கு எண்ணிக்கை கிடையாது. மனதின் உணர்வுகளை புரிந்து கொள்ள மூன்று பிரிவுகளாக பிரிக்கலாம்.
1. உணர்வு மனம்: நாம் செய்யும் வேலைக்கு ஏற்றார் போல் உணர்வை மாற்றிக் கொள்வது உணர்வு மனம். உதாரணமாக புத்தகம் படிக்க வேண்டும் என்று நினைத்தவுடன் மனம் படிக்கும் உணர்வுக்கு மாறுவது.
2. அடி மனம்: ஒருவரின் இயல்பான மனதை குறிப்பிடுவது. இதை ஒருவரின் உண்மையான சொரூபம் என்றும் சொல்லலாம். ஒருவரின் அடிமனத்தின் குணங்கள் உணர்வு மனத்தோடு இணைந்து செயல்பட்டுக் கொண்டே இருக்கும். இது ஒருவர் மனதில் என்ன நினைக்கிறாரோ அதை அப்படியே வெளிப்படுத்த வைக்கும்.
3. ஆழ்மனம்: ஒருவரின் உண்மையான பலம், பலவீனத்தை ஆழ்மனமே தெரிவிக்கும். ஆழ்மனதை உணர்வு மனமும், அடி மனமும் சாதாரண நேரத்தில் செயல்பட விடாது. ஒருவரின் ஆழ்மனம் செயல்படும் போது மட்டுமே நாம் யார்? ஏன் பிறந்தோம் ? எதற்காக பிறந்தோம்? என்ன செய்கிறோம்? எதை நோக்கி போக வேண்டும் போன்ற அனைத்து கேள்விக்கும் விடை பெற முடியும். ஒருவரது சஞ்சித கர்மாவின் நிலையை இந்த ஆழ் மனத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
- இந்த மூன்று நிலை மனித உணர்வுகளே கனவுகளாக வருகிறது. கனவு என்பது நமக்கு கிடைக்காத நம்மால் செயல்படுத்த முடியாத உணர்வுகளின் வெளிப்பாடு. கனவில் வரும் நிகழ்வுகள் பெரும்பாலும் இனி நடக்கப் போவது, முன்னால் நடந்தது என்ற இரண்டு வகையாகவே இருக்கும். சில நேரங்களில் சம்பந்தமே இல்லாத நிகழ்வுகளும் வரும். சிலர் தமது எதிர்காலம் பற்றி பகல் கனவு காண்பார்கள்.
- சிலர் ஆழ் மன உணர்ச்சியை தியானம், யோகா போன்றவற்றின் மூலம் கட்டுப்படுத்தி "தான் யார்" என்ற கேள்விக்கு இறைவனின் பரிணாமே நாம் என்ற விடையறிந்து தங்களுக்கு வேண்டிய நல்ல பலன்களை சஞ்சித கர்மாவாக மாற்றி பிறவி பயனை அனுபவிக்கிறார்கள். இது ஒரு புறம் இருக்க மருத்துவ ரீதியாக சீரான தூக்கம் இல்லாதவர்களுக்கு கனவு என்பது மன அழுத்தம், மன நோயில் ஆழ்த்தி விடுகிறது. இரவில் தூங்கச் செல்லும் போது என்ன சிந்தனையில் இருக்கிறோமே அது தொடர்பான கனவே வரும். மிகக் குறிப்பாக இக்காலத்தில் டிவி சீரியல்களே கனவுகளுக்கு அடித்தளமாக இருக்கிறது. கனவுகள் பலருக்கு மன பாரத்தை குறைக்கும் வடிகாலாகவும் இருக்கிறது.
- கனவுகள் மனிதனை ஒரு தனி உலகிற்கு அழைத்து செல்கிறது. இதனைப்பற்றி பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதில் கடந்து வந்த ஜென்மத்தின் நிகழ்வுகள் கூட ஞாபகம் வரும். தூக்கத்தில் இருந்து விழித்த பிறகு அந்த கனவுகள் பற்றிய சிந்தனை அதிகமாக இருக்கும். ஆழ்ந்த உறக்கத்தில் வரும் கனவுகள் மட்டுமே பின்னால் நடக்க இருப்பதை முன்னரே உணர்த்தும்.
- குறிப்பிட்ட கால கட்டத்தில் அந்த சம்பவங்கள் அவர்களது கனவில் நிகழ்ந்தைப்போலவே நினைவில் நடக்கும். ஒருவரது ஜாதகத்தில் சுக்கிரன், செவ்வாய் சேர்ந்திருந்து குருபகவானால் பார்க்கப்பட்டால் பின்னால் நடக்கப் போவதை முன்னமே கனவு மூலம் அறியும் சக்தி படைத்தவர்கள். சில புரியாத புதிர்களை பலமுறை சிந்தனை செய்தும் மற்றும் முயற்சி செய்தும் கிடைக்காத புதிர்களுக்கான விடைகள் சிலருக்கு கனவில் விடையாக கிடைக்கும். இன்னும் சிலருக்கு அவர்கள் செய்த தவறுகள் கனவில் வந்து தவறை உணர வைக்கும்.
- அதீத நம்பிக்கை மற்றும் தாழ்வுமனப்பான்மையும் கூட இரவில் கனவுகளாக வந்து தொல்லை தரும். கனவில் மனிதன் தன்னை பெரிய வெற்றி வீரனாக நினைத்து கொள்வதால் அவனுக்கு யாரும் எதிரியே கிடையாது. அவன் நினைத்ததைப்போல எல்லாமே நடக்கிறது. இதனால் அக்கனவில் பெரு மகிழ்ச்சி ஏற்படுகிறது. மனிதனின் பலவீனமான எண்ணங்களும் கனவுகளை வரவழைக்கும். எனவே மனதிற்குள் எதை விதைக்கிறோமோ அதுவே இரவில் கனவாக வந்து விளைகிறது.
ஐ.ஆனந்தி
- ஒருவர் படுத்த உடன் எந்த பிரச்சினையும் இன்றி நிம்மதியாக தூங்குகிறார் என்றால் 12-ம் மிடமான அயன சயன ஸ்தானத்தில் சுப கிரக சம்பந்தம் மட்டும் இருக்கும். தானும் மகிழ்ச்சியாக இருப்பதுடன் மற்றவர்களையும் சந்தோஷ படுத்துவார்கள். கவலைகள் இவரை பாதிக்காது, நிம்மதியாக உறங்ககூடியவர்கள்
- கனவு என்பது அயன சயன ஸ்தானமான 12-ம் இடமும், மனோகாரகனாகிய சந்திரனின் சம்பந்தமும் சேர்ந்தது. கனவுக்கு காரக கிரகம் சூரியனாக இருந்தால் கூட ஒருவரின் கனவு, மனம் சார்ந்த நல்லது கெட்டது அனைத்திற்கும் சந்திரனே காரணம். சந்திரன் ஒரு ஜாதகத்தில் இருக்கும் இடமும், சந்திரனுடன் சேர்க்கை பெற்ற மற்ற கிரகங்களை கொண்டும், சந்திரனை பார்க்கும் கிரகங்களை வைத்தும் ஒருவரது மனம் எவ்வாறு இருக்கும், அவருக்கு கனவு பிரச்சினை உள்ளதா, தூக்கமின்மையால் அவதிபடுகிறாரா? என்று எளிதில் சொல்ல முடியும்.
- சந்திரன் பாவகர்த்தாரி தோஷம் பெற்றால் அசுப கனவும் சுப கர்தாரி யோகம் பெற்றால் சுப கனவுகள் இருந்து கொண்டே இருக்கும். சந்திரன் ராகு, கேதுவோடு சம்பந்தம் மற்றும் 6,8,12-ல் மறைபவர்களுக்கும் கனவு வரும்.
- ஒருவரது ஜாதகத்தில் லக்கனத்தில் 12-ம் அதிபதி இருந்தாலும் அல்லது லக்னாதிபதி 3,6, 8, 12 போன்ற மறைவு ஸ்தானங்களில் இருந்தாலோ அவர்களுக்கு கனவுகள் வரும்.
- அத்துடன் லக்னாதிபதி அஸ்தங்கம், நீசம், வக்ரம் பெற்று கோட்சார தசா, புத்தி நாதனும் சம்பந்தம் பெறும் போது அதிக கனவு வரும். அதனால் நோய் தாக்கம், தூக்கமின்மையும் வரும். இவர்களுக்கு செய்யும் மருத்துவ சோதனையில் எந்த குறையும் இருக்காது. ஆனால் ஜாதகர் நோய் தாக்கத்தில் இருப்பார். ஒரு ஜாதகத்தின் 1,5,9 வலிமை பெற்று 12-ம்மிடம் சம்பந்தம் பெறும் போது சுப கனவுகளும் 3,6,8,12-ம் பாவகம், அதிபதிகள் தசை நடத்தும் போது துரோகம், இழப்பு, மரணம் தொடர்பான கனவுகள் வரும். மிகக் குறிப்பாக சந்திர தசை சனி புத்தி அல்லது சனி தசை சந்திரபுத்தி நடக்கும் போது மன சஞ்சலமான கனவுகள் மிகுதியாக இருக்கும். இந்த காலகட்டங்களில் வரும் கனவு தூங்கி எழும் போது மறந்து விடும் அல்லது அரைகுறையாக நினைவு இருக்கும். 4-ம் இடமான சுகஸ்தானம் 12-க்கு திரிகோணம் என்பதால் சுகஸ்தானத்தை கோச்சாரத்தில் அசுப கிரகம் தொடர்பு பெறும் போது (3க்கு 2) தூக்கமின்மை மற்றும் குடியிருக்கும் வீட்டில் பிரச்சினை போன்ற காரணத்தால் அசுப கனவு வரும். சுக்கிரன், புதன், சந்திரன் போன்ற பெண் கிரக சம்பந்தம் ஏற்படும் போது பெண்கள் தொடர்பான கனவுகள் அதிகம் வரும்.
- சனி, ராகு, கேது போன்ற கர்ம வினையை வெளிப்படுத்தும் கிரகங்கள் 6,12-ம் பாவத்தோடு சம்பந்தம் பெற்று செவ்வாய் சம்பந்தமும் பெற்றால் அடிதடி, சண்டை கனவு வரும். 6,12- ல் ராகு, சனி சம்பந்தம் பெறும் போது இறந்த முன்னோர்களின் கனவு வரும். 6,12-ல் செவ்வாய், ராகு சம்பந்தம் பெறும் போது மிருகங்கள் கனவு வரும். உடலில் கபம், வாதம், பித்தம் வாயு தொடர்பான பிரச்சினை, அஜீரண கோளாறு தந்து கனவை உருவாக்கும்.
- ஒரு குடும்பத்தில் சாதாரண மரணமோ, அல்லது திடீர் மரணமோ ஏற்பட்டிருந்தால் அதற்க்கான கர்மங்களை தொடர்ந்து 12 நாட்கள் செய்வார்கள். ஏராளமான பணங்களை செலவுசெய்தும், கடுமையான நியமங்களை கடைபிடித்தும் 12 நாட்கள் செய்யப்பட்ட இறுதி கர்ம காரியங்களால் அந்த ஆத்மா நற்கதியை அடைந்தாரா? இல்லையா? என்பதை சில கனவுகள் மூலம் அறிந்து கொள்ளலாம். நல்ல கனவு வந்தால் ஆத்மா நற்கதி பெற்றது என்றும் தீய கனவு வந்தால் நற்கதி அடைவதில் சிக்கல் இருக்கிறது என்றும் அறிந்து கொள்ள வேண்டும்.
- நல்ல கனவுகள் என்றால் பழுத்த பழங்களுடன் மரம், காளை, கருடன், மயில், தேவர்கள் அவர்களின் வாகனங்கள் கனவில் தோன்றுவது கர்மா நடைபெற்ற வருடத்தில் கர்மா செய்தவரின் மகன் (அ) மகளுக்கு சுப நிகழ்ச்சிகள் நடைபெறுவது சுப பலன். ஒரு இடத்தில் படுத்திருக்கும் நபர், காலை எழும் போது இடம் மாறி எழுவது. தனது குடும்பத்து நபர்கள் தன்னைவிட்டோ, தன் குடும்பத்தை விட்டோ வெளியேறுவது, யாரோ ஒருவர் தன்னை தூக்கி செல்வது, உண்ணும் உணவை மற்றவர் அபகரித்து செல்வது போல காணுவது போன்ற கனவுகள் அசுபமாகும்.
- இது போன்ற கனவுகள் வந்தால் புண்ணிய தீர்த்தங்களில் நீராடி, இறந்தவருக்கு நற்கதி ஏற்படவேண்டும் என சங்கல்பம் செய்து ஏழை எளியவர்களுக்கு உண்ண உணவும், உடுத்த உடையும் தானமாக கொடுக்கலாம்.
- ஆலய தரிசனம், கடவுளுக்கு அபிஷேக ஆராதனை, புனித நீராடுதல், நீர் நிலைகளை கடந்து செல்லுதல், புத்தாடை புது ஆபரணம் அணிவது, சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது, விருந்து உணவு சாப்பிடுதல், ஒளியுடன் கூடிய பிரகாசமான பொருள்களை காண்பது, மலைமேல் ஏறிச் செல்வது, மழை பெய்தலை காணுதல், பயிர்களை காணுதல், கடவுள் சிலைகள், படங்கள், உயிருடன் இருக்கும் தாயார், தகப்பனார், மனைவி குழந்தைகள், கன்னிப் பெண், பறவை, சிகப்பு, வெண்மை, மஞ்சள் நிற மலர்கள் அலங்காரம் செய்த பெண், பசு காளை, கண்ணாடி , பலாமரம், தாமரைப்பூ, பால், கோழி, அன்னம், கொக்கு, பிராமணர், தேர், சப்பரம், திருவிழா, கோபுரம் ஆகியவை சுப கனவுகள் ஆகும். இதனால் நன்மை ஏற்படும்.
- பொருட்கள் உடைதல், கட்டிடம் இடிந்து விழல், மரம் சாய்தல், மலைசரிதல், வெள்ளம் பெருகி அடித்துச் செல்லுதல், விபத்துக்கள், விலங்குகள் கடித்து சண்டையிடுதல், மனிதர்கள் தகாத வார்த்தை கூறி சண்டையிடுதல், படங்கள் உடைதல், சிலைகள் உடைதல், இடறி விழுதல், மொட்டை தலை, மரம் ஏறுதல், மரத்தில் இருந்து அல்லது உயரமான இடத்திலிருந்து கீழே விழுதல், தலைவிரி கோலமாக ஒப்பாரி வைக்கும் பெண், புற்று, நெசவுதறி, எண்ணெய், இரும்பு பருத்தி, குரங்கு, கழுதை சர்ப்பம், விலங்குகள் துரத்துதல், ரத்தக்ககரையுள்ள ஆடை, பாம்பு விரட்டுதல், பாம்பு விலங்குகள், பறவைகள் ஆகியவற்றை அடித்துக் கொல்லுதல், காவல்நிலையம், நீதிமன்றத்திற்கு செல்லுதல், இடுகாடு, துர்தேவதை, சாத்தான் பூஜை செய்தல், மாந்திரீக வேலை செய்தல், விலங்குகள் தோலுரித்தல், பெண்களை அடித்துத் துன்புறுத்துதல், இறந்தவர்கள் கனவில் வருவது, காலி மனை, வறண்ட நிலம் ஆகியவை அடிக்கடி தீய கனவுகளாக வந்தால் ஏதேனும் சம்பவங்கள் நிகழக்கூடும்.
- இரவு 12 மணி முதல் 4 மணிவரை பின்னிரவு காலமாகும். 12 மணி முதல் 2 மணி வரை காணும் கனவுகள் ஒரு வருட கால அளவிலும் பின்னிரவு 2 மணி முதல் அதிகாலை 4 மணி வரை காணும் கனவுகள் 6 மாதங்களுக்குள்ளாகவும், அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரை காணும் கனவுகள் உடனே நிறைவேறும்.
- பலவீனமான உடல்நிலை மற்றும் மனநிலையும் கனவுகளுக்கு காரணம் என்பதால் உடற்பயிற்ச்சியும், மனபயிற்சியும், மனதிற்கு இதம் தரும் யோகா, மூச்சுபயிற்சி, நடைப்பயிற்சி, செய்து மனதினை பக்குவப் படுத்திக் கொண்டால் தூக்கத்தில் கனவுகள் வந்து தொல்லை தருவதில்லை.
- சாத்வீக உணவுகளை உண்டு வாத, பித்த மற்றும் சிலேத்தும நாடிகளினை சரியாக பேணி காக்கவேண்டும்.
- இரவு படுக்கைக்கு செல்லும் முன் ராம நாமம் மற்றும் ஆஞ்சநேயர் வழிபாடு செய்ய வேண்டும்.
- இரவு துங்கும் முன் சித்தர்களை வணங்கி தியானம் செய்து வேண்டியதை கேட்க கனவில் அல்லது காலையில் பதில் கிடைக்கும். மரணம் தொடர்பான கனவு கண்டால் மகா மாருத்யுஞ் ஜய மந்திர பாராயணம் செய்தல் மனம் இலகுவாகும்.
- மகா மிருத்யுஞ் ஜய மந்திரம் :
- ஓம் த்ரயம்பகம் யஜாமகே ஸுகந்திம் புஷ்டிவர்த்தனம்
- உர்வாருகமிவ பந்தனான் மிருத்யோர் முக்ஷிய மாம்ருதாத்
- இதற்கும் மேல் மன பாரம் இருந்தால் சர்வம் கிருஷ்ணர்பணம் என்று வாய் விட்டு சொன்னால் கிருஷ்ணன் பார்த்துக் கொள்வார்.
- சிவன் கோவிலில் நெய் தீபம் இடுதல். படுக்கை அறையின் வட கிழக்கு பகுதியில் ஒரு பாத்திர நீரில் உப்பு இட்டு வைக்கவும். தினமும் தண்ணீர், உப்பு மாற்ற வேண்டும்.