சிறப்புக் கட்டுரைகள்

ரஜினியின் ரகசிய ஆன்மீகம்- நான் பொல்லாதவன், பொய் சொல்லாதவன்!

Published On 2025-11-20 17:15 IST   |   Update On 2025-11-20 17:16:00 IST
  • ரஜினியுடன் லட்சுமி, ஸ்ரீபிரியா, சுருளிராஜன், டெல்லிகணேஷ் உள்பட பலர் நடித்திருந்தனர்.
  • படத்தில் ரஜினிக்கு முரட்டு இளைஞன் வேடம்.

ரஜினி-லதா 1980-ம் ஆண்டு மத்தியில் காதல் ஜோடியாக சிறகடித்து பறந்துக் கொண்டிருந்தனர். தினமும் அவர்கள் போனில் பேசிக் கொள்வார்கள். நேரம் கிடைக்கும் போது சேர்ந்து விழாக்களுக்கு செல்வதை வழக்கத்தில் வைத்திருந்தனர். 3.7.1980-ல் வெளியான "காளி" படத்தின் முதல் காட்சியை அவர்கள் இருவரும் சேர்ந்து பார்த்தனர்.

இப்படி காதலில் ரஜினி தீவிரமாக இருந்தாலும் படங்களில் நடிப்பதிலும் கவனம் செலுத்தினார். அந்த சமயத்தில் அவரிடம் முக்தா சீனிவாசன் இயக்கிய "பொல்லாதவன்" படமும், ஏ.வி.எம். நிறுவனத்தின் "முரட்டுக் காளை" படமும் கைவசம் இருந்தன. அதில் ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் பொல்லாதவன் படப்பிடிப்பு சென்னை, பெங்களூர், சிம்லா நகரங்களில் படமாக்கப்பட்டது.

முதலில் இந்த படத்துக்கு எரிமலை என்று பெயர் வைத்திருந்தனர். பிறகு சென்டிமெண்ட் காரணமாக அந்த படத்தின் பெயரை பொல்லாதவன் என்று மாற்றி இருந்தனர். அந்த படத்தில் ரஜினியுடன் லட்சுமி, ஸ்ரீபிரியா, சுருளிராஜன், டெல்லிகணேஷ் உள்பட பலர் நடித்திருந்தனர். படத்தில் ரஜினிக்கு முரட்டு இளைஞன் வேடம்.

எஸ்டேட் ஒன்றில் வேலைக்கு செல்லும் லட்சுமி, ரெயிலில் வரும்போது பலாத்காரம் செய்ய முயற்சிக்கும் ஒரு மர்ம மனிதனை பார்த்து விடுவார். அவர் பற்றிய தகவல்களை பின்னணியாகக் கொண்டு பொல்லாதவன் படம் தயாரிக்கப்பட்டு இருந்தது.

பொல்லாதவன் படத்தின் பெரும்பாலான காட்சிகள் மைசூர் பகுதிகளில் படமாக்கப் பட்டன. இதற்காக ரஜினி, ஸ்ரீபிரியா, லட்சுமி ஆகியோர் பெங்களூரில் தங்கியிருந்து படப்பிடிப்புக்கு சென்று வந்தனர். பெங்களூரில் இருந்து காரில் புறப்படும்போது லட்சுமியிடம் ரஜினி ஒவ்வொரு பகுதியாக காட்டி அங்கெல்லாம் தான் சிறுவயதில் சுற்றி அலைந்ததை தெரிவித்தார்.

ஒரு இடத்தை சுட்டிக்காட்டி அங்கு கூலி வேலை செய்ததை நினைவுப்படுத்தினார். அந்த கூலி வேலைக்கு தினமும் 3 ரூபாய் கிடைத்ததையும் ரஜினி சொன்ன போது லட்சுமிக்கும், ஸ்ரீபிரியாவுக்கும் பிரமிப்பாக இருந்தது. ஒரு தடவை பெங்களூரில் லட்சுமி நடித்து வெளியான படத்தை பார்க்க கூலி வேலை செய்து கொண்டிருந்த நிறுவனத்தில் 15 ரூபாய் முன்பணம் வாங்கிக் கொண்டு சென்றதை கூறினார்.

ரஜினி சிறுவயதில் கஷ்டப்பட்டதை எதையும் மறைக்காமல் சொன்னதை பார்த்து லட்சுமிக்கு மேலும் வியப்பாக இருந்தது. இந்த படத்தின் "அதோ வாரான்டி வாரான்டி.... வில் ஏந்தி ஒருத்தன்...." பாடல் காட்சி காஷ்மீரில் படமாக்கப்பட்டது. அங்குள்ள ஏரியில் படமாக்கப்பட்டபோது ஒளிப்பதிவாளர் கர்ணனின் மோதிரம் தண்ணீருக்குள் தவறி விழுந்து தொலைந்து போனதை அறிந்து ரஜினி வருத்தப்பட்டார்.

தமிழ்நாட்டுக்கு திரும்ப டெல்லிக்கு வந்ததும் அவர் கர்ணனை அழைத்துச் சென்று அதே போன்று ஒரு மோதிரம் வாங்கிக் கொடுத்து அவரை மகிழ்ச்சிப்படுத்தினார். இதைப் பார்த்து முக்தா சீனிவாசனும், அவரது குடும்பத்தினரும் ரஜினியின் பெருந்தன்மையை நினைத்து ஆச்சரியப்பட்டனர்.

1980-ம் ஆண்டு தீபாவளி தினத்தன்று வெளியான பொல்லாதவன் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்த படத்தில் இடம் பெற்ற "நான் பொல்லாதவன்... பொய் சொல்லாதவன்..." என்ற பாடல் அவரது ரசிகர்களிடம் அமோக ஆதரவை பெற்றது. இந்த பாடலை ரஜினிக்காகவே சிறப்பான வரிகளை அமைத்து கண்ணதாசன் எழுதி இருந்தார். அந்த பாடல் வரிகளை பார்த்தாலே அது உங்களுக்கு தெரியும்....

நான் பொல்லாதவன்....

பொய் சொல்லாதவன்...

என் நெஞ்சத்தில்

வஞ்சங்கள் இல்லாதவன்...

வீண் வம்புக்கும்

சண்டைக்கும் செல்லாதவன்

கை கட்டி, வாய்மூடி, யார் முன்னும்

நான் நின்று ஆதாயம் தேடாதவன்,

அந்த ஆகாயம் போல் வாழ்பவன்…

வானத்தில் வல்லூறு வந்தாலே கோழிக்கும்

வீரத்தை கண்டேனடி…

ஞானத்தை பாதிக்கும்

மானத்தை சோதித்தால்

நான் என்ன செய்வேனடி…

நானுண்டு வீடுண்டு வாழ்வுண்டு நாடுண்டு

என்றேதான் வாழ்ந்தேனடி

நாளாக நாளாக தாளாத கோபத்தில்

நான் வேங்கை ஆனேனடி...

இன்பங்கள் துன்பங்கள் சமமாக உருவாக

இதுபோல ஆனேனடி…- என்ற அந்த பாடலில் ரஜினியின் ஆட்டம் ரசிகர்களை கவர்ந்தது.

இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ரஜினி நடித்து வந்த "முரட்டுக்காளை" படமும் தமிழக ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. முரட்டுக்காளை படத்தில் நடிப்பதற்காக ரஜினிக்கு ஏ.வி.எம். நிறுவனத்தின் அதிபர் ஏ.வி.மெய்யப்ப செட்டியார் 3 மடங்கு அதிக சம்பளம் கொடுத்தார். அது மட்டுமின்றி 9453 என்ற எண் கொண்ட வெளிநாட்டு கார் ஒன்றையும் பரிசாக வழங்கினார்.

முள்ளும் மலரும் படத்துக்கு ரூ.35 ஆயிரம், பைரவி படத்துக்கு ரூ.50 ஆயிரம் சம்பளம் வாங்கிய ரஜினிக்கு முரட்டுக்காளை படத்தில் நடித்ததற்கு லட்சம் ரூபாய்க்கு மேல் சம்பளம் கிடைத்தது. பஞ்சு அருணாசலம் கதை, வசனம், பாடல்கள் எழுதிய அந்த படத்தை எஸ்.பி.முத்துராமன் இயக்கி இருந்தார்.

கிராமத்து கதை கொண்ட இந்த படத்தில் ரஜினி ஏழை இளைஞனாக நடித்து இருந்தார். அவருக்கு ஜோடியாக ரதி நடித்திருந்தார்.

கிராமத்தில் வாழும் பண்ணையார் தனது முரட்டுக் காளையை யார் அடக்குகிறார்களோ அவர்களுக்கு தனது தங்கையை திருமணம் செய்து கொடுப்பதாக அறிவிப்பார். ரஜினி அந்த காளையை அடக்கி விடுவார். ஆனால் பண்ணையார் தங்கையை திருமணம் செய்ய மறுப்பார். அதன் பிறகு நடப்பதுதான் கதை.

175-க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகனாக நடித்து தனி இடம் பெற்று இருந்த ஜெய்சங்கர் முதல் முதலாக இந்த படத்தில் பண்ணையாராக வில்லன் வேடத்தில் நடித்தார். இந்த படத்தின் பணிகள் தொடங்கிய போது ஏ.வி.எம். மெய்யப்ப செட்டியார் மரணம் அடைந்தார். என்றாலும் படஅதிபர் ஏ.வி.எம்.சரவணன் பொறுப்பேற்று இந்த படத்தின் பணிகளை சிறப்பாக மேற்கொண்டார்.

இதனால் உற்சாகம் அடைந்த ரஜினி இந்த படத்தில் ஒவ்வொரு காட்சியிலும் தனது திறமையை வெளிப்படுத்தினார். பஞ்சு அருணாசலமும், எஸ்.பி.முத்துராமனும் ரஜினியை நன்கு உணர்ந்தவர்களாக இருந்த தால் முரட்டுக்காளை படத்தில் அவரை எந்த அளவுக்கு வித்தியாசப்படுத்தி காட்ட முடியுமோ அந்த அளவுக்கு காட்டினார்கள்.

அதனால்தான் ஓடும் ரெயில் மீது ஜெய்சங்கரும், ரஜினியும் சண்டை போடும் காட்சிகளில் கூட ரஜினி டூப் போடாமல் தானே நடித்து முடித்தார். இந்த படத்தில் பஞ்சு அருணாசலம் எழுதி இளையராஜா இசையமைத்த பாடல்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றன. குறிப்பாக "பொதுவாக என் மனசு தங்கம்..." பாடல் பட்டிதொட்டிகளில் எல்லாம் அனல் பறக்கும் வகையில் இருந்த தோடு ரசிகர்களின் விருப்பப் பாடலாகவும் அமைந்தது.

அந்த பாடல் வரிகள் ஒவ்வொன்றும் ரஜினிக்காகவே பஞ்சுஅருணாசலம் எழுதியதாகும். ரஜினியுடன் பழகி அவரது வாழ்க்கையை முழுமையாக அறிந்து வைத்திருந்த பஞ்சு அருணாசலம் அதையெல்லாம் அந்த பாடலில் கொட்டி இருந்தார். அந்த பாடலை பார்த்தாலே அது உங்களுக்கு தெரியவரும்....

அண்ணனுக்கு ஜே…

காளையனுக்கு ஜே…

பொதுவாக என் மனசு தங்கம்…

ஒரு போட்டியின்னு

வந்து விட்டா சிங்கம்…

பொதுவாக என் மனசு தங்கம்…

ஒரு போட்டியின்னு

வந்து விட்டா சிங்கம்…

உண்மைய சொல்வேன்…

நல்லத செய்வேன்…

வெற்றிமேல் வெற்றி வரும்…

ஆடுவோம் பாடுவோம்

கொண்டாடுவோம்…

ஆ… ஆனந்தம் காணுவோம் எந்நாளுமே…

முன்னால சீறுது மயிலக்காளை…

பின்னால பாயுது மச்சக்காளை…

முன்னால சீறுது மயிலக்காளை… ஆ…

பின்னால பாயுது மச்சக்காளை…

அடக்கி ஆளுது முரட்டுக்காளை…

முரட்டுக்காளை… முரட்டுக்காளை…

நெஞ்சுக்குள் பயமும் இல்ல…

யாருக்கும் அச்சம் இல்ல…

வாராதோ வெற்றி என்னிடம்…

விளையாடுங்க உடல் பலமாகுங்க…

பொறந்த ஊருக்கு புகழை சேறு…

வளந்த நாட்டுக்கு பெருமை தேடு…

பொறந்த ஊருக்கு புகழை சேறு…

வளந்த நாட்டுக்கு பெருமை தேடு…

நாலுபேருக்கு நன்மைசெய்தா…

கொண்டாடுவார் பண்பாடுவார்…

என்னாலும் உழைச்சதுக்கு…

பொன்னான பலன் இருக்கு…

ஊரோட சேர்ந்து வாழுங்க…

அம்மன் அருள் சேரும்…

இனி நம்ம துணையாகும்…

ஆடலாம் பாடலாம் கொண்டாடலாம்… ஹே…

ஆனந்தம் காணுவோம் எந்நாளுமே…

இந்த பாடலால் முரட்டுக்காளை படம் வெள்ளி விழா படமாக மாறியது. அதன் பிறகு தீ, கழுகு ஆகிய படங்களில் ரஜினி கவனம் செலுத்தினார். அப்போது லதாவை திருமணம் செய்ய வேண்டிய நேரம் வந்து விட்டதாக நினைத்தார். உடனடியாக ரஜினி அதற்கான அறிவிப்பை வெளியிட்டார். அதுபற்றிய ருசிகர தகவல்களை நாளை காணலாம்.

Tags:    

Similar News