ரஜினியின் ரகசிய ஆன்மீகம்- ரஜினியை நிராகரித்த பெண்!
- ரஜினி அரசு வேலையில் இருக்கிறார் என்று சொல்லப்பட்டதும் நிறைய மணப்பெண்ணின் ஜாதகங்கள் வந்தன.
- ரஜினி சில படங்களில் தீவிரமாக நடித்துக் கொண்டிருந்தார்.
சூப்பர் ஸ்டார் ரஜினி பெங்களூரில் சிவாஜி ராவ் என்ற பெயரில் கண்டக்டராக பணிபுரிந்து வந்தபோது நடந்த சம்பவம் இது....
ரஜினிக்கு அந்த கண்டக்டர் வேலையை அவரது 2-வது அண்ணன் நாகேஸ்வரராவ் தனது உறவினர் மூலம் பெற்றுக் கொடுத்து இருந்தார். ரஜினிக்கு அரசு வேலை கிடைத்ததும் மகிழ்ச்சி தாங்க முடியவில்லை.
கண்டக்டர் பணியில் அவருக்கு மாதம் 300 ரூபாய் சம்பளம் நிர்ணயம் செய்யப்பட்டது. தினமும் 1 ரூபாய் பேட்டா வழங்கப்படும் என்றும் பெங்களூர் அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் சொன்ன போது ரஜினி அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
தனது எதிர்கால வாழ்க்கைக்கு இந்த சம்பளம் போதும் என்று ரஜினி நினைத்தார். அதனால்தான் அவரால் கண்டக்டர் பணியை மிக மிக ஜாலியான மனநிலையில் செய்ய முடிந்தது. 10ஏ பஸ்சில் அவரது கண்டக்டர் பணி புது, புது ஸ்டைல்களுடன் புகழ் பெற்றதாக மாறியது.
இதனால் மகிழ்ச்சி அடைந்த ரஜினியின் தந்தை ரனோஜிராவ் தனது மகனுக்கு உரிய வயதில் திருமணம் செய்து வைத்து விடவேண்டும் என்று நினைத்தார். இதுபற்றி அவர் ரஜினியிடம் சொன்ன போது ரஜினிக்கு சற்று தயக்கம் ஏற்பட்டது. இப்போது என்ன அவசரம் என்று கேட்டார்.
முதலில் அதை யதார்த்தமாக எடுத்துக் கொண்ட ரனோஜிராவ் அடுத்த சில வாரங்களில் ரஜினிக்கு உடனே பெண் பார்த்து திருமணம் செய்து வைத்து விடவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். ரஜினி தயங்கியபோது, "டேய் இப்போதுதான் அரசாங்க வேலைக்கு போக ஆரம்பித்து விட்டாயே? மாதம் தோறும் உனக்கு பணம் வருகிறது. எனவே தைரியமாக திருமணம் செய்து கொள்" என்றார்.
அதன் பிறகுதான் ரஜினிக்கு சரி திருமணம் செய்து கொள்ளலாம் என்ற மனநிலை லேசாக உருவானது. மணப்பெண் தேடட்டுமா? என்று ரனோஜிராவ் கேட்டபோது ரஜினியால் உறுதியான பதிலை சொல்ல முடியவில்லை. இப்போது என்ன அவசரம் என்று மீண்டும் கேட்டார்.
அதற்கு ரனோஜிராவ் திருமணத்தை எந்த காலத்திலும் தள்ளிப்போடக் கூடாது. அதை உரிய பருவத்தில் செய்து விட வேண்டும். நான் உனக்கு மணப்பெண் தேட ஆரம்பித்து விட்டேன் என்றார்.
தந்தையிடம் காணப்பட்ட உறுதியை பார்த்த ரஜினி அதன் பிறகு திருமணத்துக்கு மறுப்பு சொல்லவில்லை. இதையடுத்து ரனோஜிராவ், மூத்த அண்ணன் சத்தியநாராயணராவ், இளைய அண்ணன் நாகேஸ்வரராவ் உள்பட குடும்பத்தில் உள்ள அனைவரும் ரஜினிக்கு மணப்பெண் தேட ஆரம்பித்து விட்டனர்.
நிறைய உறவினர்கள், ஜோதிடர்கள் மற்றும் நண்பர்கள் வட்டாரங்களில் ரனோஜிராவ் தாமாக முன் சென்று ரஜினியின் ஜாதகத்தை கொடுத்து மணமகள் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தினார். ரஜினி அரசு வேலையில் இருக்கிறார் என்று சொல்லப்பட்டதும் நிறைய மணப்பெண்ணின் ஜாதகங்கள் வந்தன.
அதில் பெரும்பாலானவற்றை ரனோஜிராவ் கழித்து விட்டார். பல ஜாதகங்கள் இருவருக்கும் பொருத்தம் இல்லை என்று கழிக்கப்பட்டது. நீண்ட தேடுதல் வேட்டைக்கு பிறகு பெங்களூர் அருகே ஒரு சிறிய கிராமத்தில் உள்ள பெண்ணின் ஜாதகம் ரஜினி ஜாதகத்துடன் பொருத்தமாக இருந்தது.
ரனோஜிராவ் அந்த குடும்பம் பற்றி தீவிரமாக விசாரித்தார். அந்த குடும்பத்தினர் தங்களை போலவே கெயிக்வாட் பரம்பரையில் மிக சிறப்பாக வாழ்ந்து இருந்தது தெரிய வந்தது. இதனால் அந்த குடும்பத்துடன் சம்பந்தம் வைத்துக் கொள்ளலாம் என்று ரஜினியின் தந்தை ரனோஜிராவுக்கு விருப்பமாக இருந்தது.
ஆனால் பெங்களூருக்கு அருகே கிராமத்தில் உள்ள பெண்ணை நேரில் திருமணம் செய்வதா? என்று ரஜினிக்கு தீவிர யோசனையாக இருந்தது. அந்த பெண்ணை அவரால் ஏற்கவும் இயலவில்லை. அதே சமயத்தில் புறக்கணிக்கவும் இயலவில்லை. எந்த முடிவும் எடுக்க முடியாமல் மனதுக்குள் தவித்தப்படி மவுனமாக இருந்தார்.
ஆனால் ரனோஜிராவும், சத்திய நாராயணராவும் விடவில்லை. ரஜினியை வலுக்கட்டாயமாக அந்த பெண்ணை பார்க்க அழைத்து சென்றனர். பெண் உனக்கு பிடித்து இருந்தால் திருமணம் ஏற்பாடு செய்யலாம். இல்லையென்றால் விட்டுவிடலாம் என்று கூறினார்கள்.
இதனால் அவர்களுடன் ரஜினி பெண் பார்க்க சென்றார். வழக்கம் போல பெண் பார்க்கும் படலம் நடந்தது. அந்த பெண்ணைப் பார்த்ததும் ரஜினி மனம் பல்டி அடித்து விட்டது. அவர் மனதில் மாற்றம் ஏற்பட்டது. அவருக்கு அந்தப் பெண்ணை உண்மையிலேயே மிகவும் பிடித்து போய் விட்டது.
அந்த பெண் ரொம்ப குண்டாகவும் இல்லை ஒல்லியாகவும் இல்லை. இளம் வயதுக்குரிய சரியான உடல் அமைப்புடன் இருந்தார். தங்க நிறமாக காணப்பட்டார். முகத்தில் லட்சுமி கடாட்சம் தாண்டவம் ஆடியது. மராத்தியை பூர்வீகமாக கொண்ட கெயிக்வாட் இன பெண்கள் எப்படி இருப்பார்களோ அதே முக களையுடன் காணப்பட்டார்.
அந்த பெண்ணை பார்த்ததும் ரஜினி அப்படியே சரண்டர் ஆகி விட்டார். பெண்ணின் பெயர் என்ன என்று கேட்கச் சொன்னார். அந்த பெயரை கேட்டதும் ரஜினிக்கு "ஆயிரம் தாமரை மொட்டுக்களே... வந்து ஆனந்த கும்மிகள் கொட்டுங்களே, இங்கிரண்டு ஜாதி மல்லிகை..." என்ற உணர்வுடன் மனம் குதூகல மானது. அதற்குப் பிறகு அவருக்கு வார்த்தைகள் வரவில்லை. பஸ் புறப்பட டபுள் விசில் கொடுப்பது போல எனக்கு பெண் பிடித்து விட்டது என்று இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் தனது சம்மதத்தைத் தெரிவித்தார்.
இந்த பெண்ணை திருமணம் செய்து வையுங்கள் என்று ரஜினியால் நேரடியாக தந்தையிடம் சொல்ல இயலவில்லை. வெட்கம் அவரைத் தடுத்தது. எனவே மணப்பெண் வீட்டு முன் அறையில் சகஜமாக அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்த தனது 2 அண்ணன்களிடமும் ரஜினி ஜாடைமாடையாக தனது விருப்பத்தை சொன்னார். அவரது மூத்த அண்ணன் சத்திய நாராயணராவிடம் இந்த பெண்ணையே பேசி முடித்து விடலாம் என்றார்.
அதற்கு சத்தியநாராயண ராவ் சிரித்துக் கொண்டே "சரி அப்பாவிடம் சொல்கிறேன்" என்றார். ரனோஜிராவுக்கு மகிழ்ச்சியாகவும், திருப்தியாகவும் இருந்தது. அந்த குடும்பத்திேலயே பெண்ணை பேசி முடித்து விடவேண்டியதுதான் என்று தீர்மானித்தார்.
என்றாலும் நாகரீகம் கருதி உடனடியாக தனது முடிவை சொல்லாமல் பெங்களூருக்கு சென்றதும் எங்களது முடிவை சொல்லி அனுப்புகிறோம் என்று கூறி விட்டு புறப்பட்டார். ரஜினி மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்தார்.
அடுத்த நாளே பெண் பார்க்க சென்ற விஷயத்தை போக்குவரத்து கழக நண்பர்களிடம் சொல்லி மகிழ்ச்சியை பகிர்ந்துக் கொண்டார். அன்றைய தினம் முழுக்க அவர் மனதில் அந்த பெண்தான் ஆக்கிரமித்து இருந்தார். மறுநாளும் அந்த பெண் பற்றிய கனவிலேயே அன்றைய நாள் கழிந்தது.
3-வது நாள் தங்கள் குடும்பத்து சம்மதத்தை தெரிவிக்க ஏற்பாடு செய்வார்கள் என்று ரஜினி ஆவலோடு இருந்தார். அந்த சமயத்தில் அந்த பெண்ணின் வீட்டில் இருந்து ஒரு மூத்த உறவினர் ஒருவர் வந்தார். அவர் ரனோஜிராவிடம் ரொம்ப தயங்கி... தயங்கி... பேச்சை ஆரம்பித்தார்.
"பையனை (ரஜினியை) எங்களுக்கு மிகவும் பிடித்து இருக்கிறது. பெரியவர்கள் எல்லோருக்கும் சம்மதம்தான். ஆனால் பெண் கொஞ்சம் தயங்குகிறாள். அவளுக்கு உங்களையும் உங்கள் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரையும் மிகவும் பிடித்து இருக்கிறது. நீங்கள் நடந்து கொண்ட விதம் அவளுக்கு மகிழ்ச்சியாகவே உள்ளது.
ஆனால் பையனைதான் அவள் வேண்டாம் என்கிறாள். பையன் கறுப்பாக இருப்பதாக சொல்கிறாள், குண்டாக இருப்பதாகவும் நினைக்கிறாள். எனவே வேறு பையனை பாருங்கள் என்று சொல்லி விட்டாள். எங்களால் என்ன சொல்வது என்றே தெரியவில்லை. தப்பாக நினைத்துக் கொள்ளாதீர்கள்" என்றார்.
அந்த பெரியவர் சொன்னதை பக்கத்து அறையில் இருந்து ரஜினி கேட்டுக் கொண்டிருந்தார். அவரது மனது சுக்குநூறாக உடைந்தது. அந்த சமயத்திலேயே அவர் மனதுக்குள் ஒருவித வைராக்கியம் எழுந்தது.
திருமணம் செய்தால் நல்ல கலரான, சிவப்பான பெண்ணைதான் திருமணம் செய்ய வேண்டும் என்று மனதுக்குள் சபதமே எடுத்துக் கொண்டார். அது அவருக்குள் ஒரு உறுதியான மனநிலையை உருவாக்கி இருந்தது. சில நாட்களிலேயே அவர் மனதை தேற்றிக்கொண்டார்.
பிறகு கண்டக்டர் பணியில் கவனம் செலுத்த தொடங்கினார். ஆனால் இறை அருளால் அவரது வாழ்க்கை பயணம் கண்டக்டர் பணியில் இருந்து கலையுலக பயணத்துக்கு மாறியது. அவர் நினைத்தது போலவே திருமண வாழ்க்கையும் அமைந்தது. அவர் ஆசைப்பட்டது போலவே நல்ல நிறம் கொண்ட லதா அவருக்கு மனைவியாக வாய்த்தார்.
ஆனால் லதா அவருக்கு மனைவியாக அமைந்தது எல்லாமே தெய்வ செயலால் நடந்தது போலவே இருந்தது. 1980-ம் ஆண்டு ஜூன் மாதத்துக்கு பிறகு ரஜினி சில படங்களில் தீவிரமாக நடித்துக் கொண்டிருந்தார். அதில் ஒரு படம் தில்லுமுல்லு.
அந்த படத்துக்கான படப்பிடிப்பு சென்னையில் பிரபல நடிகை சவுகார் ஜானகி வீட்டில் நடந்தது. அங்குதான் ரஜினியும், லதாவும் சந்தித்தனர். ராமனும், சீதையும் முதன் முதலில் ஒருவரை ஒருவர் கண்டபோது ஏற்பட்ட காதல் பார்வையை, "அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்" என்று கம்பர் மிகச் சிறப்பாக எழுதி இருப்பார். அதே போன்றுதான் ரஜினியும் லதாவும் இருந்தனர். இருவரும் நோக்கினார்கள். உடனே காதல் மலர்ந்தது. அந்த ருசிகரத்தை நாளை பார்க்கலாம்.