சிறப்புக் கட்டுரைகள்

ரஜினியின் ரகசிய ஆன்மீகம்- ரஜினி எடுத்த அதிரடி முடிவுகள்!

Published On 2025-11-16 17:45 IST   |   Update On 2025-11-16 17:45:00 IST
  • தமிழகத்தில் உள்ள பெரிய பட நிறுவனங்கள் மட்டுமே ரஜினி அருகில் செல்ல முடிந்தது.
  • ரஜினியின் இந்த முடிவு தமிழ் திரை உலகையே மிரள வைத்தது.

எந்த ஒரு விஷயமாக இருந்தாலும், முடிவு எடுக்கும் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். அதற்கு 3 அம்சங்கள் முக்கியமாக இருக்க வேண்டும். ஒன்று தெளிந்த மனம். மற்றொன்று நிதானம். மூன்றாவது ஆழ்ந்த நம்பிக்கை.

இந்த மூன்று குணமும் ஒருமித்த நிலைக்கு வரும்போது அதிரடி முடிவுகளை கூட அனாசயமாக அரை நொடியில் எடுத்து விட முடியும். நமது வேத நூல்களும், புராணங்களும் இதுபற்றி ஏராளம் கூறி உள்ளன.

மகாபாரதத்தை யார் ஒருவர் ஆழ்ந்து படித்து, சிந்தித்துப் பார்த்து இருக்கிறாரோ, அவருக்கு அதில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரம் பற்றியும், அந்த கதாபாத்திரங்கள் எடுக்கும் முடிவுகள் பற்றியும் நிச்சயமாக தெரிந்து இருக்கும். ஒரு வரியில் சொல்வது என்றால் பற்றும், பாசமும் முடிவு எடுக்கும் திறனுக்கு எதிரானது என்பது மகாபாரதத்தின் ஒவ்வொரு விஷயத்திலும் காட்டப்பட்டுக் கொண்டே இருக்கும்.

அதோடு எந்த இடத்தில் எப்படி முடிவு எடுக்க வேண்டும்? எந்த இடத்தில் எப்படி முடிவு எடுக்கக் கூடாது என்பதையும் மகா பாரதம் நமக்கு காட்டுகிறது. துரியோதனன் செய்த தவறுகளை தடுக்க அவனது தந்தை திரிதராஷ்டிரன் முடிவு எடுக்காமல் பாசத்தில் கிடந்தான். அதுவே அவனது வம்சம் அழிய அடிப்படையாக இருந்தது.

குந்திக்கு குழந்தை பிறந்ததை கேட்டதும் காந்தாரி ஆத்திரத்தில் முடிவுகள் எடுத்தாள். இதனால் அவளுக்கு பிறந்த கவுரவர்களான 100 குழந்தைகளும் வெறுப்புணர்வு கொண்டவர்களாக வளர்ந்தனர்.

பீஷ்மர் பதட்டத்தில் முடிவுகள் எடுத்து அவஸ்தைப்பட்டார். சகுனி எடுத்த முடிவுகள் துரியோதனனை வீழ்ச்சிக்கு கொண்டு சென்றது.

நல்ல முடிவு என்பது மற்றவர்கள் தலையீடு இல்லாமல், குழப்பமான மனநிலையில் இல்லாமல் இருக்கும் போது தான் கிடைக்கும். எனவே எந்த ஒரு விஷயத்திலும் நாம் உணர்வுப்பூர்வமாக முடிவு எடுக்கறோமா, அறிவுப்பூர்வமாக முடிவு எடுக்கிறோமா என்பதுதான் முக்கியமானது.

சூப்பர் ஸ்டார் ரஜினி இதெல்லாம் தெரியாதவரா? சிறு வயதிலேயே அவர் தாயாரிடம் அதிகம் கேட்டது மகாபாரத கதைகள்தான். ராமகிருஷ்ணா மடம் பள்ளியில் படித்த போதும் அவருக்குள் மகாபாரத நிகழ்வுகள் ஆழமாக பதியவைக்கப்பட்டன.

அதன் பலனாகத்தான் 1979-ம் ஆண்டு கமலுடன் சேர்ந்து நடிக்காமல் இனி தனியாக நடிக்க வேண்டும் என்ற முடிவை அவரால் முழு மனதுடன் எடுக்க முடிந்தது. அவர் மனநலம் பாதிக்கப்பட்டு மற்றவர்களை திடீரென தாக்கிய பிறகு அடுத்த சில நிமிடங்களில் அமைதி பெற்று இயல்பு நிலைக்கு திரும்பியதும் சில நல்ல முடிவுகளை அவரால் தன்னிச்சையாக எடுக்க முடிந்தது.

1980-ம் ஆண்டு மனநல பாதிப்பு சுவடே இல்லாமல் புது மனிதனாக அவர் இயங்கத் தொடங்கிய போது அதிரடியாக மற்றொரு முடிவை எடுத்தார். அது.... தன்னை நாடி வந்த நூற்றுக்கணக்கான படத் தயாரிப்பாளர்களை சிறப்பாக கையாண்ட விதம்தான். பெரும்பாலான படத் தயாரிப்பாளர்கள், ரஜினி எவ்வளவு பணம் கேட்டாலும் கொட்டி கொடுக்கத் தயாராக இருந்தனர்.

"நீங்கள் நடிப்பதாக தேதி கொடுத்து ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டால் மட்டும் போதும், மற்ற விஷயங்கள் அனைத்தையும் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்" என்றனர். அத்தகைய படத் தயாரிப்பாளர்களை ரஜினி கண்ணை மூடிக் கொண்டு நிராகரித்தார்.

தன்னையும், தனது பெயரையும் மூலதனமாக வைத்துக் கொண்டு லட்சம், லட்சமாக பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் தன்னைச் சுற்றி வருகிறார்கள் என்பதை ரஜினி புரிந்து கொண்டார். அதோடு புதிய தயாரிப்பாளர்கள் எவ்வளவு வசதியுடையவர்களாக இருந்தாலும், அவர்களுக்கு படத்தை குறித்த காலத்தில் வெளியிட செய்யும் திறன் இருக்குமா? என்ற சந்தேகமும் ரஜினிக்குள் எழுந்தது.

இதையடுத்து அவர் புதிய பட அதிபர்களை ஒட்டு மொத்தமாக நிராகரித்து அதிரடி முடிவு எடுத்தார். ரஜினி எடுத்த இந்த முடிவை அறிந்து எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெய்சங்கர், முத்துராமன், நாகேஷ், சிவக்குமார் உள்பட திரையுலக பிரமுகர்கள் அனைவரும் ஆச்சரியப்பட்டனர். அதோடு தமிழ் திரை உலகிலும் பரபரப்பு ஏற்பட்டது.

அடுத்து ரஜினி இன்னொரு முடிவு எடுத்தார். இனி கைவசம் 10 படங்கள், 12 படங்கள் என்று வைத்திருக்கக் கூடாது. நிம்மதி இல்லாமல் போய் விடும். எனவே மூன்று அல்லது நான்கு படங்களை மட்டுமே கைவசம் வைத்துக் கொண்டு நடிக்க வேண்டும் என்று முடிவு செய்தார்.

இதைத் தொடர்ந்து ரஜினி எடுத்த அடுத்த முடிவு மிகப்பெரிய ஹைலைட்டாக அமைந்தது. அதாவது தனக்கான சம்பளத்தை தானே நிர்ணயிக்க வேண்டும் என்ற முடிவாகும். படங்களில் நடிக்க தனக்குரிய சம்பளத்தை வேறு ஒருவர் முடிவு செய்யக்கூடாது என்பதில் அவர் உறுதியான மன நிலைக்கு வந்தார்.

ரஜினி எடுத்த இந்த புதிய முடிவுகளால் அவரைத் தேடி வரும் படத் தயாரிப்பாளர்கள் எண்ணிக்கை சல்லடை போட்டு சலித்து எடுத்து விட்டது போல குறைந்தது. தன்னை கதாநாயகனாக முன் நிறுத்தி, படம் எடுத்து, அந்த படத்தை வெற்றி பெற செய்கிற தகுதியும், திறமையும் யாருக்கு உள்ளதோ அவர்களுக்கு மட்டுமே கால்ஷீட் கொடுப்பது என்று முடிவு செய்தார்.

1980-ல் அவரது செயல்பாடுகள் அனைத்தும் அத்தகைய படத் தயாரிப்பாளர்கள் யார்-யார் இருக்கிறார்கள் என்று ஆய்வு செய்வதிலேயே இருந்தது. இதனால் தமிழகத்தில் உள்ள பெரிய பட நிறுவனங்கள் மட்டுமே ரஜினி அருகில் செல்ல முடிந்தது.

ரஜினியும் அதைத்தான் எதிர் பார்த்து காத்திருந்தார். தனக்கு எந்த விதத்திலும் தொந்தரவு கொடுக்காத கோடீஸ்வர முதலாளிகளுக்கே இனி தன் கால்ஷீட் தரப்படும் என்று துணிச்சலாக வெளிப்படையாக அறிவித்தார்.

ரஜினியின் இந்த முடிவு தமிழ் திரை உலகையே மிரள வைத்தது. இந்த முடிவால் ரஜினியிடம் இருந்து வந்த மன அழுத்தம் கணிசமான அளவுக்குக் குறைந்தது. பில்லாவின் இமாலய வெற்றிக்குப் பிறகு வந்த தேவர் பிலிம்சின் அன்புக்கு நான் அடிமை படம் சுமாராக ஓடியது.

அதன் பிறகு மகேந்திரன் இயக்கத்தில் "ஜானி" என்ற படத்தில் ரஜினி நடித்தார். இந்த படத்தில் ரஜினிக்கு இரட்டை வேடம். கதாநாயகியாக ஸ்ரீதேவி நடித்தார். ரஜினியும், ஸ்ரீதேவியும் போட்டி போட்டு நடித்தனர். இந்த படம் தயாரிப்பில் இருந்த போது, ரஜினியும் ஸ்ரீதேவியும் காதலிப்பதாகவும், விரைவில் அவர்கள் திருமணம் செய்து கொள்வார்கள் என்றெல்லாம் கிசுகிசுக்கள் பரவியது.

இதுகுறித்து டைரக்டர் மகேந்திரன் தினத்தந்திக்கு அளித்த பேட்டியில் அழகாக குறிப்பிட்டிருந்தார். அந்த பேட்டி வருமாறு:-

ரஜினி புகழின் உச்சத்துக்கு வந்து கொண்டிருந்தபோது ஒரு நடிகையை விரும்பினார். அதுபற்றி என்னிடம் கருத்து கேட்டார். நானும் அந்த நடிகை உங்கள் மனைவியாக வந்தால் நன்றாக இருக்கும் என்று சொன்னேன். ஆனால் அந்த நடிகை வீட்டின் கிரகபிரவேசத்துக்கு சென்று இருந்த நேரத்தில் திருமண பேச்சை தொடங்கலாம் என்று நினைத்தபோது மின்சாரம் போய் விட்டது. இதனால் அவர் அந்த நடிகையை திருமணம் செய்யவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்வுக்கு பிறகு தனது தத்து தாய் ரெஜினாவிடமும் ரஜினி கருத்து கேட்டார். ஆனால் அவரோ "உன் விருப்பப்படி செய்" என்று சொன்னார். இதனால் திரையுலகில் தன்னை விரும்பிய நடிகையை ரஜினி திருமணம் செய்து கொள்ளும் முடிவில் இருந்து மாறினார். இந்தக்கால கட்டத்தில் அவர் நடித்து வெளியான "எல்லாம் உன் கைராசி" படம் வெற்றி பெறவில்லை.

ஆனால் அதற்கு பிறகு வந்த "பொல்லாதவன்" 100 நாட்கள் ஓடியது. அதன் பிறகு ஏ.வி.எம். தயாரிப்பில் வெளிவந்த "முரட்டுக் காளை" 150 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது. அந்த படத்தில் ரஜினி கதாநாயகனாகவும், ஜெய்சங்கர் வில்லனாகவும் நடித்து இருந்தனர். முரட்டுக்காளை படப்பிடிப்பு தொடங்கிய முதல் நாள் ஜெய்சங்கர் காலில் விழுந்து ரஜினி ஆசி பெற்றது பரபரப்பாக பேசப்பட்டது.

ரஜினிக்கு ஜோடிக்கு ரதி நடித்தார். இந்த படத்தில்தான் ரஜினியுடன் ஒய்.ஜி.மகேந்திரனும் சேர்ந்து நடித்து இருந்தார். இந்த படத்தின் வெற்றி ஏ.வி.எம். நிறுவனத்துக்கு மிகப்பெரிய பலனை கொடுத்தது. இதனால் பட அதிபர் ஏ.வி.எம். சரவணன் ரஜினியை புகழ்ந்து பேசினார்.

அவர் கூறுகையில், "ரஜினி எதையும் வெளிப்படையாக பேசுபவர். கஷ்டப்பட்ட காலத்தில் சிறு பொய் கூட அவர் சொன்னது கிடையாது. வசதி வந்த பிறகும் அவர் பொய் பேசாமல் வாழ்ந்தார். அடுத்தவர் மனம் நோகும்படி நடக்கக் கூடாது என்பதில் அவர் கவனமாக இருந்தார்.

முரட்டுக்காளை படத்தில் ஜெய்சங்கர் வில்லனாக அறிமுகப்படுத்தப்பட்ட போது ரஜினி அவரிடம் மிக மிக பணிவாக நடந்து கொண்டார். 150 படங்களில் கதாநாயனாக நடித்த ஜெய்சங்கருக்கு உரிய மரியாதையை கொடுக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டே இருந்தார். படத்தின் விளம்பரங்களில் அவருக்குரிய முக்கியத்துவத்தை கொஞ்சமும் குறைத்து விடாதீர்கள் என்று பல தடவை கூறினார். இது ஒன்றே ரஜினியின் சிறந்த குணத்துக்கு உதாரணம்" என்றார்.

முரட்டுகாளை படம் வெற்றி ரஜினிக்கு புதிய அந்தஸ்தை கொடுத்து இருந்தது. அப்போது அவருக்கு வயது 30. அவருக்குள் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. கஷ்டப்பட்ட காலத்தில் தன்னை ஒரு பெண், "இவர் கறுப்பாக இருக்கிறார். இந்த மாப்பிள்ளை வேண்டாம்" என்று சொன்னது அவர் மனதுக்குள் மீண்டும் மீண்டும் வந்து போனது.

எனவே நல்ல சிவப்பான பெண்ணைதான் திருமணம் செய்ய வேண்டும் என்று முடிவு செய்தார். ரஜினியை நிராகரித்த பெண் பற்றிய ருசிகர தகவல்களை நாளை பார்க்கலாம்.

Tags:    

Similar News