சிறப்புக் கட்டுரைகள்
null

ரஜினியின் ரகசிய ஆன்மீகம்- ரஜினி விரும்பிய கண்ணதாசன் பாடல்கள்!

Published On 2025-11-15 11:29 IST   |   Update On 2025-11-15 11:30:00 IST
  • பில்லா படத்தில் இடம் பெற்ற மற்றொரு பாடல் அவரது யதார்த்தமான நிலையையும் ரசிகர்களுக்கு காட்டியது.
  • சில கன்னட புத்தகங்களை இன்றும் கூட அவர் மனம் திறந்து பேசுவது உண்டு.

சூப்பர் ஸ்டார் ரஜினி மீது கவிஞர் கண்ணதாசனுக்கு மிகுந்த மதிப்பும், மரியாதையும் இருந்தது. ரஜினியின் வாழ்க்கையையும், குணங்களையும் பிரதிபலிக்கும் வகையில் அவர் பாடல்கள் எழுதினார். இதனால் அவர் மீது ரஜினியும் மிகுந்த பாசம் வைத்து இருந்தார்.

1975-ம் ஆண்டு ரஜினி நடித்த முதல் படமான "அபூர்வ ராகங்கள்" படத்தில் கண்ணதாசன் எழுதிய "ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல் இதயச் சுரங்கத்துக்குள் எத்தனை கேள்வி காணும் மனிதருக்குள் எத்தனை சலனம்-வெறும் கற்பனை சந்தோஷத்தில் அவரது கவனம்" என்ற பாடலில் அந்த படத்தின் மொத்த கதையையும் சொல்லி இருந்தார்.

இந்த பாடலை கேட்டு அர்த்தத்தை தெரிந்துக் கொண்ட ரஜினி பிரமித்துப் போனார். கவிஞர் கண்ணதாசனை பிரமிப்பாக பார்த்தார். அதன் பிறகு கண்ணதாசனின் ஒவ்வொரு வரிகளையும் ரஜினி கூர்மையாக கவனித்து அதை தன் மனதுக்குள் வாங்கிக் கொண்டார். கண்ணதாசனையும் அடிக்கடி சந்தித்து பேச தொடங்கினார்.

அந்தக் காலகட்டத்தில் கண்ணதாசன் திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதிக் கொண்டே "ராணி" வார இதழ் உள்பட 7 வார இதழ்களுக்கு 7 நாட்களுக்கு 7 விதமான தொடர்கதைகளையும் எழுதி வந்தார். இதை அறிந்த ரஜினி ஆச்சரியத்தின் உச்சத்துக்கே போனார்.

கண்ணதாசனின் எழுத்துக்களை தேடி தேடி படித்தார். அர்த்தமுள்ள இந்து மதம் அவரை மிகவும் உருக வைத்தது. இந்த சமயத்தில் பஞ்சு அருணாசலமும் ரஜினிக்கு நிறைய பாடல்கள் எழுத ஆரம்பித்தார். அவரும் ரஜினிக்கு ஏற்ப வரிகளை தனது பாடல்களில் கொண்டு வந்தார்.

1977-ம் ஆண்டு வெளியான "புவனா ஒரு கேள்விக்குறி" படத்தில் இடம் பெற்ற "ராஜா என்பார் மந்திரி என்பார் ராஜ்ஜியம் இல்லை ஆள ஒரு ராணியும் இல்லை வாழ ஒரு உறவுமில்லை அதில் பிரிவுமில்லை அந்தரத்தில் ஊஞ்சல் கட்டி ஆடுகிறேன் நாளும்" பாடல் ரஜினிக்காகவே பஞ்சு அருணாசலம் எழுதியது போல் இருந்தது.

1978-ம் ஆண்டு வெளியான "முள்ளும் மலரும்" படத்தில் "செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்" பாடல் தேசிய விருது பெற்றது. அந்த படத்தில் கங்கைஅமரன் எழுதிய "ராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்லை" என்ற பாடல் ரஜினியின் குணத்தை நூறு சதவீதம் பிரதிபலித்தது. இந்த பாடல் அந்தக்கால கட்டத்தில் அரசியல் ரீதியாகவும் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

"தப்பு தாளங்கள்" படத்தில் கண்ணதாசன் எழுதிய ஒரு பாடல், "அட என்னடா பொல்லாத வாழ்க்கை இதுக்குப்போய் அலட்டிக்கலாமா" என்று தொடங்கும். இந்த பாடலை ரஜினி வரிக்கு வரி ரசித்தார். அந்த பாடலின் கடைசி சரணத்தில் "நான் செய்தேன் தப்புத்தண்டா வேற வழி ஏதும் உண்டா ஊருக்குள்ளே யோக்கியனை கண்டா ஓடிப் போயி என்னிடம் கொண்டா" என்று எழுதி இருப்பார். இந்த வரிகள் ரஜினியே மனம் திறந்து சொன்னது போல அவரது ரசிகர்கள் ரசித்தனர்.

1979-ம் ஆண்டு வெளியான "நினைத்தாலே இனிக்கும்" படத்தில் கண்ணதாசன் எழுதிய "சம்போ சிவ சம்போ" என்று தொடங்கும் பாடலை இசை அமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனே ரஜினிக்காக பாடி இருந்தார். அந்த பாடலில் "அப்பாவும் தாத்தாவும் வந்தார்கள். போனார்கள். தப்பென்ன சரியென்ன எப்போதும் விளையாடு. அப்பாவி என்பார்கள் தப்பாக நினைக்காதே எப்பாதை போனாலும் இன்பத்தைத் தள்ளாதே" என்ற வரிகள் வரும்.

இந்த வரிகளை ரஜினி திரும்ப... திரும்ப... பல தடவை சொல்லிக் கொண்டே இருந்தார். கண்ணதாசனிடமே அவர், "இந்த பாட்டு எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டுசார். இதுதான் நான். இதுதான் என் வாழ்க்கை என்பது போல இந்த பாட்டு இருக்கிறது" என்று கூறினார். எந்த அளவுக்கு அவர் மனதுக்குள் ஆன்மீகத்தை வைத்து இருந்தாரோ அதே அளவுக்கு மனதை சுதந்திரமாக சமநிலையில் வைத்து இருந்தார். அதனால்தான் அவருக்கு இந்த பாட்டு பிடித்து இருந்ததாக அந்தக் காலகட்டத்தில் பலரும் கூறினார்கள்.

இதற்கு பிறகுதான் ரஜினியின் உடல்நலமும், மனநலமும் பாதிக்கப்பட்டு இருந்தது. அவரை மேம்படுத்தும் வகையில் பில்லா படம் அமைந்தது. அந்த படத்தில் இடம் பெற்ற 2 பாடல்கள் ரஜினியின் வாழ்க்கையை பிரதிபலிப்பது போல கவிஞர் கண்ணதாசன் வரிகளை அமைத்து இருந்தார்.

அதில் ஒரு பாடல் வருமாறு:-

நாட்டுக்குள்ள எனக்கொரு ஊருண்டு

ஊருக்குள்ள எனக்கொரு பேருண்டு

என்னைப் பத்தி ஆயிரம் பேரு

என்னென்ன சொன்னாங்க

இப்பென்ன செய்வாங்க

நாலு படி மேலே போனா

நல்லவனை விடமாட்டாங்க

பாடுபட்டு பேரை சேர்த்தா

பல கதைகள் சொல்லுவாங்க

யாரு சொல்லி என்ன பண்ண

நானும் இப்ப நல்லாயிருக்கேன்

உங்களுக்கும் இப்ப சொன்னேன்

பின்னால பார்க்காத

முன்னேறு முன்னேறு

ஆளுக்கொரு நேரமுண்டு

அவுகவுக காலமுண்டு

ஆயிரம்தான் செஞ்சாக்கூட

ஆகும்போது ஆகுமண்ணே

மூடனுக்கும் யோகம் வந்தா

மூணுலகம் வணக்கம் போடும்

நம்பிக்கையை மனசுல வச்சு

பின்னால பார்க்காத முன்னேறு முன்னேறு

-இந்த பாடல் ரஜினி குணமாகி மீண்டு விட்டதை உறுதிப்படுத்தியது போல் அமைந்தது.

பில்லா படத்தில் இடம் பெற்ற மற்றொரு பாடல் அவரது யதார்த்தமான நிலையையும் ரசிகர்களுக்கு காட்டியது. அந்த பாடல்....

மை நேம் இஸ் பில்லா...

வாழ்க்கை எல்லாம்...

மை நேம் இஸ் பில்லா

வாழ்க்கை எல்லாம்

நானும் பாக்காத ஆளில்லே

போகாத ஊரில்லே அய்யா

நல்ல நண்பன் இல்லை என்றால்

எங்கு போனாலும் விட மாட்டேன்

நானாகத் தொட மாட்டேன்

அய்யா... ஹா... ஹோ

ஆ... பூப் போன்ற பெண்ணோடு ஆட்டம்

ஆனாலும் சிலர் மீது நோட்டம்

என் வாழ்க்கை அழகான தோட்டம்

இன்பங்கள் என்றாலே நாட்டம்

பொன்னோடும் பொருளோடும்

எப்போதும் நண்பர்கள் கூட்டம்

என் மீது பாய்வோர்கள்

யாராக இருந்தாலும் ஓட்டம்

பொன்னோடும் பொருளோடும்

எப்போதும் நண்பர்கள் கூட்டம்

என் மீது பாய்வோர்கள்

யாராக இருந்தாலும் ஓட்டம்

நீரோட்டம் போல் எந்தன் ஆசை

தேரோட்டம் போல் எந்தன் வாழ்க்கை

ஹா... போராட்டம் இல்லாத பாதை

எல்லாமே சுகமான போதை

நான் கொண்டு வந்தேனா

நீ கொண்டு வந்தாயா செல்வம்

ஹ ஹ ஹ

நாளென்ன பொழுதென்ன

நாள்தோறும் விளையாடி வாழ்வோம்

நான் கொண்டு வந்தேனா

நீ கொண்டு வந்தாயா செல்வம்

நாளென்ன பொழுதென்ன

நாள்தோறும் விளையாடி வாழ்வோம்

மை நேம் இஸ் பில்லா

வாழ்க்கை எல்லாம்

நானும் பாக்காத ஆளில்லே

போகாத ஊரில்லே அய்யா

நல்ல நண்பன் இல்லை என்றால்

எங்கு போனாலும் விட மாட்டேன்

நானாகத் தொட மாட்டேன் அய்யா...

-இந்த பாடல் பட்டித்தொட்டி எங்கும் முழங்கி ரஜினியின் அந்தஸ்தை மேலும் உயர்த்தியது. அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக "ஆறிலிருந்து அறுபதுவரை" பட வெற்றி விழாவில் கண்ணதாசனின் கால்களில் விழுந்து ரஜினி ஆசி பெற்றுக் கொண்டார்.

1981-ம் ஆண்டு கண்ணதாசன் மறையும் வரை ரஜினிக்காக அவர் மேலும் சில பாடல்கள் தனித்துவமாக எழுதியது குறிப்பிடத்தக்கது. ரஜினியின் சினிமா வாழ்க்கை முடிந்துப் போனது என்று கூறப்பட்ட சூழலில் அவர் மீண்டும் விஸ்வரூபம் எடுத்ததற்கு கண்ணதாசனின் பாடல்கள்தான் அடித்தளம் அமைத்துக் கொடுத்தன.

கண்ணதாசனின் எழுத்துக்களை வரிக்குவரி ரசித்த ரஜினி அவர் கொடுத்த உற்சாகம் காரணமாக தமிழில் வெளியாகி உள்ள பல புத்தகங்களை தேடிப்பிடித்து படிக்க ஆரம்பித்தார். ரஜினிக்கு ஏற்கனவே புத்தகங்கள் படிப்பதில் மிகுந்த ஆர்வம் இருந்தது. அதற்கு காரணம் சிறு வயதில் பெங்களூர் ராமகிருஷ்ணா மடம் பள்ளியில் அவருக்குள் விதைக்கப்பட்ட விதை என்றே சொல்லலாம்.

அவர் இளைஞராகி கண்டக்டராக பணிக்கு சேர்ந்த பிறகும் சினிமாவுக்கு வந்த பிறகும் அவரது படிக்கும் ஆர்வம் கொஞ்சமும் குறையவில்லை. பெங்களூரில் இருந்தவரை அவர் கன்னடத்தில் புகழ் பெற்ற எழுத்தாளர்கள் எழுதிய புத்தகங்களை வாங்கி படிக்க தவறியது இல்லை. சில கன்னட புத்தகங்களை இன்றும் கூட அவர் மனம் திறந்து பேசுவது உண்டு.

சென்னைக்கு வந்து தமிழில் பேசவும், படிக்கவும் கற்றுக்கொண்ட பிறகு ரஜினி நிறைய தமிழ் எழுத்தாளர்களின் புத்தகங்களை வாசிக்க தொடங்கினார். ஜெயகாந்தன், ரா.கி. ரங்கராஜன், கண்ணதாசன், அகிலன் எழுதிய கதைகளை விரும்பி படித்தார். கல்கியை தனது குரு என்றே அவர் சொல்வார். அந்த அளவுக்கு தமிழ் நாவல்களை விரும்பி படித்துள்ளார்.

ஒரு எழுத்தாளன் ஒரு புத்தகம் எழுதினால் அது தெளிந்த நீரோடையாக வாசகர்களை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் வகையில் சிறப்பாக அமைய வேண்டும் என்று ரஜினி பல மேடைகளில் பேசியது உண்டு. அவரது அந்த எதிர்பார்ப்பு தமிழ் எழுத்தாளர்களின் புத்தகங்கள் மூலம் அவருக்கு நிறையவே கிடைத்தது.

இதன் காரணமாக ரஜினிக்குள் முடிவு எடுக்கும் திறமை உருவானது. அந்த திறமை ரஜினியின் வாழ்க்கையை உச்சத்துக்கு கொண்டு போகும் வகையில் அதிரடியாக மாற்றியது. அதுபற்றி நாளை பார்க்கலாம்.

Tags:    

Similar News