சிறப்புக் கட்டுரைகள்

ரஜினியின் ரகசிய ஆன்மீகம்- 260 நாட்கள் ஓடிய "பில்லா"

Published On 2025-11-14 11:10 IST   |   Update On 2025-11-14 11:10:00 IST
  • டெல்லியில் நடந்த ஒரு சம்பவம் நாடு முழுவதும் மிகப்பெரிய பரபரப்பை உருவாக்கி இருந்தது.
  • எல்லா தியேட்டர்களிலும் நல்ல லாபம் கிடைத்தது.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் வாழ்க்கையில் 1979-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கி ஜூன் மாதம் வரையிலான 5 மாதம் அவருக்கு மறக்க முடியாத ஒன்றாக மாறியது. டைரக்டர் பாலச்சந்தர் குறிப்பிட்டது போல அதை ரஜினியின் இருண்ட காலம் என்றே இப்போதும் சொல்கிறார்கள். ஆனால் அந்த இருண்ட நாட்களில் வாழ்க்கையின் யதார்த்தங்கள் அனைத்தையும் ரஜினி முழுமையாக உணர்ந்தார்.

அதனால்தான் ஜூன் மாதம் அவர் முழுமையாக குணம் அடைந்ததும் ஜூலையில் இருந்து அவரது செயல்பாடுகள் ஒவ்வொன்றிலும் சிறப்பான மாற்றங்கள் ஏற்பட தொடங்கின. இதன் காரணமாக 1980-ம் ஆண்டு ரஜினியின் திரையுலக வாழ்க்கையில் மறுமலர்ச்சி ஏற்பட்டது.

அந்த ஆண்டு அவர் பில்லா (26.1.1980), ராம் ராபர்ட் ரகீம் (தெலுங்கு 31.5.1980), அன்புக்கு நான் அடிமை (4.6.1980), காளி (3.7.1980), மாயதாரி கிருஷ்ணடு (தெலுங்கு 19.7.1980), நான் போட்ட சவால் (7.8.1980), ஜானி (15.8.1980), காளி (தெலுங்கு 19.9.1980), எல்லாம் உன் கைராசி (9.10.1980), பொல்லாதவன் (6.11.1980), முரட்டுக்காளை (20.12.1980) ஆகிய 11 படங்களில் நடித்தார். 1979-ல் 20-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த ரஜினி தனக்கு ஏற்பட்ட பக்குவம் காரணமாக படங்களை தேர்வு செய்து நடிக்க தொடங்கி இருந்தார்.

இதனால் 1980-ல் அவர் நடித்த படங்கள் எல்லாம் அனைத்து தியேட்டர்களிலும் ஓகோ... ஓகோ என்று ஓடியது. அந்த ஆண்டின் தொடக்கமே ரஜினிக்கு பூத்து குலுங்குவதாக அமைந்தது.

அதற்கு காரணம் நடிகரும், தயாரிப்பாளருமான பாலாஜி. அவருக்கு ரஜினியை வைத்து ஒரு உண்மை கதையை படமாக்க வேண்டும் என்பது லட்சியமாக இருந்தது. அந்தக் கால கட்டத்தில் டெல்லியில் நடந்த ஒரு சம்பவம் நாடு முழுவதும் மிகப்பெரிய பரபரப்பை உருவாக்கி இருந்தது.

டெல்லியில் 1978-ம் ஆண்டு பில்லா-ரங்கா என்ற 2 ரவுடிகள் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, ஆள் கடத்தல் போன்ற அட்டகாசங்களில் ஈடுபட்டு வந்தனர். அந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 26-ந்தேதி சனிக்கிழமை அவர்கள் இருவரும் இந்திய கடற்படை கேப்டன் சோப்ராவின் மகள் 17 வயது கீதா, மகன் 15 வயது சஞ்சய் ஆகிய இருவரையும் காரில் கடத்தி சென்றனர்.

கீதாவும், சஞ்சய்யும் நன்றாக பாடக்கூடியவர்கள். அவர்கள் இருவரும் டெல்லி வானொலி நிலையத்தில் அடிக்கடி பாடல் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது உண்டு. அப்படி அவர்கள் ஒரு நிகழ்ச்சிக்கு சென்று கொண்டிருந்தபோதுதான் பில்லா- ரங்காவால் கடத்தப்பட்டனர்.

சிறுமி கீதாவை பாலியல் பலாத்காரம் செய்த இருவரும் மிக கொடூரமாக கொலையும் செய்தனர். அதுபோல அவளது தம்பி சஞ்சய்யையும் துடிக்க துடிக்க கொலை செய்தனர். ஓடும் காரில் இந்த கொடூரக் கொலைகள் நடந்தன. இந்த கொலை இந்தியா முழுவதும் மிகப்பெரிய அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. டெல்லி போலீசார் தீவிர விசாரணை நடத்தி பில்லா-ரங்கா இருவரையும் கைது செய்தனர்.

விசாரணைக்கு பிறகு அவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. 1982-ம் ஆண்டு அவர்கள் இருவரும் டெல்லி திகார் ஜெயிலில் தூக்கில் போடப்பட்டனர். அவர்கள் செய்த இரட்டை கொலை 1979-ல் தினமும் அனல் பறக்க பரபரப்பான தகவல்க ளுடன் பேசப்பட்டது.

இதனால் இந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்து ஆனால் நிறைய மாற்றங்கள் செய்து ேதவைக்கும் அதிகமாக மசாலாக்கள் சேர்த்து "பில்லா" என்ற பெயரிலேயே படத்தை தயாரிக்க நடிகர் பாலாஜி முடிவு செய்தார். இதற்காக அவர் ரஜினியை சந்தித்து பேசினார். அப்போது அவர் பில்லா வேடத்தில் நடித்தால் உங்களது முழுமையான ஆக்ஷன் திறமையை வெளியில் காட்ட முடியும் என்றார்.

இதைக் கேட்டதும் ரஜினிக்கு ஆர்வம் வந்தது. எனக்கு ஒன்றும் ஆட்சேபனை இல்லை என்று கூறி உடனடியாக அவர் பில்லா படத்தில் நடிக்க சம்மதித்தார். மிகப்பெரிய கொலைக்காரரான பில்லா பெயரில் நடிப்பதற்கு ரஜினி கொஞ்சமும் தயக்கம் காட்டவில்லை.

ஆனால் பாலாஜியை பலரும் பயம் காட்டினார்கள். உண்மை கதையை மாற்றி படம் எடுக்கிறாய். கவனமாக இரு என்றனர். சிலர் அவரிடம், "ரஜினியை வைத்து படம் தயாரிக்கிறாய். அவர் கடைசி வரை நடித்து தருவாரா? அவருக்கு மனநலம் பாதிப்பு மீண்டும் வந்து விட்டால் உன்னால் படத்தை முடிக்க முடியுமா? அந்த இழப்பில் இருந்து உன்னால் மீண்டு வரமுடியுமா? என்றெல்லாம் கேட்டனர்.

இதை கேட்ட பாலாஜிக்கு உண்மையிலேயே பயம் வந்து விட்டது. ரஜினியை வைத்து படம் தயாரிக்கலாமா? வேண்டாமா? என்ற குழப்பம் ஏற்பட்டது. அந்த குழப்பத்தை தீர்த்துக் கொள்ள கவிஞர் கண்ணதாசன் வீட்டுக்கு சென்றார். கண்ணதாசனிடம் தனது மனதில் உள்ளதை எல்லாம் நடிகர் பாலாஜி கொட்டினார். இதைக் கேட்டதும் கண்ணதாசன் அனைத்தையும் புரிந்து கொண்டார். அவர் பாலாஜியிடம், "நீ எதற்கும் கவலைப்படாதே? ரஜினியை வைத்து படம் தயாரிப்பதில் பின் வாங்க வேண்டாம். நான் இந்த படத்துக்காக வித்தியாசமான முறையில் பாடல் எழுதி தருகிறேன். கவலை வேண்டாம்" என்றார்.

கண்ணதாசன் உற்சாகம் கொடுத்ததும் பாலாஜியிடம் இருந்த குழப்பமும், தவிப்பும் நீங்கியது. தைரியமாக அவர் பில்லா படத்தை தயாரிக்க தொடங்கினார்.

பில்லா படத்தின் கதைப்படி ரஜினி (வில்லன்) சர்வதேச கடத்தல்காரனாக இருக்கிறார். அவரை எப்படியும் கைது செய்தே தீர வேண்டும் என்று சென்னை போலீஸ் அதிகாரி பாலாஜி (அலெக்சாண்டர்)சபதம் எடுக்கிறார். ஒருநாள் சர்வதேச போலீஸ் அதிகாரி மேஜர் சுந்தரராஜன் சென்னை வருகிறார்.

சென்னையில் உலகம் முழுக்க உள்ள பிரபலமான கடத்தல்காரர்கள் ஒன்று கூடி பேசுகிறார்கள். அவர்களை சுற்றி வளைத்து கைது செய்யலாம் என்று அவர் அங்கு செல்கிறார். இந்த நிலையில் பில்லாவின் கூட்டாளியாக இருந்த ஜானி என்பவன் தனது காதலி பிரவீனாவுடன் வெளிநாட்டுக்கு தப்பி செல்ல முயற்சி செய்கிறான்.

அவனை பில்லா சுட்டுக் கொல்கிறான். இதனால் பில்லாவை பழிவாங்க பிரவீனா கொள்ளைக்காரியாக மாறி பில்லாவின் கூட்டத்துக்குள் நுழைகிறாள். பில்லாவை சிக்க வைக்க அவள் செய்த முயற்சிகள் வெற்றி பெறவில்லை. அவளையும் பில்லா கொல்கிறான். இதற்கிடையே பில்லாவால் கொல்லப்பட்ட ஜானியின் தங்கையும் (ஸ்ரீபிரியா) பில்லாவை பழிவாங்க அந்த கூட்டத்துக்குள் வருகிறாள்.

அவளிடம் பில்லா மனதை பறிகொடுக்கிறார். அதை பயன்படுத்தி அவள் பில்லாவை போலீசில் சிக்க வைக்கிறாள். போலீஸ் துப்பாக்கியால் சுட்டதில் பில்லா செத்துப் ேபாகிறான். இதைப் பார்த்த போலீஸ் அதிகாரி பாலாஜி புதிய திட்டம் போடுகிறார். சர்வதேச கும்பலை பிடிப்பதற்காக பில்லா கொலையை மறைக்கிறார்.

பில்லா போன்றே இருக்கும் கழைக்கூத்தாடி ராஜப்பாவை உருவ மாற்றம் செய்து பில்லாவாக நடிக்க வைக்கிறார். அப்போதுதான் சர்வதேச கடத்தல் கும்பலுக்கு போலீஸ் அதிகாரி ஒருவர் தலைவராக இருப்பது தெரிகிறது. அந்த அதிகாரியை ராஜப்பா பிடித்து கொடுத்து விட்டு ஸ்ரீபிரியாவை திருமணம் செய்து கொள்வதுடன் படம் முடிகிறது. பில்லா படம் தமிழகத்தில் திரையிட்ட தியேட்டர்களில் எல்லாம் சக்கைப்போடு போட்டு வசூலை வாரிக் குவித்தது. எல்லா தியேட்டர்களிலும் நல்ல லாபம் கிடைத்தது. அது மட்டுமின்றி சில தியேட்டர்களில் 260 நாட்களுக்கு மேல் ஓடி புதிய சாதனைையயும் படைத்தது.

ரஜினி நடிக்க வந்த 5 ஆண்டுகளில் பில்லா படம் போல எந்த படமும் ஓடியது இல்லை. இது ரஜினியின் வாழ்க்கையிலும் ஒருபுதிய திருப்பத்தை ஏற்படுத்தியது. ரஜினியை மிகப்பெரிய ஆக்ஷன் ஹீரோ அந்தஸ்துக்கு இந்த படம் கொண்டு சென்றது. அது மட்டுமின்றி ரஜினி நடித்தால் நிச்சயம் அதிக லாபம் கிடைக்கும் என்ற புதிய பாதையையும் இந்த படம் உருவாக்கியது.

ரஜினிக்கே இது ஆச்சரியமாக இருந்தது. இதுபற்றி அவர் அளித்த ஒரு பேட்டியில், "ரஜினி அவ்வளவுதான் என்று எல்லோரும் சொன்னார்கள். ரஜினியின் இமேஜ் போய் விட்டது என்றெல்லாம் வதந்தி பரப்பினார்கள். ஆனால் அதையே நான் எனது பலமாக மாற்ற முடிவு செய்தேன். என்னைப் பற்றி என்னென்ன குறைகள் சொன்னார்களோ அந்த மாதிரி வேடங்களாக பார்த்து நடிக்க வேண்டும் என்று நினைத்தேன்.

குடிகாரனாக.... ரவுடியாக.... கொலைகாரனாக... பைத்தியக்காரனாக.... நடித்தேன். கதாநாயகன் வேடம் கிடைக்காவிட்டாலும் மாற்று வேடங்களில் நடிக்க நினைத்தேன். ஆனால் பில்லா படத்தில் எனது நடிப்பை மக்கள் ஒத்துக் கொண்டார்கள். பில்லா நல்லா ஓடுகிறது என்றதும் எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அந்த படம் எதனால் ஓடுகிறது என்பதை தெரிந்துக் கொள்ள தியேட்டருக்கு சென்றேன்.

ஆனால் எனக்கு எதுவுமே கண்டுபிடிக்க முடியவில்லை. மக்களை புரிந்துக் கொள்ள முடியவில்லை. என் மீது அவர்கள் காட்டும் பாசம் பிரமிக்க வைத்தது" என்றார்.

ஆனால் பில்லா படத்தில் ரஜினிக்காக கவிஞர் கண்ணதாசன் எழுதிய பாடல்கள் மிகப்பெரிய வெற்றியை தேடி கொடுத்தது என்பதே உண்மை. அது மட்டுமல்ல ரஜினியின் சிறப்பையும், அந்தஸ்தையும் கண்ணதாசன் பாடல்கள் மேம்படுத்தியது. அதற்கு காரணம் ரஜினி மீது கவிஞர் கண்ணதாசன் வைத்திருந்த தனி அன்புதான். கண்ணதாசனுக்கும், ரஜினிக்கும் இருந்த அந்த நட்பு பற்றி நாளை பார்க்கலாம்.

Tags:    

Similar News