ரஜினியின் ரகசிய ஆன்மீகம்- ரஜினி அவதாரம் தொடக்கம்
- படத்தின் இறுதிக் காட்சிகளில் வந்தாலும் சிவாஜிராவின் நடிப்பு அனைவரையும் கவர்ந்தது.
- ரசிகர்களோடு அமர்ந்து ரஜினி தனது முதல் படத்தை பார்த்தார்.
1975-ம் ஆண்டு, சிவாஜிராவின் வாழ்க்கையில் மிக மிக முக்கியமான ஆண்டாகும். சாதாரண கண்டக்டராக இருந்த அவர் அந்த ஆண்டுதான் சென்னை நடிப்புப் பயிற்சி கல்லூரியில் படித்து முடித்தார். அதே ஆண்டு இயக்குனர் சிகரம் பாலச்சந்தரால் அடையாளம் காணப்பட்டு சினிமாவிலும் தனது வாழ்க்கையை தொடங்கி விட்டார்.
1975-ம் ஆண்டின் ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்களில் பாலச்சந்தரின் இயக்கத்தில் உருவான அபூர்வ ராகங்கள் படத்தின் படப்பிடிப்புகள் நடந்து முடிந்து இருந்தன. மிக மிக வித்தியாசமான கதை அம்சம் கொண்ட அந்த படம் தமிழ் திரையுலகில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது.
அந்த படத்தில் கமலஹாசன், மேஜர் சுந்தரராஜன், நாகேஷ், ஸ்ரீவித்யா, ஜெயசுதா என்று நட்சத்திர பட்டாளத்துக்கு மத்தியில் முதன் முதலாக சிவாஜிராவ் தலை காட்டினார். படத்தின் இறுதிக் காட்சிகளில் வந்தாலும் சிவாஜிராவின் நடிப்பு அனைவரையும் கவர்ந்தது.
இவை அனைத்தும் சிவாஜிராவின் பின்னணியில் ஏதோ ஒரு மாய சக்தி இருந்து அவரை இயக்குவது போன்றே நடந்து முடிந்தது. ஆனால் அந்த மாய சக்தி ராகவேந்திர சுவாமிகள் என்பது அந்த கால கட்டத்தில் சிவாஜிராவுக்கு மட்டுமே தெரிந்த ஒன்றாகும். சிவாஜிராவின் முதல் நாள் படப்பிடிப்பு அவர் விரும்பியபடியே ராகவேந்திர சுவாமிகளுக்கு உகந்த வியாழக்கிழமை நடந்தது போல, மற்றொரு முக்கிய நிகழ்வும் வியாழக் கிழமையே நடந்தது. அதை இன்றும் ராகவேந்திர சுவாமிகளின் திருவிளையாடல் என்றே அனைவரும் கருதுகிறார்கள்.
1975-ம் ஆண்டு மார்ச் மாதம் 27-ந் தேதி வியாழக்கிழமை நாடு முழுவதும் மிக உற்சாகமாக ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டு கொண்டிருந்தது. அன்று மதியம் பாலச்சந்தரிடம் இருந்து சிவாஜிராவுக்கு ஒரு அழைப்பு வந்தது. அன்று இரவு பாலச்சந்தரை சந்திக்க வேண்டும் என்று சிவாஜிராவிடம் கூறி இருந்தனர்.
அதன்படி அந்த முழு நிலவு நாளில் இரவு 7 மணிக்கு இயக்குனர் பாலச்சந்தரை அவரது அலுவலகத்துக்கு சென்று சிவாஜிராவ் சந்தித்தார். அவரை வரவேற்ற பாலச்சந்தர், 'வாங்க சிவாஜி, அபூர்வ ராகங்கள் படத்தின் படப்பிடிப்பு எல்லாம் முடிந்துவிட்டது. டப்பிங் பணிகளும் நிறைவு பெற்றுவிட்டன.
இன்னும் சில வேலைகள்தான் பாக்கி உள்ளது. படம் தொடங்கும்போது நட்சத்திரங்களின் பெயர் போடும் வேலை நடந்து கொண்டிருக்கிறது. அறிமுகம் நட்சத்திரம் என்று உனது பெயரையும் போட வேண்டும். என்ன பெயர் போடவேண்டும் என்று முதலில் நீயே சொல்.
உன்னுடைய உண்மையான பெயரான சிவாஜிராவ் என்ற பெயர் வேண்டாம். ஏனென்றால் தமிழ் திரையுலகில் ஏற்கனவே நடிகர் திலகம் சிவாஜிகணேசன் இருக்கிறார். நீயும் சிவாஜி என்று பெயர் வைத்துக் கொண்டால் குழப்பம் வரும். எனவே அந்த பெயர் வேண்டாம்.
உன்னுடைய பெயரில் இருக்கும் ராவ் என்பதும் தமிழ்நாட்டுக்கு அவ்வளவாக பொருந்தாது. எனவே நீயே ஒரு பெயரை சொல் பார்க்கலாம்' என்றார்.
சிவாஜிராவ் ஏற்கனவே இது தொடர்பாக தனது நண்பரர்களிடம் ஆலோசனை நடத்தி இருந்தார். ஆர்.எஸ்.கெய்க்வாட் அல்லது சரத் என்ற பெயரில் நடிக்கலாம் என்று சிவாஜிராவுக்கு விருப்பம் இருந்தது. ஆனால் அவரது நண்பர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக இந்த 2 பெயர்களையும் நிராகரித்து விட்டார்கள்.
இதனால் சிவாஜிராவுக்கு என்ன பெயர் சொல்வது என்று குழப்பமாக இருந்தது. அவர் பாலச்சந்தரிடம் மெல்லிய குரலில் கெய்க்வாட் என்று பெயர் வைக்கலாமா? என்றபடி இழுத்தார். அதை பாலச்சந்தர் ஏற்கவில்லை. கெய்க்வாட் என்பதெல்லாம் கிரிக்கெட்டுக்குதான் சரியாக இருக்கும். தமிழர்கள் உச்சரிக்கும்போது 'கருவாடு' என்று சொல்லிவிடுவார்கள். எனவே அந்த பெயர் வேண்டாம் என்றார். இதையடுத்து சிவாஜிராவ் ஒரு தீர்க்கமான முடிவுடன் பாலச்சந்தரை பார்த்து, 'என்னை திரையுலகுக்கு அறிமுகம் செய்தது நீங்கள்தான். எனவே நீங்களே என்னை ஆசிர்வாதம் செய்து, எனக்கு ஏதாவது ஒரு பெயர் சூட்டுங்கள் சார்' என்றார்.
உடனே பாலச்சந்தர் கடகடவென பேச ஆரம்பித்தார்.... என்னுடைய 'மேஜர் சந்திரகாந்தா' நாடகத்தில் சந்திரகாந்துக்கு 2 மகன்கள் உண்டு. ஒருவன் பெயர் ஸ்ரீகாந்த் மற்றொருவன் பெயர் ரஜனிகாந்த். இதில் ஸ்ரீகாந்த் என்ற பெயரை ஏற்கனவே ஒரு நடிகருக்கு நான் வைத்துவிட்டேன். ரஜனிகாந்த் என்ற பெயரை யாருக்கு வைக்கலாம் என்று நான் நீண்ட நாட்களாக யோசித்துக்கொண்டே இருந்தேன். இந்த பெயர் உனக்கு நன்றாக இருக்கும். எனவே உனக்கு ரஜனிகாந்த் என்று பெயர் வைக்கிறேன்.
இவ்வாறு இயக்குனர் பாலச்சந்தர் சொன்னதும், சிவாஜிராவ் நெகிழ்ந்து போனார். பாலச்சந்தர் காலை தொட்டு வணங்கி ஆசி பெற்றார். அப்போது சிவாஜிராவ், 'சினிமாவில் நான் நல்ல வில்லன் நடிகராக வரவேண்டும் என்று ஆசிர்வாதம் செய்யுங்கள் சார்' என்றார். இதைக் கேட்டதும் இயக்குனர் பாலச்சந்தர் சிரித்துக்கொண்டே, 'வில்லன் எதுக்கப்பா? நீ சிறப்பாக நடிக்கிறாய். நிச்சயமாக நீ எதிர்காலத்தில் மிகப்பெரிய நடிகனாக வருவாய். பார்த்துக் கொண்டே இரு' என்று சொல்லி ஆசிர்வதித்தார்.
இது ரஜினியின் வாழ்வையே புரட்டிப் போட்ட மிகப்பெரிய மாற்றமாக அமைந்தது. அந்த வினாடியே சிவாஜிராவ் பெயர் நீங்கி தமிழ் திரை உலகுக்கு ரஜினிகாந்த் என்ற புதிய நட்சத்திரம் அவதாரம் கிடைத்தது. இந்த பெயர் சூட்டப்பட்ட தினம் வியாழக்கிழமையும், பவுர்ணமியும் ஒருங்கிணைந்த நாளாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
நாமும் இனி சிவாஜிராவ் என்பதை கைவிட்டு 'ரஜினி' என்ற காந்த் பெயரால் அழைக்கலாம். ரஜினி அறியாமலேயே அவரை ராகவேந்திர சுவாமிகள் எப்போதும் உடன் இருந்து கைப்பிடித்து வழிநடத்தினார் என்பதற்கு இந்த பெயர் சூட்டப்பட்ட நிகழ்வையும் ஒரு உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்.
இயக்குனர் பாலச்சந்தர் தனக்கு பெயர் சூட்டி வாழ்த்தியதும் ரஜினி அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. கண்ணீர் மல்க பாலச்சந்தரிடம் விடைபெற்று அவரது அலுவலகத்தில் இருந்து வெளியே வந்தார். பாலச்சந்தர் சொன்ன பாராட்டுக்கள் ரஜினிக்குள் புத்துணர்ச்சியுடன் இமாலய பலம் வந்தது போல இருந்தது.
கலாகேந்திராவில் இருந்து நேராக மெரினா கடற்கரைக்கு ரஜினி சென்றார். மெரினா கடலை பார்த்தபடி ஒரு இடத்தில் போய் உட்கார்ந்தார்.
கடல் அலை போல மனதில் மகிழ்ச்சி அலை வந்து வந்து போனது. நீண்டநேரம் கடற்கரையில் ரஜினி யோசித்துக்கொண்டே இருந்தார். தனது வாழ்வில் ராகவேந்திர சுவாமிகள் நிகழ்த்தும் அற்புதங்களை நினைத்து மெய் சிலிர்த்தார்.
பெரிய நடிகனாகி சம்பாதித்ததும், தனது குடும்பத்துக்கும் தனக்கு உதவி செய்தவர்களுக்கும் நன்றி மறக்காமல் தேவையான உதவிகளை செய்து கொடுக்க வேண்டும் என்று அவரது மனதில் சிந்தனைகள் ஓயாத அலைஅலையாக வந்து கொண்டிருந்தன. ரஜினி என்று புதிய அவதாரம் எடுத்த மகிழ்ச்சி காரணமாக கடற்கரையில் அவருக்கு நேரம் போனதே தெரியவில்லை.
நள்ளிரவுதான் அவர் மெரினா கடற்கரையில் இருந்து அருண் ஓட்டலுக்கு திரும்பினார். அதன்பிறகு வந்த நாட்களும் ரஜினிக்கு இன்ப அதிர்ச்சி தரும் நாட்களாக மாறின. குறிப்பாக இயக்குனர் பாலச்சந்தர் பத்திரிகையாளர்களிடம் அபூர்வ ராகங்கள் படம் பற்றி பேட்டி கொடுத்தபோது ரஜினிகாந்த் பற்றி புகழ்ந்து கருத்துக்கள் தெரிவித்து இருந்தார்.
ஒரு பேட்டியில் அவர், 'ரஜனிகாந்த் என்ற புதுமுகத்தை அறிமுகம் செய்து இருக்கிறேன். அவருக்கு ஒளிமயமான எதிர்காலம் இருக்கிறது. அவர் திறமையான நல்ல நடிகர், மிகச் சிறப்பான நடிப்பை அவரிடம் நீங்கள் எதிர்பார்க்கலாம்' என்றார். இதை அறிந்தபோது ரஜினி அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ராகவேந்திர சுவாமிகளின் அருளால் அனைத்து பத்திரிகைகளும் புதுமுகம் ரஜினிகாந்த் பற்றி புகழ்ந்து எழுதின. 'ரஜனிகாந்த் என்றால் இரவு காதலனாகிய நிலவு' என குமுதம் அரசு பதில்களில் குறிப்பிடப்பட்டது.
ஆனால் தமிழர்கள் ரஜனியை விடுத்து பேச்சு வழக்கில் சொல்வதற்கு மிக, மிக, எளிதாக இருந்ததால் ரஜினி என அழைக்கத் தொடங்கினார்கள். இதனால் அன்றுமுதல் ரஜினி அவதாரம் தமிழக மக்கள் மத்தியில் புகழ்பெற ஆரம்பித்தது.
1975-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 15-ந் தேதி சுதந்திர தினத்தன்று அபூர்வ ராகங்கள் படம் வெளியானது. படத்தில் 'ரஜனிகாந்த்' என்றே டைட்டிலில் பெயர் இடம் பெற்றது. ஆனால் ரசிகர்கள் ரஜினி என்று சொல்வதில் உறுதியாக இருந்தனர்.
அந்த ரசிகர்களோடு அமர்ந்து ரஜினி தனது முதல் படத்தை பார்த்தார்.
அப்போது அவருக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி பற்றிய ருசிகர தகவலை நாளை பார்க்கலாம்.