சிறப்புக் கட்டுரைகள்

ரஜினியின் ரகசிய ஆன்மீகம்- கமலை முதன் முதலாக பார்த்த நாள்!

Published On 2025-10-09 12:30 IST   |   Update On 2025-10-09 12:30:00 IST
  • “என் பெயர் சிவாஜி ராவ், ஷூட்டிங் இருக்கு, வரச் சொன்னாங்கான்னு தடுமாறிக்கிட்டே சொன்னேன்.
  • வண்டி அடையாறுகிட்டே ஒரு வீட்டுப் பக்கம் போய் நின்றது.

ஒரு புது நடிகர் முதல் படத்துக்கு முதல் நாள் நடிக்க சென்ற அனுபவம் எப்படி இருந்து இருக்கும்? இதுபற்றி சிவாஜிராவ் பிரபல சினிமா இதழான பொம்மை இதழில் சிறப்பு பேட்டியில் அழகாக சொல்லி இருந்தார். அந்த பேட்டியை படித்தால் அந்த சமயத்தில் சிவாஜிராவின் மன உணர்வு எப்படி இருந்து இருக்கும் என்பது உங்களுக்கு தெரியும். இதோ அந்த பேட்டி....

காலை 5 மணிக்கெல்லாம் ரெடியாக இருக்கச் சொல்லியிருந்தாங்க. மறுபடியும் ராத்திரி ஒரு போன் வந்தது.

'5 மணிக்கு வண்டி வருது. ரெடியா இருக்கணும்.'

ரூமில் என் பிரண்ட்ஸ் எல்லாம் சேர்ந்து எனக்கு ஒரு பார்ட்டி வெச்சிருந்தாங்க. எல்லாருக்கும் ஒரே சந்தோஷம். ஒரே அட்டகாசம்.

ஆனால் எனக்கு...? ஏதோ ஒரு பயம். ஒரு மாதிரி சங்கடம்.

நான் என்ன பண்ணப் போறேன்; எப்படிப் பண்ணப்போறேன்னு அன்னைக்கு நைட்டெல்லாம் எனக்குத் தூக்கம் இல்லை. 2 மணி நேரம் தூக்கம் வந்திருக்கும். அப்பவும் ஷூட்டிங் நடக்கிற மாதிரி கனவு காண்கிறேன்.

நான் ஸ்டேர்கேசிலிருந்து சிகரெட் பற்ற வெச்சுக்கிட்டு ஸ்டைலா இறங்கிவர்ேறன். கீழே ஸ்ரீவித்யா நிற்கிறாங்க. நான் இறங்கி வந்து மறுபடியும் சிகரெட் பத்த வெச்சேன். ஏதோ ஒரு டயலாக் ஸ்ரீவித்யா சொல்வாரு. எனக்கு அது சரியா ஞாபகமில்லை. அதுக்குள்ளே டைரக்டர் 'ஒ.கே. டேக்குக்குப் போகலாம் என்றார்.

சைலன்ஸ், டேக்னு சொன்னவுடனே புளோருக்கு வெளியே பெல் அடிக்குது. பெல் அடிக்கிறது நிக்கவே இல்லை. பாலசந்தர் சார் கோபத்தில் கத்திக் கிட்டிருக்கார், "போதும்! பெல் அடிச்சதை நிற்க வைங்க.' நான் ரெடியா ஸ்டோ்கேஸ்ல நின்னுக் கிட்டிருக்கேன். பெல் இன்னும் அடிச்சிக் கிட்டே இருக்கு.

கனவு இப்படி சென்று கொண்டிருந்த போது என்னை சிவாஜி, சிவாஜி என்று தட்டி எழுப்பிக்கிட்டிருந்தார் கிருஷ்ணசாமி. அட கடவுளே இது கனவா? என்று சிவாஜிராவ் படப்படப்பானார்.

பாலச்சந்தர் அலுவலகத்தில் இருந்து படப்பிடிப்புக்கு வருமாறு அழைத்ததால் சிவாஜிராவ் மனதுக்குள் அந்த எண்ணம் மட்டுமே முழுமையாக நிறைந்து இருந்தது. அதனால்தான் தூங்கும் போது கூட அவருக்கு படப்பிடிப்பு பற்றிய கனவு வந்து இருந்தது. அடுத்த நாள் (திங்கட்கிழமை) காலை நண்பர்கள் தட்டி எழுப்பியதும் சிவாஜிராவ் பதறிப் போனார். மணியை பார்த்தார். 4 மணி ஆகி இருந்தது. அதன் பிறகு அவர் என்ன செய்தார் என்பதை அவர் கொடுத்த அந்த பேட்டியில் காணலாம்.

4 மணிக்கு வெச்சிருந்த அலாரம் மணி அடிச்சிக் கிட்டிருந்தது. என் வாழ்க்கையில் காலை 4 மணியைப் பார்த்த முதல் நாள் அது. போய் குளித்து பூஜை செய்து ராகவேந்திர சுவாமிகளை வணங்கினேன். பிறகு டிரஸ் செய்து கொண்டு ரெடியானேன். அரை மணிக்குள்ளே, சிகரெட் பத்த வைத்து கண்ணாடி முன்னால் நின்னேன்.

என்னையே நான் ஒரு தரம் அதில் பார்த்துக்கிட்டேன். எனக்கே தெரியாத உற்சாகம்! சந்தோஷம், உடம்பில் முகத்தில் தென்பட்டது. 5 மணியாச்சு. ரூமிலிருந்து அருண் ஓட்டல் மொட்டை மாடிக்கு வந்தேன்.

ஒரே குளிர், சைக்கிளில் பால்காரர்கள் போய்க்கிட்டிருக்காங்க. கீழே அப்பதான் பெட்டிக் கடையைத் திறந்துகிட்டிருக்கான். கீழே உள்ள ஓட்டலில் இருந்து சமையல் செய்யும் சத்தம் கேட்குது. பூந்தமல்லி ஐரோட்டில் லாரிகளும், பஸ்களும் ேபாய்க்கிட்டிருக்கு. 2 வருஷமா பார்த்து வரும் ஓட்டல்தான்; பார்க்கும் ரெஸ்டாரெண்ட். பார்த்த செடி மரங்கள்தான். அதே அமிஞ்சிக்கரை தான். ஆனா இன்னிக்கு அது எல்லாமே எனக்குப் புதுசா இருக்கு.

ஐந்தரை மணியாச்சு. வண்டி வரலை. என் உடம்பில் ரத்த வேகம் ஜாஸ்தியாச்சு. சிகரெட்டும் தீர்ந்துகிட்டே வருது. 6 மணியாச்சு, வண்டியைக் காணோம். பொழுது நல்லா விடிஞ்சு ஒரே வெளிச்சம். கீழே பேசிக்கிட்டிருக்கிறவங்க முகமெல்லாம் 'பளிச்'சென்று தெரியுது. அமிஞ்சிக்கரைக்கு ஒரு புது களை வந்தது.

தூரத்தில் இருந்து ஒரு கார் வரும் சத்தம். என் உடம்பில் ஒரு நடுக்கம். கார் வேகமாக வந்து அருண் ஓட்டலை தாண்டிப் போயிடுச்சு. மனசிலே ஒரு நிராசை, வேணு, ரவி 2 பேரும் மேலே வந்தாங்க, எக்சர்சைஸ் பண்ணுவதற்காக. என் முகம் வாடி இருந்தது. என்னை நண்பர்கள் எல்லாரும் விஷ் பண்ணினாங்க. இதற்குள் இன்னொரு கார் வந்து ஓட்டல் முன்னால் நின்றது. அம்பாசடர் வயலட் கலர் வண்டி.

"கார் வந்தாச்சு, நான் வர்றேன்"னு ரூமுக்கு ஓடினேன். கண்ணாடியில் இன்னொரு தரம் என்னைப் பார்த்துக்கிட்டு. ராகவேந்திர சாமியை மறுபடியும் கும்பிட்டு காரில் ஏறி உட்கார்ந்தேன்.

நான் தனியே காரில் போறதும் அதுதான் முதல் தடவை. என் மனசு மாதிரி காரும் வேகமாகப் பறக்குது. வழியில் வர்ற கோவில்களை எல்லாம் பார்த்துக் கும்பிட்டேன்.

"நாம் எங்கே போறோம்?"னு டிரைவரைக் கேட்டேன். திரும்பிப் பார்க்காமலேயே "ஆபீசுக்கு"ன்னு சீரியசா பதில் சொன்னார். எனக்கொரு பயம். பின்னால் உட்கார்ந்தது தப்போ என்று. ஏன்னா, டிரைவர் பேசின முறை அப்படி இருந்தது. "சிகரெட் பிடிக்கிறீங்களா?" என்று கேட்டேன் அவரை தாஜா பண்றதுக்கு, திரும்பிப் பார்க்காமலேயே கை நீட்டினார்.

சிகரெட் கொடுத்தேன். தேங்ஸ் கூட சொல்லலை. அவர் ஓட்டிக்கிட்டிருந்தார். நான் சிகரெட் பத்த வைக்கலாமா கூடாதான்னு ஒரு பயம். 'புதுமுகமாச்சே! காரிலே உட்கார்ந்து சிகரெட் பத்த வச்சிட்டான்'னு ஏதாவது தவறா நினைச்சிட்டா?

"எந்தப் படத்தில் ஆக்ட் பண்ணியிருக்கீங்கன்னு கொஞ்சம் முரட்டுத்தனமா கேட்டார்.

"இதுதான் முதல் படம்"னு மெல்லிய குரலில் பயந்துகிட்டே சொன்னேன்.

"தமிழ் சரியா தெரியாதா?"ன்னு கேட்டார்.

"இப்பத்தான் கத்துக்கிட்டிருக்கேன்"னு பதில் ெசான்ேனன்.

வண்டி ஒரு பில்டிங் முன்னால் வந்து நின்றது. முன்னால் 'கலாகேந்திரா'ன்னு ஒரு போர்டு, வெளியே இன்னொரு கார், சில சைக்கிள்கள், 10-15 பேர் உள்ளே நின்னுக்கிட்டிருந்தாங்க. நான் காரை விட்டு இறங்கி வந்தவுடனே அங்கிருந்தவங்க எல்லாம் என்னை ஒரு மாதிரி பார்த்தாங்க. வெள்ளைத் துணி போட்டவர்களுக்கெல்லாம் ஒரு கும்பிடு போட்டு, மேலே மாடிக்குப் போனேன்.

என் செருப்பை வெளியே கழற்றி விட்டு, உள்ளே நிற்கலாமா இல்லை அதில் உட்காரலாமான்னு யோசனையில் இருந்தேன். பேண்ட்-ஷா்ட் போட்ட, கறுப்பா இருந்த ஒருவர் வந்து, "யாரு சார். என்ன வேணும்னு கேட்டார்.

"என் பெயர் சிவாஜி ராவ், ஷூட்டிங் இருக்கு, வரச் சொன்னாங்கான்னு தடுமாறிக்கிட்டே சொன்னேன். அவர் என்னை உட்காரச் சொல்லி விட்டு உள்ளே போயிட்டார். அரை மணி நேரமாச்சு, யார் யாரோ வந்தாங்க... போனாங்க... என்னை யாரும் கவனிக்கல. 8 மணி இருக்கும். ஒரு லுங்கியை உடுத்திக் கொண்டு திடுதிடுன்னு மாடிப் படியிலே ஏறி வந்தார் கமல்ஹாசன். நான் எழுந்து நின்னு "வணக்கம்" போட்டேன். அவரும் "வணக்கம்"னு சொல்லி உள்ளே போயிட்டாரு.

"எவ்வளவு அழகா இருக்காரு"ன்னு மனசுக்குள்ளே நினைச்சிட்டு என் முகத்தையும் அங்கே உள்ள பீரோவின் கண்ணாடியில் பார்த்துக்கிட்டேன்.

பின்னாலே அனந்து சார் வந்து, என்னைக் குசலம் விசாரிச்சு,"ஏன் பயந்த மாதிரி இருக்கீங்க? தைரியமாக இருங்க லொகே ஷனுக்குப் போகலாமா"ன்னு கேட்டார். காரிலே போய் உட்கார வெச்சாரு. கொஞ்ச நேரமாச்சு. கமல்ஹாசன், மேக்கப்மேன் சுந்தரமூர்த்தி உட்கார்ந்தவுடனே வண்டி கிளம்பிடுச்சு.

"சொல்லத்தான் நினைக்கிறேன் படம் பார்த்தேன். அருமையா நடிச்சீருக்கீங்க என்றேன். கமல் சிரித்துக் கொண்டே "தேங்க்ஸ் என்றார். கமல்கிட்ட படம் பற்றியும் அவர் நடிப்பைப் பற்றியும் மீண்டும் பாராட்டினேன். கொஞ்ச தூரம் போனவுடனே அவர் தூங்கிட்டாரு. "நைட் ஷூட்டிங்ன்னு நினைக்கிறேன்.

வண்டி அடையாறுகிட்டே ஒரு வீட்டுப் பக்கம் போய் நின்றது. கீழே இறங்கி உள்ளே போனோம். வெளியே ஸ்ரீவித்யாவும், கமலும் ஏதோ பேசிக் கொண்டிருந்தாங்க.

பாலச்சந்தர் சார் உள்ளே டிராலியில் காமிராவை வைச்சுக்கிட்டு ஏதோ சொல்லிக் கிட்டிருந்தாரு. என்னைப் பார்த்தவுடனே "ஹலோ"ன்னு சொன்னார். எனக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது.

அப்போது ஒரு ருசிகர சம்பவம் நடந்தது. அதுபற்றி நாளை பார்க்கலாம்.

Tags:    

Similar News