சிறப்புக் கட்டுரைகள்

ரஜினியின் ரகசிய ஆன்மீகம்- டைரக்டர் பாலசந்தர் அழைப்பு

Published On 2025-10-06 12:27 IST   |   Update On 2025-10-06 12:27:00 IST
  • சென்னைதான் இனி நம் வீடு என்று அவர் மனதுக்குள் ஆழமாக பதிவு செய்துக் கொண்டார்.
  • படம் முடிந்து வெளியில் வந்த போது அந்த படத்தின் டைரக்டர் சோமசேகர் வெளியில் நின்று கொண்டிருந்தார்.

பெங்களூருக்கு சென்ற வேகத்தில் சென்னைக்கு திரும்பி வந்த சிவாஜிராவுக்கு தனது தந்தை ரனோஜிராவ் ஜோதிடம் பார்த்த விவரம் எதுவும் தெரியாது. ஆனால் தனது தந்தை தனது எதிர்காலம் பற்றி மிகவும் கவலைப்பட்டது அவரது மனதை வாட்டியது. தந்தையின் இறுதி காலத்தில் அவரது மனம் குளிரும் வகையில் சினிமாவில் நடித்து பெயரும், புகழும் பெற வேண்டும் என்ற எண்ணம் சிவாஜிராவுக்குள் வந்து கொண்டே இருந்தது. பெங்களூரில் இருந்து சென்னைக்கு திரும்பி வந்த மறுநாளில் இருந்து அவர் சினிமாவில் நடிக்க வாய்ப்புத் தேட தொடங்கினார்.

பெங்களூரில் பார்த்து வந்த கண்டக்டர் வேலை பறி போய் விட்டதால் இனி வாழ்க்கையில் நல்ல உயர்ந்த நிலைக்கு வரும் வரை பெங்களூருக்கு திரும்பி செல்லவேக் கூடாது என்று அவர் மனதில் தோன்றியது. இறை அருளால் அவரது அந்த எண்ணம் ஒருவித வைராக்கியமாகவே மாறிப் போனது.

சென்னைதான் இனி நம் வீடு என்று அவர் மனதுக்குள் ஆழமாக பதிவு செய்துக் கொண்டார். அடிக்கடி அவரது மனம் அதையே சொல்லிக் கொண்டு இருந்தது. அதை உறுதி செய்ய வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு நாளும் அவர் சினிமா வாய்ப்பை தேடி அலைந்தார்.

சினிமா நிறுவனங்கள் அனைத்திலுமே அவர் ஏறி இறங்கி விட்டார். 99 சதவீதம் பேர் அவரை புறக்கணித்து திருப்பி அனுப்பினார்கள். அப்போதெல்லாம் அவருக்கு அவரது நண்பர்கள்தான் உற்சாகம் கொடுத்தனர்.

'கவலைப்படாதே. நம்பிக்கையோடு முயற்சி செய். கடவுள் கைவிட மாட்டார்' என்று நண்பர்கள் உற்சாகப்படுத்திக் கொண்டே இருந்தனர். அப்போதெல்லாம் சிவாஜிராவுக்கு அவரது இஷ்ட தெய்வமான ராகவேந்திரர் நினைவு வரும். ஒவ்வொரு நிமிடமும் ராகவேந்திரரை மனதுக்குள் வழிபட்டுக் கொண்டே சினிமா வாய்ப்பு தேடி அலைந்தார்.

சுமார் 1 மாதம் அலைந்து திரிந்தும் அவரை திரை உலகத்தினர் கண்டுகொள்ளவே இல்லை. எதற்காக நமக்கு சினிமா வாய்ப்பு கிடைக்கவில்லை என்று ஆய்வு செய்தார். அப்போது அவருக்கு பொறித்தட்டியது போல ஒரு உண்மை தெரிய வந்தது. தமிழ்நாட்டில் வாழ்ந்து, தமிழ் படங்களில் நடித்து, தமிழர்களோடு ஒன்றிணைந்து வாழ வேண்டுமானால் முதலில் தமிழ்மொழியை பேசவும், எழுதவும் குறையின்றி நன்றாக கற்றுக் கொள்ள வேண்டும் என்பது சிவாஜிராவுக்கு புரிந்தது. திரைப்படக் கல்லூரியில் படித்த கடைசி மாதத்தில் டைரக்டர் பாலச்சந்தர் வந்திருந்த போதும் 'தமிழை நன்றாக கற்றுக் கொண்டு வா' என்று சொன்னதும் சிவாஜிராவுக்கு ஞாபகம் வந்தது.

அன்றே தமிழ் கற்கும் அதிரடியை தொடங்கினார். தன்னை சந்திக்கும் ஒவ்வொருவரிடமும் தமிழிலேயே தன்னிடம் பேசும்படி கேட்டுக் கொண்டார். அவரும் தமிழிலேயே பதில் சொல்ல ஆரம்பித்தார். பெங்களூரில் நிறைய தமிழர்களிடம் சிறுவயதில் இருந்தே சிவாஜிராவ் பழகி இருக்கிறார். கர்நாடக அரசு போக்குவரத்து கழகத்தில் அவர் கண்டக்டராக இருந்த போது டிரைவராக இருந்த ராஜ்பகதூர் மூலம் நிறைய தமிழ் வார்த்தைகளை தெரிந்து வைத்து இருந்தார்.

அதனால்தான் பெங்களூரில் வெளியாகும் தமிழ் திரைப்படங்களை ஆர்வத்துடன் சென்று பார்த்தார். சென்னைக்கு நடிப்பு பயிற்சிக்காக வந்த போதும் நிறைய தமிழ் படங்களை பார்த்தார். தமிழ் புரிகிறதோ இல்லையோ, எம்.ஜி.ஆர்., சிவாஜி படங்களை ஆர்வத்துடன் பார்த்து அர்த்தங்களை தெரிந்துக் கொண்டார்.

இவையெல்லாம் அவருக்கு தமிழ் மொழி கற்பதற்கு உறுதுணையாக இருந்தது. அவருடன் திரைப்படக் கல்லூரியில் படித்த சதீஷ், விட்டல் இருவரும் நன்கு தமிழ் பேசினார்கள். அவர்கள் மூலமும் சிவாஜிராவ் தமிழில் பேசுவதை மேம்படுத்தத் தொடங்கினார்.

தமிழ் பேச்சு பயிற்சியுடன் சென்னையில் உள்ள பல்வேறு இயக்குனர்களை சந்தித்து தனது புகைப்படங்களை கொடுக்கவும் ஆரம்பித்தார். அவருடன் அவரது திரைப்படக் கல்லூரி நண்பர்களும் சேர்ந்து சினிமா வாய்ப்பு தேடி அலைந்தனர். அவர்கள் தினமும் பிரபல தயாரிப்பாளர்கள், இயக்குனர்களை சந்தித்து தங்களது போட்டோக்களை கொடுத்து வருவார்கள். அப்படி 20-க்கும் மேற்பட்ட இயக்குனர்களிடம் சிவாஜிராவும், அவரது நண்பர்களும் போட்டோக்களை கொடுத்து இருந்தனர்.

சினிமா வாய்ப்பு தேடும் நேரம் தவிர மற்ற நேரங்களில் பிலிம் சேம்பரில் வெளியிடப்படும் படங்களை போய் அவர்கள் பார்ப்பது உண்டு. அழைப்பு இல்லாவிட்டாலும் திரைப்படக் கல்லூரி முன்னாள் மாணவர்கள் என்பதால் பிலிம்சேம்பருக்குள் மிக எளிதாக சென்று அவர்களால் படங்கள் பார்க்க முடிந்தது.

அதில் சிக்கல் வந்து விடக் கூடாது என்பதற்காக சிவாஜிராவும், அவரது நண்பர்களும் திரைப்படம் போட்ட பிறகு தியேட்டருக்குள் சென்று அமர்ந்து கொள்வார்கள். சில படங்கள் திரையிடப்படும் போது தியேட்டர் நிரம்பி வழியும். என்றாலும் சிவாஜிராவும், அவரது நண்பர்களும் கவலைப்பட்டதே இல்லை. சுவர் ஓரமாக நின்று கொண்டே படம் பார்த்து விடுவார்கள் அல்லது தியேட்டர் அரங்கு முன்பகுதியில் வெறும் தரையில் உட்கார்ந்து படம் பார்த்து விட்டு வருவார்கள். ஒரு நாள் அவர்கள் அப்படி 'பிரேமத காணிக்கை' என்று ஒரு கன்னட படத்தை பார்க்க சென்றனர்.

தியேட்டருக்குள் இடம் இல்லாததால் வழக்கம் போல முன்வரிசைக்கு அருகே தரையில் உட்கார்ந்து படம் பார்த்துக் கொண்டு இருந்தனர். அந்த படத்தில் போலீஸ் நிலையத்தில் குற்றவாளிகளின் புகைப்படத்தை இன்ஸ்பெக்டர் காட்டுவது போல ஒரு காட்சி இடம் பெற்று இருந்தது.

குற்றவாளிகள் படத்தை இன்ஸ்பெக்டர் மேஜை மீது ஒவ்வொன்றாக எடுத்து போடும் காட்சிகளை பார்த்து சிவாஜிராவும், அவரது நண்பர்களும் கடுமையாக அதிர்ச்சி அடைந்தனர். ஏனெனில் அந்த புகைப்படங்கள் அனைத்தும் சிவாஜிராவும், அவரது நண்பர்களும் வாய்ப்பு தேடி கன்னட டைரக்டர் சோமசேகரிடம் கொடுத்தது ஆகும்.

ஆனால் அவர் சிவாஜிராவுக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கொடுப்பதற்கு பதில் அவரது படத்தை பயன்படுத்தி இருப்பது தெரிந்தது. முதலில் அது அவர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தாலும், இப்படியாவது திரையில் தங்கள் முகம் தெரிய வாய்ப்பு வந்ததே என்று ஒருவருக்கொருவர் பேசி சிரித்துக் கொண்டனர்.

படம் முடிந்து வெளியில் வந்த போது அந்த படத்தின் டைரக்டர் சோமசேகர் வெளியில் நின்று கொண்டிருந்தார். அவரிடம் சிவாஜிராவ் சென்று எங்களது போட்டோக்களை உங்கள் படத்தில் பயன்படுத்திக் காட்டியதற்கு ரொம்ப நன்றி என்றார். டைரக்டர் சோமசேகருக்கு ஒருமாதிரியாக ஆகி விட்டது.

இப்படி சென்னையில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி தயாரிப்பாளர்களிடமும், இயக்குனர்களிடமும் சிவாஜிராவுக்கு மறக்க முடியாத பல சம்பவங்கள் நடந்தன. ஒவ்வொரு நாளும் நகர்ந்துக் கொண்டுதான் இருந்ததே தவிர யாரும் அவரை சினிமாவில் நடிக்க அழைக்கவில்லை.

பாலசந்தர் தனக்கு நிச்சயமாக வாய்ப்பு தருவார் என்று சிவாஜிராவ் மிக மிக நம்பிக்கையுடன் இருந்தார். ஆனால் ஒரு கால கட்டத்திற்கு பிறகு அந்த நம்பிக்கையும் அவரிடம் குறையத் தொடங்கியது. பாலச்சந்தர் புதிதாக ஒரு படம் தொடங்கி இருக்கிறார் என்று அவர் கேள்விப்பட்ட போது தனக்கு அதில் வாய்ப்பு கிடைக்கவில்லையே என்று மிகவும் ஏங்கிப் போனார்.

நாளடைவில் அவருக்கு சென்னை சினிமா ஸ்டூடியோக்களில் வாய்ப்பு தேடி அலைவது மிகப் பெரிய சவாலாக இருந்தது. ஸ்டூடியோ உள்ளே கூட அவரால் சாதாரணமாக செல்ல இயலவில்லை. துரத்தி விட்டனர். கண்ணீர் மல்க சிவாஜிராவ் நடந்தே அமைந்தகரை அருண் ஓட்டலுக்கு வந்து சேருவார்.

1974-ம் ஆண்டு கடைசியில் சிவாஜிராவ் வேதனையின் உச்சத்தில் இருந்தார். சென்னையில் சினிமா வாய்ப்பு கிடைக்கவில்லை. பெங்களூரில் இருந்த வேலையும் போய் விட்டது. தனது எதிர்காலம் என்னவாகும் என்ற பயம் கூட வந்து விட்டது. ஒரு கட்டத்தில் அவர் அருண் ஓட்டல் அறைக்குள்ளேயே முடங்கிப் போனார். நண்பர்கள் வாங்கிக் கொடுக்கும் உணவை சாப்பிட்டுக் கொண்டு, சிகரெட் புகையை ஊதிக் கொண்டு ஒவ்வொரு நாளையும் ஒவ்வொரு யுகமாக தள்ளினார்.

சோகத்தில் தாடி, மீசையை சரிசெய்யாமல் அப்படியே அவர் வளரவிட்டு இருந்தார். அடுத்து என்ன செய்வது என்றே அவருக்கு தெரியவும் இல்லை. புரியவும் இல்லை. கட்டிலில் படுத்தாலும் தூக்கம் வருவதில்லை. எதிர்காலத்தை நினைத்து புரண்டு புரண்டு படுத்து அவஸ்தையின் உச்சத்தில் இருந்தார்.

நாட்கள் இப்படி நகர்ந்துக் கொண்டு இருந்த போதுதான் ஒரு நாள் திடீரென ஒரு அதிசயம் நிகழ்ந்தது. 'இங்கே சிவாஜிராவ் என்பது யார்? என்று கேட்டுக் கொண்டே ஒருவர் அருண் ஓட்டலுக்குள் நுழைந்தார். சிவாஜிராவின் நண்பர் சதீஷ் அவரை நிறுத்தி, 'நீங்கள் எங்கே இருந்து வருகிறீர்கள்? எதற்காக சிவாஜிராவை தேடுகிறீர்கள்?' என்றார்.

அதற்கு அந்த நபர், 'நான் டைரக்டர் பாலச்சந்தர் சாரின் உதவியாளர். என் பெயர் சர்மா. டைரக்டர் சார் தான் உடனடியாக சிவாஜிராவை அழைத்துக் கொண்டு வரும்படி கூறினார். சிவாஜிராவ் எங்கே இருக்கிறார்?' என்று கேட்டார். இதைக் கேட்டதும் சதீசுக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது.

மின்னல் வேகத்தில் ஓடி சென்று படுக்கையில் விரக்தியான முகத்துடன் படுத்துக் கொண்டு இருந்த சிவாஜிராவை தட்டி எழுப்பி, 'டேய் உன்னை பாலச்சந்தர் சார் கூட்டிக் கொண்டு வரச் சொல்லி இருக்கிறாராம். புறப்படு' என்றார்.

இதைக் கேட்டதும் சிவாஜிராவுக்குள் ஆயிரம் வாட்ஸ் மின்சாரம் பாய்ந்து தாக்கியது போல இருந்தது. ஒரு நிமிடம் அவராலேயே அவரை நம்ப முடியவில்லை. ஆச்சரியமும், அதிர்ச்சியும் சிவாஜிராவ் முகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தின. 'உண்மையாகவா சொல்கிறாய்?' என்றார். அப்போது அங்கு வந்த சர்மா, 'ஆமாங்க. டைரக்டர் பாலச்சந்தர் சார்தான் உங்களை அழைத்து வரச் சொன்னார். வெளியில் கார் தயாராக நிற்கிறது. வாருங்கள் போகலாம்' என்றார். சிவாஜிராவ் கண்கள் கலங்கின. ராகவேந்திர சுவாமிகளே கை நீட்டி அழைப்பது போல உணர்ந்தார்.

அடுத்த நிமிடம் மின்னல் வேகத்தில் புறப்படத் தொடங்கினார். நீண்ட நாள் தாடியை அகற்றி, குளித்து விட்டு புத்துணர்ச்சியுடன் புறப்பட்டார். நண்பர்கள் அவருக்கு வாழ்த்துச் சொல்லி அனுப்பினார்கள். டைரக்டர் பாலச்சந்தரை பார்க்கப் போகும் இன்ப அதிர்ச்சியுடன் சிவாஜிராவ் காரில் ஏறினார்.

அடுத்து என்ன நடந்தது என்பதை நாளை பார்ப்போம்.

Tags:    

Similar News