null
ரஜினியின் ரகசிய ஆன்மீகம்- பிரமிக்க வைத்த சிவாஜிராவ் ஜாதகம்!
- சிவாஜிராவின் எதிர்காலத்துக்கு அடுத்து என்ன செய்யலாம் என்று யோசனை கேட்டார்.
- ஜோதிடர் தனது கண்களை மூடி அப்படியே அமர்ந்து விட்டார்.
சென்னையில் இருந்து வந்த வேகத்தில் சிவாஜிராவ் திரும்பி சென்று விட்டதை கவனித்த தந்தை ரனோஜிராவ் மிகவும் கவலை அடைந்தார். நல்ல அரசு வேலையை மகன் இழந்து விட்டானே என்ற கவலை அவரை மிகவும் வாட்டியது. மகனின் எதிர்காலம் எப்படி அமையப்போகிறதோ? என்ற அச்சம் அவர் மனதில் ஆழமாக பதிந்து போனது.
அதற்கு விடை காண நினைத்தார். சிவாஜிராவின் ஜாதகத்தை பார்த்து எதிர்காலத்தை தெரிந்துக் கொள்ளலாமா? என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டது. கண்டக்டர் வேலையையும் பறிகொடுத்து விட்டு சென்னையில் சினிமா பட வாய்ப்பும் கிடைக்காமல் மகன் தவிப்பதை பார்த்து ரனோஜிராவுக்கு ஏற்பட்ட வேதனை அடங்கவில்லை.
சிவாஜிராவை மிக மிக உயர்ந்த அரசு பதவியில் அமர வைத்து அழகு பார்க்க வேண்டும் என்பதுதான் அவரது தீராத ஆசையாக இருந்தது. அதற்காக அவர் எவ்வளவோ முயற்சிகள் செய்தார். ஆனால் வாலிப முறுக்கு காரணமாக சிவாஜிராவ் அவருக்கு ஒத்துழைக்கவில்லை.
அதனால்தான் சிவாஜிராவ் பஸ் கண்டக்டர் வேலைக்கு வரவேண்டியது ஆகி விட்டது. அதை அரைகுறை மனதுடன் ஏற்றுக்கொண்ட ரனோஜிராவ் தனது மகன் அந்த வேலையிலும் மிக உயர்ந்த நிலைக்கு வரவேண்டும் என்று ஆசைப்பட்டார். அந்த ஆசையை அவர் அடிக்கடி வெளிப்படுத்திக் கொண்டே இருந்தார்.
சிவாஜிராவ் மீது அவர் எந்த அளவுக்கு கண்டிப்பு காட்டினாரோ அதே அளவுக்கு பாசத்தையும் காட்டினார். ஆனால் பெரும்பாலான நேரங்களில் அவர் அந்த பாசத்தை வெளிப்படையாக காட்டியது இல்லை. சிவாஜிராவ் மிக உயர்ந்த இடத்தில் இருக்க வேண்டும் என்று அவர் ஒவ்வொரு நாளும் மனதார நினைத்து வழிபாடுகள் செய்வது உண்டு.
இந்த அன்புதான் அவரை சிவாஜிராவுக்கு வேலை இல்லை என்றதும் நிலைகுலைய செய்து விட்டது. தனது மகன் எதிர்காலம் என்ன ஆகுமோ? என்று நண்பர்களிடம் வருத்தப்பட்டு சொல்லிக் கொண்டே இருந்தார். கண்டக்டர் வேலையும் கைநழுவி போய் விட்ட நிலையில் சினிமா வாய்ப்பும் கிடைக்காவிட்டால் மகன் என்ன செய்வான் என்று மிகவும் கவலைப்பட்டார்.
அதற்கு விடை காண்பதற்காக தன்னுடன் 35 ஆண்டுகள் காவல்துறையில் பணியாற்றிய நண்பர் ஒருவரிடம் கருத்துக்கள் கேட்டார். சிவாஜிராவின் எதிர்காலத்துக்கு அடுத்து என்ன செய்யலாம் என்று யோசனை கேட்டார். அதற்கு அந்த போலீஸ்காரர், "ஏன் கவலைப்படுகிறாய்? எனக்கு தெரிந்த ஒரு ஜோதிடர் இருக்கிறார். மிக துல்லியமாக அவர் ஜோதிடம் பார்ப்பார். அவரது வீடு என் வீட்டுக்கு பக்கத்தில்தான் இருக்கிறது. நாளை சிவாஜிராவ் ஜாதகத்தை எடுத்துக் கொண்டு வா. அவரிடம் கொடுத்து பார்க்கலாம். அவர் நிச்சயமாக நல்ல வழிகாட்டுவார்" என்றார்.
ரனோஜிராவுக்கு சற்று நம்பிக்கை வந்தது. மறுநாளே அவர் சிவாஜிராவ் ஜாதகத்தை எடுத்துக்கொண்டு சென்றார். அவரும் அவரது நண்பரும் அந்த ஜோதிடர் வீட்டுக்கு சென்றனர்.
அவரிடம் இருவரும் தங்களை அறிமுகம் செய்துக் கொண்டனர். அவர் பொறுமையாக எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டார். ரொம்ப யோசித்து அமைதியாக பேசினார். அவரது சாந்தமான முகம் ரனோஜிராவுக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியது.
அந்த நம்பிக்கையுடன் சிவாஜிராவின் ஜாதகத்தை எடுத்து கொடுத்தார். பிறகு சிவாஜிராவின் குணங்கள் பற்றி பேசத் தொடங்கினார். 9 வயதில் தாயை இழந்த சிவாஜிராவ் சிறுவயதில் இருந்தே மிகுந்த சுட்டித்தனத்துடன் இருந்ததை தெரிவித்தார். நல்ல வேலையை விட்டுவிட்டு சினிமா பயிற்சி பெற சென்று விட்டதை மிகவும் வருத்தத்துடன் கூறினார்.
கண்டக்டர் வேலை பார்த்தாவது தனது கடைசி மகன் பிழைத்துக் கொள்வான் என்று நினைத்து இருந்த தனக்கு அவனது வேலை பறிபோனதை நினைக்கும்போது தாங்கிக் கொள்ள இயலவில்லை என்று கண்ணீர் விட்டார். அவரை இயல்பு நிலைக்கு கொண்டு வந்த ஜோதிடர் சிவாஜிராவின் ஜாதக கட்டங்களை ஆய்வு செய்தார்.
நிறைய ஏதோ ஏதோ எழுதி கூட்டி-கழித்து பார்த்தார். தனியாகவும் ஒரு சீட்டில் எழுதினார். சிவாஜிராவ் பற்றி அவர் என்ன எழுதுகிறார் என்பது ரனோஜிராவுக்கு புரியவில்லை. பிறகு திடீரென அந்த ஜோதிடர் தனது கண்களை மூடி அப்படியே அமர்ந்து விட்டார்.
ஏதோ சித்தர்கள் கண்களை மூடி தியானத்தில் ஆழ்ந்து இருப்பது போல இருந்தார். சுமார் 30 நிமிடங்கள் அவர் அப்படியே இருந்துக் கொண்டிருந்தார். ரனோஜிராவுக்கு ஒன்றும் புரியவில்லை. ஜோதிடர் என்ன சொல்ல போகிறாரோ? என்று தவித்தபடியே இருந்தார்.
சிறிது நேரம் கழித்து ஜோதிடர் கண்களை திறந்தார். சிவாஜிராவ் பற்றி மேலும் சில தகவல்களை கேட்டார். சிவாஜிராவ் பிறந்த நேரம், பிறந்த நாள், பிறந்த இடம், அப்பா பெயர், அம்மா பெயர், உடன் பிறந்தவர்கள் பெயர் என்று எல்லாவற்றையும் கேட்டு தனியாக ஒரு தாளில் எழுதிக் கொண்டார்.
ஜோதிடர் என்ன சொல்லப் போகிறாரோ? என்ற தவிப்பு ரனோஜிராவ் மனதுக்குள் எழுந்தது. அப்போது அந்த ஜோதிடர் ஒரு தாளை எடுத்து அதில் கட்டம் போட்டு ஏதேதோ... எழுத ஆரம்பித்தார். அவர் எழுதியது ஒன்றும் ரனோஜிராவுக்கு புரியவில்லை. அவர் எழுதியதையே பார்த்துக் கொண்டு இருந்தார்.
ஜோதிடர் ஏதாவது எதிர்மறையாக சொல்லி விடுவாரோ? என்ற பயம் அவருக்குள் ஏற்பட்டது. திடீரென அந்த ஜோதிடர் ஒரு தாளை எடுத்து ேகாடுகள் போட்டு ஏதேதோ... எழுதத் தொடங்கினார். கைவிரல்களை மடக்கி எண்ணி ஏதேதோ... எழுதினார்.
அவரது வாய் சூரியன், சந்திரன், செவ்வாய், சனி என்று ஏதேதோ... முணுமுணுத்தது. அவரது செயல்பாடுகளை பார்த்து ரனோஜிராவ் சற்று பயப்பட்டார். ஜோதிடரின் முகத்தை பார்க்கவே அவருக்கு பயமாக இருந்தது. கடும் தவிப்புக்குள்ளானார்.
அப்போது ஜோதிடர் ரனோஜிராவை பார்த்து பேசத் தொடங்கினார்.
"உங்கள் மகன் சிம்ம லக்னம், மகர ராசியில் பிறந்து இருக்கிறார். இந்த ராசிக்காரர்கள் பொதுவாக நேர்மையாகவும், தைரியம் நிறைந்தவர்களாகவும் இருப்பார்கள். தற்போது இந்த ராசிக்காரர்களுக்கு நல்ல முன்னேற்றமான காலம் ஆகும். அதன்படி பார்த்தால் உங்கள் மகனுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது.
பொதுவாகவே உங்களது மகன் மற்றவர்கள் சொல்வதை அவ்வளவு எளிதாக ஏற்றுக் கொள்ள மாட்டார். தனது மனதில் என்ன தோன்றுகிறதோ? அதன்படி துணிச்சலாக செயல்படுவார். உங்கள் மகன் ஜாதகத்தில் சூரியனும், வியாழனும் ஒரு கட்ட அமைப்பில் உள்ளன.
இத்தகைய கட்ட அமைப்பில் ஜாதகம் இருப்பது மிக மிக அபூர்வமானது. கோடியில் ஒருவருக்குத்தான் இந்த அமைப்பு கிடைக்கும். அந்த அருமையான ஜாதக அமைப்பு உங்களது மகன் ஜாதகத்தில் இருக்கிறது.
உங்களது மகன் கண்டக்டர் வேலையில் இருந்து நடிப்பு பயிற்சிக்கு போனதாக சொல்கிறீர்கள். அங்கும் எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை என்று சொல்கிறீர்கள். கவலைப்படாதீர்கள் உங்களது மகன் எந்த துறைக்கு சென்றாலும் அதில் முதன்மையாக ஒரு தலைவன் போல இருப்பார். அவரது ஜாதகத்தில் உள்ள ராசி அமைப்புகள் இதை தெள்ளதெளிவாக சொல்கின்றன.
உங்களது மகன் நிச்சயமாக இன்னொருவருக்கு அடிமையாக இருந்து வேலை பார்க்க மாட்டார். பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு வேலை கொடுக்கும் மிக மிக உயர்ந்த இடத்தில் இருப்பார். அவரது கை அசைவுக்கு பலரும் கட்டுப்படுவார்கள்.
இவ்வாறு அந்த ஜோதிடர் சொன்னதைக் கேட்டதும் ரனோஜிராவுக்கு ஒரு பக்கம் ஆச்சரியமாகவும், மற்றொரு பக்கம் பிரமிப்பாகவும் இருந்தது. ஜோதிடர் சொன்னதை அவரால் நம்ப முடியவில்லை. படபடப்புடன் காணப்பட்டார். அவரது இருதயம் வேகமாக துடிக்கத் தொடங்கியது. சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் அந்த ஜோதிடரை ரனோஜிராவ் நம்பிக்கை இல்லா மல்தான் பார்த்தார். அவரது முகப்பாவனை மூலம் அர்த்தத்தை ஜோதிடர் புரிந்துக் கொண்டார். தொடர்ந்து அவர் பேசினார்.
"நான் உங்கள் மகன் ஜாதகத்தை கணித்து பார்த்து விட்டு சொல்லும் தகவல்களை நீங்கள் நம்ப மறுக்கலாம். நான் பல ஆண்டுகளாக ஜாதகம் பார்த்து வருகிறேன். எனக்கு ஒரு ஜாதகத்தை கையில் எடுத்ததும் கிரக நிலைகளை வைத்து எளிதாக கணித்து விடுவேன்.
ஆனால் உங்களது மகன் ஜாதகம் மிக மிக அற்புதமானது. என் வாழ்நாளில் இப்படி ஒரு ஜாதகத்தை நான் பார்த்தது இல்லை. இந்த ஜாதக அமைப்பு என்னை பிரமிக்க வைக்கிறது. ஆச்சரியமாக இருக்கிறது. இந்த ஜாதகத்தில் உள்ள ஒவ்வொரு கட்டமும் என்னை திணற வைத்து விட்டது.
சில கட்ட அமைப்புகள் உண்மையில் என்னை உறுதியாக கணிக்க முடியாமல் திணற வைத்து விட்டன. அந்த அளவுக்கு இந்த ஜாதகக்காரர் மிக மிக உன்னதமாக இருக்கிறார். இப்போது அவர் எப்படி இருக்கிறார் என்பது பற்றி எனக்கு கவலை இல்லை. இன்னும் சில ஆண்டுகளில் அவரது உச்சம் மிக வேகமாக இருக்கும்.
இந்த ஜாதகக்காரரை பொறுத்தவரை என்னால் சில விஷயங்களை ஆணித்தரமாக சொல்ல முடியும். ஒன்று இந்த ஜாதகக்காரர் மிகப்பெரிய கோடீஸ்வரராக மாறுவார். நாடே கொண்டாடும் அளவுக்கு அவருக்கு புகழ் கிடைக்கும். அவரது செயல்பாடுகள் அவரை அசைக்க முடியாத சக்தியாக மாற்றும்.
நீண்ட நாட்களுக்கு அவர் மக்களால் விரும்பப்படும் ஒரு மாபெரும் சக்தியாக இருப்பார். நீண்ட நாட்களுக்கு அவரை பெயரும், புகழும், பணமும் தலைமை இடத்தில் வைத்துக் கொண்டே இருக்கும். நான் சொல்வது நிச்சயம் நடக்கும் பாருங்கள். அந்த அளவுக்கு இந்த ஜாதகக்காரர் மிக மிக புண்ணியம் செய்தவராக இருக்கிறார்" என்றார். ஜோதிடர் சொன்னதை கேட்க... கேட்க... ரனோஜிராவுக்கு பிரமிப்பாக இருந்தது. மற்றொரு பக்கம் மனதுக்குள் இனம் புரியாத பயம் வந்தது. ஜோதிடர் என்ன இப்படி சொல்கிறார் என்று அதிர்ச்சியோடு பார்த்தார்.
அடுத்து என்ன நடந்தது என்பதை நாளை பார்க்கலாம்.