பெண்களுக்கு தொல்லை கொடுக்கும் பூஞ்சை தொற்றும், தடுக்கும் முறையும்...!
- நல்ல பாக்டீரியாக்கள் அழிவதால் நமது உடலில் நோய்க்கிருமிகள் எளிதாக தொற்றிக்கொள்ளும்.
- புரோபயாட்டிக் நல்ல பாக்டீரியாவில் பொதுவாகவே பாதுகாப்பு தன்மைகள் அதிகமாக இருக்கிறது.
நமது உடலின் ஆரோக்கியத்துக்கு புரோபயாடிக் எனப்படும் நல்ல பாக்டீரியாக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இவை நமது செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன. நமது உடலில் நோய்களை ஏற்படுத்தக்கூடிய கெட்ட பாக்டீரியாக்களை கட்டுப்படுத்தி அழிக்கின்றன. இதன் மூலம் நம்முடைய ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உதவுகின்றன. இதில் முக்கியமாக குடல் பாக்டீரியா நமது ஆரோக்கியத்துக்கான அடிப்படை என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்கள்.
அதேபோல் பெண்களின் பெண் உறுப்புகளில் இருக்கிற சில நல்ல பாக்டீரியாக்கள் அவர்களின் ஆரோக்கியத்தில் மிகவும் முக்கியமான பங்கை வகிக்கிறது. பெண்களின் கர்ப்பப்பைக்குள் நுழைய முயலும் தொற்றுக்களை தடுக்கும் முக்கியமான வேலைகளை இந்த நல்ல பாக்டீரியாக்கள் செய்கின்றன.
இந்த நல்ல பாக்டீரியாக்கள் அழிவதால் நமது உடலில் நோய்க்கிருமிகள் எளிதாக தொற்றிக்கொள்ளும். குறிப்பாக கர்ப்பப்பையில் நோய்த்தொற்றுக்கள் எளிதாக பரவி விடும். அப்படி பரவாமல் இருக்க யோனிப்பகுதியில் உள்ள பாக்டீரியாவின் அமிலத்தன்மை பி.எச். அளவை மிகவும் கவனமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பை சீரமைக்கும் பாக்டீரியாக்கள்:
நமது உடலில் இயற்கையாக உள்ள நல்ல பாக்டீரியாக்கள் லாக்டோபேசிலிஸ் ஆகும். இவற்றில் கிரிஸ்பேக்டர்ஸ், கெசேரி, ஜென்சினி ஆகிய வகைகள் மிகவும் பொதுவான லாக்டோபேசிலிஸ் ஆகும். இதனுடைய தன்மையே இந்த அமிலத்தன்மை பி.எச். அளவை 3.5 முதல் 4.5 ஆக வைத்துக்கொள்ளும். அப்படி இருந்தால் தான் எந்தவித தொற்றுக்களும் நமது உடலின் உள்ளே நுழைய முடியாது.
எனவே பெண்களை பொருத்தவரைக்கும் கர்ப்பப்பை வாயில் பி.எச். அளவை பராமரிப்பது இந்த லாக்டோபேசிலிஸ் தான். இது மட்டுமல்ல, இந்த லாக்டோபேசிலிஸ் சில ஆன்டி பாக்டீரியாக்களை வெளிப்படுத்தும். அதாவது பாக்டீரியோசின், ஹைட்ரஜன் பெராக்சைடு ஆகியவற்றை வெளிப்படுத்துகிறது. இந்த ஹைட்ரஜன் பெராக்சைடை புண்களை கழுவுவதற்கு பயன்படுத்துவோம்.
இவை அனைத்தையும் இந்த நல்ல பாக்டீரியாக்கள் உற்பத்தி செய்கிறது. இந்த நல்ல பாக்டீரியாக்கள் யோனி பகுதியில் தங்கியிருப்பதால் எந்த கிருமிகளும் கர்ப்பப்பைக்குள் செல்ல முடியாது. இந்த லாக்டோபேசிலிஸ் அப்படி ஒரு பாதுகாப்பை கொடுக்கும். இதுதவிர இவை அந்த செல்லின் மேற்பரப்பு எல்லாவற்றிலுமே, அதனுடைய செல் ஏற்பிகளுடன் சேர்ந்து செல்கள் வழியாக தொற்றுக்கள் உள்ளே நுழைய முடியாதபடி ஒரு அடுக்கு போல உருவாகி காணப்படும்.
வெளியில் இருந்து ஏதாவது கெட்ட பாக்டீரியா நமது உடலின் உள்ளே நுழைந்து ஊடுருவினால், அது அதிகமாக பரவிய பிறகுதான் கிருமிகளிடம் இருந்து நோய் தாக்கம் ஏற்படும். இதனை தடுப்பதற்கு லாக்டோபேசிலிஸ் இதனுடைய செல்களின் சீட்ஸ் மேலே ஒரு பாதுகாப்பு படிவத்தை உருவாக்குகிறது. மேலும் ஆன்டிபயாடிக் போல வெளியிடுகிறது. அது தவிர இது ஒரு பாதுகாப்பு அடுக்கையும் உருவாக்குகிறது.
இவை தவிர இது நமது உடலில் சில நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பையும் சீரமைக்கிறது. செல்களில் நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பை சீரமைப்பதால் இதை கடந்து எந்த கிருமிகளும் நமது உடலில் நுழைய முடியாது. அது ஒரு பாதுகாப்பான நோய் எதிர்ப்பு சக்தி மெக்கானிசத்தையும் உருவாக்குகிறது. இதெல்லாம் இந்த நல்ல பாக்டீரியாவின் முக்கியமான விஷயங்கள் ஆகும்.
பெண்களுக்கு தொல்லை கொடுக்கும் பூஞ்சை தொற்று:
அப்படி இருக்கும் நிலையில் ஏதோ ஒரு காரணத்தினால் இந்த நல்ல பாக்டீரியா பழுதானாலோ அல்லது அழிக்கப்பட்டாலோ அல்லது குறைவானாலோ பல நேரங்களில் நமது உடலில் எளிதாக சில கிருமிகள் தொற்றிக்கொள்ளும். முக்கியமாக பூஞ்சை நோய்த்தொற்று வரும். அதாவது பூஞ்சை தொற்று தான் எங்கு வேண்டுமானாலும் ஏற்படும். உடலில் ஏதாவது ஒரு பகுதியில் நோய்க்கிருமி வருகிறது என்றால், அந்த இடத்தில் பாதுகாப்பு இல்லாத அடுக்குகள் இருந்தால், உடனே பூஞ்சை தொற்று பரவி பெண்களுக்கு தொல்லை கொடுக்கும்.
இந்த பூஞ்சை நோய்த்தொற்றான கார்ட்னரெல்லா என்பது எளிதாக பரவும் தன்மை கொண்டது. இது உடலில் பரவும் போது தான் கிருமிகளும் உடலில் தொற்றி எளிதில் பரவலாம். அது வைரஸ் ஆக இருக்கலாம், பாக்டீரியாவாக இருக்கலாம், வேறு பலவிதமான தொற்றுக்களாக இருக்கலாம், அருகில் இருக்கிற மலக்குடல் பகுதியில் ஈகோலை எனப்படும் கெட்ட பாக்டீரியா வரலாம், பல நேரங்களில் சிறு நீர்க்கு ழாயிலும் கெட்ட பாக்டீரியா ஊடுருவலாம். அதாவது நமது உடலில் உள்ள நல்ல பாக்டீரியா பழுதடைந்தால், அந்த பகுதியில் பாதுகாப்பு தன்மை குறைவாகி, அந்த நோய்த்தொற்றுகள் நமது உடலில் எளிதாக பரவுவதற்கு வாய்ப்புகள் ஏற்படும். நமது உடலில் எப்பொழுதெல்லாம் பாக்டீரியா பழுதடையலாம் என்று பார்க்கலாம்.
டாக்டர் ஜெயராணி காமராஜ், குழந்தையின்மை சிகிச்சை நிபுணர், செல்: 72999 74701
நல்ல பாக்டீரியாக்கள் அழிவதற்கான காரணங்கள்:
குறிப்பாக ஏதாவது நோய்க்காக நாம் ஆன்டிபயாடிக் மருந்து சாப்பிடும்போது இந்த நல்ல பாக்டீரியாக்கள் பழுதடைய வாய்ப்பு உள்ளது. நமது உடலில் ஏதோ ஒரு நோய் வரும்போது நாம் என்ன நினைக்கிறோம்? உடனே ஆன்டிபயாட்டிக் மருந்து சாப்பிடுகிறோம். அந்த ஆன்டிபயாடிக் நோய்க்கிருமிகளை மட்டுமல்லாமல், சில நேரங்களில் இந்த நல்ல பாக்டீரியாவையும் பழுதடைய செய்யும். இன்னும் சில நேரங்களில் நல்ல பாக்டீரியாக்களை அழித்துவிடும்.
இதனால்தான் சில பெண்களுக்கு நல்ல பாக்டீரியாக்கள் குறைவதால் பல நேரங்களில் நோய்த்தொற்று ஏற்பட்டு விடும். இதை நீங்கள் பல நேரங்களில் உணர்ந்து இருப்பீர்கள். அதாவது ஏதோ ஒரு காரணத்துக்காக பெண்கள் ஆன்டிபயாடிக் மருந்து எடுக்கும் போது, அவர்களுக்கு யோனி பகுதியில் அரிப்பு ஏற்படும், வெள்ளைப்படுதல் ஏற்படும், அரிப்பு இருக்கும், நமைச்சல் இருக்கும். இவை அனைத்தும் பூஞ்சை தொற்றுகள் வருவதால் ஏற்படுகிறது. இதனால் பெண்கள் பலரும் அவதிப்படுவது உண்டு.
இந்த பூஞ்சை தொற்றுகள் ஏன் வந்தது என்று பார்த்தால், நாம் சாப்பிடும் ஆன்டிபயாடிக் மருந்து அந்த நல்ல பாக்டீரியாவை அழித்துவிடுகிறது. அல்லது அதை பழுதாக்கி விடுகிறது. அதனுடைய செயல்பாடு குறைவானவுடன் கிருமிகள் பரவி பூஞ்சை தொற்றுக்கள் எளிதாக ஏற்பட்டு விடுகிறது. இதுதான் இதில் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம்.
அதனால்தான் பொதுவாகவே ஆன்டிபயாடிக் மருந்து எடுக்கும்போது முக்கியமாக, நல்ல பாக்டீரியாக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத, குறிப்பிட்ட வகையான ஆன்டிபயாடிக் மருந்து எடுங்கள் என்று சொல்கிறோம். அப்படி குறிப்பிட்ட வகை ஆன்டிபயாடிக் எடுக்கும்போது கூட, நல்ல பாக்டீரியாக்களுக்கு ஏற்படும் பாதிப்பை தடுக்கும் வகையில் கூடவே சில மருந்துகள் எடுத்தால் இந்த மாதிரி எளிதில் பரவக்கூடிய பூஞ்சை உள்ளிட்ட தொற்றுகள் வராமல் தடுக்க முடியும். இதெல்லாம் சில முக்கியமான விஷயங்கள். இதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
நல்ல பாக்டீரியாக்கள் அழிந்துவிடாமல் பாதுகாக்க வேண்டும்:
எனவே அந்த வகையில் புரோபயாடிக் எனப்படும் இந்த நல்ல பாக்டீரியாவான லாக்டோபேசிலிஸ், நமது உடலுக்கு நல்ல ஒரு பாதுகாப்பை கொடுக்கும் பாக்டீரியாவாக இருக்கிறது. அதனால் தான் பொதுவாகவே இந்த நல்ல பாக்டீரியாக்கள் பழுதாகக்கூடாது. அதனால் தான் நாம் ஆன்டிபயாடிக் எடுக்கும்போது, கூடவே நல்ல பாக்டீரியாக்களை பாதுகாப்பதற்கான ஒரு மருந்தையும் எடுத்துக்கொள்வோம். அதாவது நல்ல பாக்டீரியா இருக்கும் மற்றொரு மருந்தை கூடுதலாக எடுத்துக்கொள்வோம்.
இந்த புரோபயாட்டிக் நல்ல பாக்டீரியாவில் பொதுவாகவே பாதுகாப்பு தன்மைகள் அதிகமாக இருக்கிறது. இவை அனைத்தும் இந்த ஆன்டிபயாடிக்கின் தாக்கத்தால் உருவாகிற எதிர்மறை விளைவை குறைத்து ஆரோக்கியமான செல்கள் வளர்வதற்கும், பாதுகாப்பு அடுக்கு உருவாவதற்கும் உதவி செய்கிறது. இது ஒரு முக்கியமான விஷயம்.
இந்த வகையில் எந்த ஒரு ஆன்டிபயாடிக்கும் இந்த புரோபயாடிக் பாக்டீரியாவை அழித்து விடாமல் பார்ப்பதற்கு, நாம் ஒரு புரோபயாடிக் மருந்து எடுத்துக் கொள்வது மிக மிக முக்கியம். பெண்களின் ஒவ்வொரு வாழ்க்கை தரத்திலும், குறிப்பாக மாதவிடாய் வருகிற காலகட்டத்தில் புரோபயாடிக் எனப்படும் நல்ல பாக்டீரியா பாதிக்கப்படும். எனவே அந்த புரோபயாடிக் பாக்டீரியா அழிந்துவிடாமல் நாம் பாதுகாக்க வேண்டும்.
இந்த புரோபயாடிக் பாக்டீரியா இன்று நேற்று கண்டுபிடிக்கப்பட்டதல்ல. இதை சுமார் 80 ஆண்டுகளுக்கு முன்பே மருத்துவர்கள் கண்டுபிடித்து விட்டார்கள். இந்த நல்ல பாக்டீரியாவை அவர்கள் எப்படி கண்டு பிடித்தார்கள்? இந்த நல்ல பாக்டீரியாவை நமது உடலில் அதிகப்ப டுத்துவது எப்படி? அதற்கு என்னென்ன வகையான உணவுகளை நாம் சாப்பிட வேண்டும்? இதைப்பற்றி அடுத்த வாரம் பார்க்கலாம்.