2025 REWIND: ஜப்பானை தட்டித் தூக்கிய இந்தியா-பொருளாதார வளர்ச்சியில் 4வது இடம் பிடித்து அசத்தல்
- பொருளாதார வளர்ச்சியில் ஜப்பானைப் பின்னுக்குத் தள்ளி இந்தியா 4-வது இடத்தில் உள்ளது.
- அடுத்த சில ஆண்டுகளில் இந்தியா மூன்றாவது இடத்துக்கு முன்னேறலாம் என்றது நிதி ஆயோக் அமைப்பு.
புதுடெல்லி:
கேஷியரை என்னை வந்து பாக்கச் சொல்லு என்றபடியே வங்கிக்குள் நுழைந்தார் மேனேஜர் முகுந்த். அவரது அழைப்பை ஏற்று மேனேஜர் ரூமுக்குச் சென்றார் கேஷியர் கண்ணன்.
என்ன சார் விஷயம் கூப்டீங்களே? என கேட்டார் கேஷியர்.
பொண்ணு கல்யாண விஷயம் எப்படி போயிட்டிருக்கு. நீங்க லோனுக்கு அப்ளை பண்ணியிருக்கீங்க இல்லையா? என்றார் மேனேஜர்.
ஆமா சார், அதைதான் நம்பியிருக்கேன். எல்லா ஏற்பாடும் பண்ணிட்டிருக்கேன், சார் என பதில் சொன்னார் கண்ணன்.
விலைவாசி எல்லாம் பயங்கரமா ஏறிக்கிட்டு இருக்கே, எப்படி மேனேஜ் பண்ணுறீங்க என உண்மையான அக்கறையுடன் கேட்டார் மேனேஜர்.
நாம என்ன சார் செய்ய முடியும், ஊரோடு ஒத்துவாழ் என்கிற பழமொழி நமக்குதான் நல்லா பொருந்துது. எனவே வீட்டில கலந்து பேசி தேவையில்லாத செலவை எல்லாம் குறைச்சிட்டோம் என நிலைமையை விளக்கினார்.
பரவாயில்லையே, இந்திய அரசு மாதிரி பக்காவா பிளான்போட்டு பண்ணுறீங்க போல. இந்திய அரசு எதிர்காலத்தை கருத்தில் கொண்டு எடுத்துட்டு வர திட்டங்களால நமது பொருளாதாரம் வலிமையா இருக்குது. அண்டை நாடுகளான இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் பொருளாதார சிக்கல்ல மாட்டி சின்னாபின்னமாகி வருகின்றன. ஆனாலும் இந்தியா பொருளாதாரத்தில் உறுதித்தன்மையா செயல்பட்டு வருகிறது. இதனால்தான் வளர்ந்து வரும் பொருளாதாரத்துல நாம் ஜப்பானைப் பின்னுக்குத் தள்ளி நான்காவது இடத்துக்கு முன்னேறி இருக்கோம். அடுத்த சில ஆண்டுகளில் மூன்றாவது இடத்துக்கும் வரலாம் என பெருமையுடன் கூறினார் முகுந்த்.
அப்படியா, அதைப் பத்தி சொல்லுங்களேன் சார், கேட்போம் என்ற கண்ணனுக்கு மேனேஜர் முகுந்த் கூறியதன் சாராம்சம் பின்வருமாறு:
உலக பொருளாதாரத்தில் ஜப்பானைப் பின்னுக்குத் தள்ளி 4-வது பெரிய நாடாக இந்தியா வளர்ந்துள்ளது என நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி பி.வி.ஆர்.சுப்ரமணியம் கடந்த மே மாதம் அறிவித்தார். இது இந்தியர்கள் அனைவரும் பெருமைப்படக் கூடிய விஷயமாக அமைந்துள்ளது.
அமெரிக்கா, சீனா, ஜெர்மனி, ஜப்பான், இந்தியா என்ற வரிசையில் ஜப்பானின் பொருளாதாரத்தை இந்தியா முந்திவிட்டதால் நான்காம் இடத்திற்கு வந்துவிட்டதாக உலகப் பொருளாதார நிதி நிறுவனத்தின் புள்ளிவிவரங்களைச் சுட்டிக்காட்டி இந்த அறிவிப்பை நிதி ஆயோக் அதிகாரி வெளியிட்டார்.
இதே 6 சதவீத வளர்ச்சி தொடரும் நிலையில் இன்னும் 2 அல்லது 3 ஆண்டுக்குள் ஜெர்மனியை முந்திச் சென்று மூன்றாவது பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட நாடாக இந்தியா வளர்ந்துவிடும் எனவும் அவர் அறிவித்துள்ளது இந்தியர்களை தலைநிமிரச் செய்வதாகும்.
மத்திய அரசின் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் மூலம் இத்தகைய சாதனை நடந்து வருவது பெருமைக்குரிய விஷயமாகும்.
கடந்த 2014-ம் ஆண்டில் 10-வது இடத்தில் இருந்த இந்தியா, கடந்த, 2022ல் ஐந்தாவது இடத்துக்கு முன்னேறியது. தற்போது 4-வது இடத்துக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளது.
முதலிடத்தில் உள்ள அமெரிக்கா நம்மை விட 8 மடங்கும், சீனா 5 மடங்கும் பெரிய பொருளாதாரமாக இருப்பதால் அந்த நாடுகளை முந்திச் செல்ல இந்தியா இன்னும் வேகமான வளர்ச்சியை பதிவுசெய்ய வேண்டி உள்ளது.
நாட்டின் பொருளாதார வளர்ச்சி தனிநபர் வருவாயிலும் எதிரொலித்தால் மட்டுமே அது உண்மையான வளர்ச்சி ஆகும்.
தனிநபர் வருவாயைப் பொறுத்தமட்டில் 181 நாடுகள் பட்டியலில் இந்தியா 122-வது இடத்தில் உள்ளது. கல்வி, வேலைவாய்ப்புக்காக லட்சக்கணக்கான இந்தியர்கள் அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்குச் செல்கின்றனர்.
இதைத் தவிர்த்து அந்த நாடுகளைச் சேர்ந்தவர்கள் கல்வி, வேலைவாய்ப்பு தேடி இந்தியாவுக்கு வருமளவுக்கு நமது கல்வித்தரத்தையும், தனிநபர் வருமானத்தையும் உயர்த்த தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே மற்ற நாடுகளை முந்திச் சென்று இந்தியா வெற்றிபெற முடியும் என பொருளாதார நிபுணர்கள் கூறி வருகின்றனர் என தெரிவித்தார்.
பரவாயில்லையே சார், ஒரு காலத்துல எல்லா நாடும் நம்மை கேலி, கிண்டல் செய்து எதுக்குமே லாயக்கு இல்லாத இந்தியானு நம்மள மட்டம் தட்டிட்டு இருந்ததைப் பார்த்து ரொம்பவே வருத்தப்பட்டு இருக்கேன். ஆனா, இப்போ நெலமையே வேற. பொருளாதார வளர்ச்சில நம்மளோட வளர்ச்சி பெருமையா இருக்கு சார். நானும் வீட்டுக்குக் கிளம்பறேன். போகும்போது காய்கறி வாங்கிட்டு போகனும் சார் என்றபடியே மார்க்கெட்டுக்கு புறப்பட்டான் கண்ணன்.