2025 - ஒரு பார்வை

2025 REWIND: அழியாப் பெருங்கருணையின் மனித வடிவம் - மண்ணை விட்டு மறைந்த 'ஏழைகளின் போப்'

Published On 2025-12-09 12:00 IST   |   Update On 2025-12-09 12:01:00 IST
  • நற்கருணை என்பது பலம் வாய்ந்தவர்களுக்கு ஒரு பரிசு அல்ல, ஆனால் பலவீனமானவர்களுக்கு ஒரு சக்திவாய்ந்த மருந்து என்று கூறுவார்.
  • அறிமுகமில்லாத பழக்கவழக்கங்கள், வாழ்க்கை முறைகள் மற்றும் கருத்துக்களைக் கொண்டு வருபவர்கள் உட்பட மற்றவர்கள் மீது நமது நம்பிக்கையைப் புதுப்பிக்க விரும்புகிறேன்.

வாடிகனின் கத்தோலிக்க திருசபையின் தலைவராக கடந்த 2012 முதல் செய்யப்பட்டு வந்தவர் போப் பிரான்சிஸ். நுரையீரல் அழற்சி நோயால் அவதிப்பட்டு வந்த போப் பிரான்சிஸ் தனது 88 வயதில் இந்த ஆண்டு ஏப்ரல் 21 காலை காலமானார்.

அவரது விருப்பப்படி அவரின் உடல் வாடிகனுக்கு வெளியே அவருக்கு பிடித்தமான புனித மேரி மேஜர் பசிலிக்காவில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரது இறுதிச் சடங்கில் அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்ளிட்ட உலக தலைவர்கள் கலந்துகொண்டனர்.

சேரிகளின் போப் என்று அன்போடு அழைக்கப்பட்ட போப் பிரான்சிஸ் உடைய மறைவு உலகையே சோகத்தில் ஆழ்த்தியது.

யார் இந்த போப் பிரான்சிஸ்? 

அர்ஜென்டினாவை சேர்ந்த போப் பிரான்சிஸ் உடைய இயற்பெயர் ஜார்ஜ் மேரியோ பெர்கோக்லியோ. புவெனஸ் ஐரிஸ் நகரில் இத்தாலியைச் சேர்ந்த கணக்காளரான மரியோ ஜோஸ் பெர்கோக்லியோ மற்றும் இத்தாலிய குடியேறிகளின் மகள் ரெஜினா மரியா சிவோரி ஆகியோருக்கு ஐந்து குழந்தைகளில் மூத்தவராகப் ஜார்ஜ் மேரியோ பெர்கோக்லியோ பிறந்தார்.

அரசுப் பள்ளியில் படிப்பை முடித்து, புவெனஸ் ஐரிஸ் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி பயின்ற இவர் வேதியியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார். பின்னர் இயேசு சபையில் 1958இல் துறவு நிலை ஏற்றார். 1998 இல், புவெனஸ் ஐரிஸ் பேராயராகப் பொறுப்பேற்றார். 2001 இல் கார்டினலாக உயர்த்தப்பட்டார்.

2013, மார்ச் 13ஆம் நாள் கத்தோலிக்க திருச்சபையின் 266ஆம் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். வழக்கத்துக்கு மாறாக அப்போதைய திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் பதிவியில் இருந்து விலகுவதாக அறிவித்த நிலையில் பரபரப்பான சூழலில் திருத்தந்தை ஆன ஜார்ஜ் மேரியோ பெர்கோக்லியோ, போப் பிரான்சிஸ் ஆக தன்னை அடையாளப்படுத்தினார்

சேரிகளின் போப்

ஏழைகள் மற்றும் ஓரங்கட்டப்பட்ட மக்களுக்கான ஆழ்ந்த அர்ப்பணிப்புக்காக பிரான்சிஸ் "சேரிகளின் போப்" என்ற புனைபெயரைப் பெற்றார்.

அர்ஜென்டினாவில் பேராயராக இருந்தபோதும், வாடிகனில் போப் ஆகவும் தனது ஊழியம் முழுவதும், அவர் தொடர்ந்து வறிய சமூகத்தினரிடையே கருணை செலுத்தினார். சமூக நீதிக்காகவும், புறக்கணிக்கப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு அடைக்கலமாக திருச்சபை இருக்க வேண்டும் என்று வாதிட்டார்.

சீர்திருத்தவாதி

பழமைவாதத்தின் பேரில் புலம்பெயர்ந்தோர், LGBTQ கத்தோலிக்கர்கள் மற்றும் திருச்சபையால் பெரும்பாலும் விலக்கப்பட்ட மக்களையும் ஏற்று போப் பிரான்சிஸ் கத்தோலிக்க பொது மனப்பான்மையில் சீர்திருத்தங்களைச் செய்தார்.

வாடிகன் நிதி மற்றும் கட்டமைப்புகளில் சீர்திருத்தங்களைச் செயல்படுத்தினார். முதலாளித்துவ அமைப்புகளை சவால் செய்தல், காலநிலை மாற்றத்தைத் தடுக்கும் நடவடிக்கையை ஆதரித்தல் மற்றும் விவாகரத்து மற்றும் ஒர் பாலின உறவு போன்ற பிரச்சினைகளில் அவர்களுக்கு சமூகத்திலும் மதத்திலும் கோட்பாட்டு ரீதியாக இருந்த புறக்கணிப்பை எதிர்த்தல் ஆகியவை பழமைவாதத்தை எதிர்த்து போப் பிரான்சிஸ் செய்த முக்கிய பணிகளாகும். மத அடிப்படைவாதத்தை பிளேக் நோய் என்று போப் பிரான்சிஸ் கூறினார்.

குரலற்றவர்களுக்கான குரலாகவும், சீர்திருத்தவாதியாகவும், திருச்சபையின் பணியின் மையத்தில் ஏழைகளுக்கான நற்பணியை தொடர்ந்து முன்னிறுத்திய மேய்ப்பராகவும் போப் பிரான்சிஸ் உடைய என்றும் மரபு நிலைத்திருக்கும்.

ஏழைகளை விலக்கி வைக்கும் உலக பொருளாதார அமைப்பைக் கண்டிக்கும் பிரான்சிஸ், "நற்கருணை என்பது பலம் வாய்ந்தவர்களுக்கு ஒரு பரிசு அல்ல, ஆனால் பலவீனமானவர்களுக்கு ஒரு சக்திவாய்ந்த மருந்து" என்று கூறுவார்.

இறுதி செய்தி 

மறைவுக்கு முன் போப் பிரான்சிஸ் உலகத்திற்க்கு வழங்கிய தனது கடைசி ஈஸ்டர் செய்தியில்,

"எவ்வளவு பெரிய மரண தாகம், கொலைக்கான தாகம், நம் உலகின் பல்வேறு பகுதிகளில் நடக்கும் பல மோதல்களில் நாம் ஒவ்வொரு நாளும் காண்கிறோம்! பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது, குடும்பங்களுக்குள்ளும் கூட, எவ்வளவு வன்முறையை நாம் காண்கிறோம்! பாதிக்கப்படக்கூடியவர்கள், ஒதுக்கப்பட்டவர்கள் மற்றும் புலம்பெயர்ந்தோர் மீது சில நேரங்களில் எவ்வளவு அவமதிப்பு இழைக்கப்படுகிறது!.

இந்த நாளில், நாம் அனைவரும் புதிதாக நம்பிக்கை வைத்து, நம்மை விட வித்தியாசமானவர்கள், அல்லது தொலைதூர நாடுகளிலிருந்து வந்து, அறிமுகமில்லாத பழக்கவழக்கங்கள், வாழ்க்கை முறைகள் மற்றும் கருத்துக்களைக் கொண்டு வருபவர்கள் உட்பட மற்றவர்கள் மீது நமது நம்பிக்கையைப் புதுப்பிக்க விரும்புகிறேன்! ஏனென்றால் நாம் அனைவரும் கடவுளின் குழந்தைகள்" என்று தெரிவித்திருந்தார்.

புதிய போப்:

போப் பிரான்சிஸ் மறைவுக்கு பிறகு புதிய போப்-ஐ தேர்வு செய்வதற்கு வாடிகனில் உலகெங்கிலும் உள்ள 250 கார்டினல்கள் கூடினர். அதில் வாக்களிக்க தகுதியான 80 வயதிற்குட்பட்ட 133 கார்டினல்கள் வெளியுலக தொடர்புகளை துண்டித்துக்கொண்டு தேவாலயத்தில் ரகசிய வாக்கெடுப்பில் பங்கேற்றனர்.

முதல் வாக்கெடுப்பில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இரண்டு நாள் இழுபறிக்குப் பிறகு வாடிகனில் உள்ள தேவாலயத்தின் சிம்னியில் இருந்து வெள்ளை புகை வெளியேறியது.

இது புதிய போப் ஆண்டவர் தேர்வு செய்யப்பட்டதை குறிக்கிறது. புதிய போப் ஆக அமெரிக்காவைச் சேர்ந்த ராபர்ட் பிரிவோஸ்ட் தேர்வு செய்யப்பட்டார்.

அமெரிக்காவில் இருந்து தேர்வு செய்யப்பட்ட முதல் போப் ராபர்ட் பிரிவோஸ்ட் ஆவார். மே 8 அன்று போப் ஆக பதவியேற்றிக்கொண்ட இவர் தனக்கு போப் லியோ XIV என்று பெயர் சூட்டிக் கொண்டார்.  

Tags:    

Similar News