2025 - ஒரு பார்வை

2025 REWIND : சட்டசபை - தேசிய கீதம் - ஆளுநர் வெளியேற்றம்

Published On 2025-12-07 11:00 IST   |   Update On 2025-12-07 11:00:00 IST
  • சட்டசபைக்குள் ஆளுநர் ஆர்.என்.ரவி சென்றநிலையில் தமிழ்த்தாய் வாழ்த்து மட்டும் பாடப்பட்டது.
  • நாட்டின் தேசிய கீதத்தை மதிப்பது என்பது நமது அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள முதல் அடிப்படை கடமை.

புத்தாண்டில், தமிழக சட்டசபையின் ஆண்டு முதல் கூட்டத்தில், ஆளுநர் தன் உரையை வாசிப்பது வழக்கம். அந்த வகையில் கடந்த ஜனவரி 6-ந்தேதி நடந்த சட்டசபை கூட்டத்தின்போது ஆளுநர் ஆர்.என். ரவி, அவை தொடங்கிய 3 நிமிடத்திலேயே, தமிழக அரசின் உரையை வாசிக்காமல் புறப்பட்டு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

 

தேசிய கீதத்தை அவமதித்ததாகக் கூறி, தன் உரையை முழுமையாக வாசிக்காமல், பாதியிலேயே ஆளுநர் வெளியேறினார். இந்த நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக ஆளுநர் மாளிகை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அதில்,

நாட்டின் தேசிய கீதத்தை மதிப்பது என்பது நமது அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள முதல் அடிப்படை கடமை. அனைத்து மாநில சட்டசபைகளிலும் ஆளுநர் உரையின் தொடக்கம், முடிவில் தேசிய கீதம் இசைக்கப்படுகிறது.

தமிழக சட்டசபையில் இன்று மீண்டும் நாட்டின் அரசியலமைப்பு, தேசிய கீதம் அவமதிக்கப்பட்டது. சட்டசபைக்குள் ஆளுநர் ஆர்.என்.ரவி சென்றநிலையில் தமிழ்த்தாய் வாழ்த்து மட்டும் பாடப்பட்டது.

தேசிய கீதத்தை பாட சபாநாயகர், முதல்வருக்கு ஆளுநர் உருக்கமாக வேண்டுகோள் விடுத்தும் திட்டவட்டமாக மறுத்துவிட்டனர்.

ஆளுநர் உருக்கமான வேண்டுகோள் விடுத்தும் அதனை மறுப்பது மிகவும் கவலைக்குரிய விஷயம். அரசியல் சாசனம் மற்றும் தேசிய கீதத்துக்கு அவமரியாதை ஏற்பட்டதால் அவையிலிருந்து ஆளுநர் வெளியேறினார் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

ஆனால் சில நிமிடங்களில் அந்த பதிவை ஆளுநர் மாளிகை நீக்கியது. அதன்பிறகு, மீண்டும் சில திருத்தங்களுடன் அந்தப் பதிவு மீண்டும் எக்ஸ் தளத்தில் போடப்பட்டுள்ளது. இது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

கடந்த ஆண்டை போல, இந்த முறையும் ஆளுநர் சட்டசபையில் இருந்து பாதியில் வெளியேறிய சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளானது.

Tags:    

Similar News