2025 REWIND: ஆடி திருவாதிரை விழா... இளையராஜா இசை நிகழ்ச்சி - ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிட்ட பிரதமர் மோடி
- பிரதமர் மோடி கலாச்சாரத்துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த புகைப்படக் கண்காட்சியையும், சிற்பங்களையும் பார்வையிட்டார்.
- ராஜராஜ சோழனுக்கும், ராஜேந்திர சோழனுக்கும் தமிழகத்தில் பிரம்மாண்ட சிலைகள் அமைக்கப்படும்.
அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவில் வளாகத்தில், மத்திய கலாச்சாரத் துறை சார்பில் ராஜேந்திர சோழனின் பிறந்த நட்சத்திரமான ஆடி திருவாதிரை விழா, கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவில் கட்டத் தொடங்கிய ஆயிரமாவது ஆண்டு விழா, தென்கிழக்கு ஆசிய நாடுகளின் மீது படையெடுத்துச் சென்ற ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழா என முப்பெரும் விழா கடந்த ஜூலை மாதம் 23-ந்தேதி தொடங்கியது.
விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சியில் (ஜூலை மாதம் 27-ந்தேதி) பங்கேற்பதற்காக பிரதமர் மோடி திருச்சியிலிருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் கங்கைகொண்ட சோழபுரம் வந்தார். அவர், தமிழரின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை, துண்டு அணிந்து வந்தார்.
அங்கிருந்து கோவிலுக்கு வந்த பிரதமர் மோடிக்கு பூரண கும்பமரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து, கலாச்சாரத்துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த புகைப்படக் கண்காட்சியையும், சிற்பங்களையும் பார்வையிட்டார்.
பின்னர், காசியிலிருந்து பிரதமர் மோடி கொண்டு வந்திருந்த கங்கை நீரைக் கொண்டு பெருவுடையாருக்கு அபிஷேகம் நடைபெற்றது. இதில் பங்கேற்று, பிரதமர் சுவாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து விழா மேடைக்கு வந்த பிரதமருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி தஞ்சாவூர் கோவில் ஓவியத்தையும், தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வீணை ஓவியத்தையும் பரிசாக வழங்கினர். விழாவில் ஓதுவார்கள் தேவாரப் பாடல்கள் பாடினர்.
தொடர்ந்து, இசையமைப்பாளர் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இளையராஜா இசைத்த `ஓம் சிவோஹம்' பாடலை பிரதமர் மோடி ரசித்து மகிழ்ந்தார்.
பின்னர், ராஜேந்திர சோழன் உருவம் பொறித்த நினைவு நாணயம், திருவாசக தொகுப்பு நூலை பிரதமர் வெளியிட்டார்.
இதையடுத்து உரையாற்றிய பிரதமர் மோடி, 'வணக்கம் சோழ மண்டலம்' என்று தொடங்கி, 'நமசிவாய வாழ்க, நாதன் தாழ் வாழ்க, இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க' என்ற திருவாசகத்தை மேற்கோள் காட்டி தமிழில் பேசினார்.
ராஜராஜ சோழனும், அவரது மகன் ராஜேந்திர சோழனும் இந்தியாவின் அடையாளம் மற்றும் பெருமைக்குரியவர்கள். சோழரசின் வரலாறு மற்றும் பாரம்பரியம் நாட்டின் வலிமையும், திறனையும் பிரதிபலிக்கிறது. சோழர்களின் காலம் இந்திய வரலாற்றில் பொற்காலமாகும். ராஜேந்திர சோழன் கட்டிய கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவில், உலகம் முழுவதும் கட்டிடக் கலையின் அதிசயமாக பார்க்கப்படுகிறது.
சோழர்களின் காலத்தில் இந்தியா அடைந்த பொருளாதார வளர்ச்சி, தற்போதும் நம்மை ஊக்குவிக்கிறது. ராஜராஜ சோழன் சக்திவாய்ந்த கடற்படையை உருவாக்கினார். ராஜேந்திர சோழர் அதை மேலும் வலுப்படுத்தினார். சோழர்கள் இலங்கை, மாலத்தீவுகள், தென்கிழக்காசிய நாடுகளுடன் தூதரகம் மற்றும் வர்த்தக உறவுகளை வளர்த்தனர்.
ராஜேந்திர சோழன் கங்கை நீரை பொன்னேரியில் ஊற்றினார். இந்த நிகழ்வை நினைவுகூரும் வகையில், காசியில் இருந்து கங்கை நீர் தற்போது மீண்டும் கங்கைகொண்ட சோழபுரத்துக்கு கொண்டுவரப்பட்டது.
சோழர்கள் கடற்படை, வரி அமைப்புகள், நகராட்சி நிர்வாகங்கள் மூலம் வலிமையான அரசை உருவாக்கினர். இந்தியாவின் பாதுகாப்பை முன்னிலைப்படுத்தி, ஆபரேஷன் சிந்தூர் மூலம் உலகம் தற்போது இந்தியாவின் உறுதியான நடவடிக்கைகளை பார்த்து வியக்கிறது.
சோழ அரசர்கள் பாரதத்தை கலாசார ஒற்றுமை என்ற இழைகொண்டு இணைத்தார்கள். இன்று நமது அரசாங்கம் சோழர்களுடைய இதே கருத்துக்களை முன்னெடுத்துச் செல்கிறது.
தமிழ் கலாச்சாரத்தோடு இணைந்த புனித செங்கோல் பாராளுமன்றத்தில் நிறுவப்பட்டது. இன்றைய பாரதம் தனது வரலாற்றின் மீது பெருமிதம் கொண்டிருக்கிறது.
தேசத்தின் கலை சின்னங்கள் களவாடப்பட்டு அயல்நாட்டில் விற்கப்பட்டு விட்டன. இவற்றை நாங்கள் மீட்டெடுத்து வந்திருக்கிறோம்.
2014-ம் ஆண்டுக்கு பின்பு 600-க்கும் அதிகமான தொன்மையான கலை படைப்புகள் உலகின் பல்வேறு தேசங்களில் இருந்தும் பாரதம் வந்தன. இவற்றில் 36 கலைப்பொருட்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவை.
ராஜராஜ சோழன் சக்தி வாய்ந்த கடற்படையை உருவாக்கினார். ராஜேந்திர சோழன் அதை மேலும் பலப்படுத்தினார்.
யாராவது பாரதத்தின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மை மீது தாக்குதல் தொடுத்தால் பாரதம் எப்படிப்பட்ட பதிலடி கொடுக்கும் என்பதை 'ஆபரேஷன் சிந்தூர்' மூலம் உலகமே உற்றுப் பார்த்தது.
ராஜேந்திர சோழன் தனது தந்தையின் கோவிலைவிட உயரம் குறைந்த விமானம் அமைத்தார். இது தாழ்மையின் அடையாளம். அவ்வாறு புகழ்பெற்ற ராஜராஜ சோழனுக்கும், ராஜேந்திர சோழனுக்கும் தமிழகத்தில் பிரம்மாண்ட சிலைகள் அமைக்கப்படும் என்று கூறினார்.