கந்துவட்டி கொடுமை: த.வெ.க. பிரமுகர் தற்கொலை- விஜய்க்கு எழுதிய 3 பக்க உருக்கமான கடிதம்
- கடந்த 3 மாதங்களுக்கு முன்பு விபத்தில் சிக்கியதால் வட்டி பணத்தை சரியாக செலுத்த முடியவில்லை.
- அண்ணா இனிவரும் ஆட்சி உங்களுடையதுதான். இந்த மாதிரி வட்டிக்கு விடுபவர்கள் அனைவரும் பயப்பட வேண்டும்.
புதுச்சேரி:
புதுச்சேரி குயவர் பாளையம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் விக்ரம். (வயது 34.) த.வெ.க. பிரமுகரான இவர் இறைச்சிக்கடையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவரது மனைவி மேரி ஸ்டோரீஸ். 2 குழந்தைகள் உள்ளனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு விக்ரம் மினி லாரி ஒன்றை விலைக்கு வாங்கினார். இதற்காக பல இடங்களில் கந்து வட்டிக்கு கடன் வாங்கி இருந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு விக்ரம் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். எனவே அவரால் சரிவர வேலைக்கு செல்ல முடியவில்லை. இதனால் வருமானம் இல்லாமல் போனதால் வட்டிக்கு கடன் வாங்கியவர்களிடம் அவரால் பணத்தை திருப்பி செலுத்த முடியவில்லை.
இதுதொடர்பாக கடன் கொடுத்தவர்கள் அடிக்கடி விக்ரமிற்கு போன் செய்து பணத்தை திருப்பி கேட்டு தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த விக்ரமிற்கு அவரது மனைவி ஆறுதல் கூறிவந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் யாரும் இல்லாத போது விக்ரம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்த புகாரின் பேரில் உருளையன்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். அப்போது வீட்டில் விக்ரம் தன் கைப்பட த.வெ.க. தலைவர் விஜய்க்கு எழுதிய உருக்கமான கடிதம் ஒன்று சிக்கியது.
3 பக்கம் எழுதப்பட்டுள்ள அந்த கடிதத்தில், நான் கடன் வாங்கிய தொகைக்கு சரியாக வட்டி செலுத்தி வந்தேன். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு விபத்தில் சிக்கியதால் வட்டி பணத்தை சரியாக செலுத்த முடியவில்லை.
எனவே கடன் கொடுத்தவர்கள் என்னிடம் பணத்தை கேட்டு சித்ரவதை செய்தனர். மேலும் தவறாக பேசியதால் மனமுடைந்து தற்கொலை செய்து கொள்கிறேன். எனது கடைசி ஆசை என்னவென்றால் கந்து வட்டி கொடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அண்ணா இனிவரும் ஆட்சி உங்களுடையதுதான். இந்த மாதிரி வட்டிக்கு விடுபவர்கள் அனைவரும் பயப்பட வேண்டும்.
அண்ணா தயவு செய்து என் மனைவி மற்றும் பிள்ளைகளுக்கு ஏதேனும் படிப்பு மற்றும் வாழ்க்கைக்கு பணம் உதவி செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். எனது மகள் ஏஞ்சல் நன்றாக படிப்பால் படிக்க வையுங்கள் அண்ணா...
பிளீஸ் உங்களை நம்பிதான் உயிரை விடுகிறேன். ஹெல்ப்மீ மை பேமலி.
நான் இறந்த பிறகு என் உடலில் உள்ள உறுப்புகளை விற்று அதற்கு மாறாக எனது மனைவி மற்றும் பிள்ளைக்கு ஏதாவது பணம் தரவேண்டும் என்று வேண்டுகிறேன். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.
இந்த நிலையில் விக்ரம் கந்துவட்டி கொடுமையால் தற்கொலை செய்து கொண்டுள்ளதால் அவருக்கு வட்டிக்கு பணம் கொடுத்து தொல்லை கொடுத்தவர்கள் யார்-யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அவர்களை கைது செய்யவும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.