புதுச்சேரி

மதுக்கடத்தலை தடுக்க புதுச்சேரி எல்லையில் 41 இடங்களில் புதிதாக சோதனைச்சாவடி

Published On 2026-02-05 10:00 IST   |   Update On 2026-02-05 10:00:00 IST
  • 10 இடங்களில் தற்காலிக சோதனை சாவடிகள் அமைக்கப்படுகின்றன.
  • அடிப்படை வசதிகளை ஏற்படுத்தவும் கண்காணிப்பு கேமராக்கள் நிறுவுவதற்கான டெண்டர் பணிகளையும் கலாத்துறை முடுக்கிவிட்டுள்ளது.

புதுச்சேரி:

தமிழகம்-புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு விரைவில் சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட உள்ளது. இதனால் புதுச்சேரி அரசு துறைகள் முழு வேகத்தில் சுழல தொடங்கியுள்ளன.

அரசியல் கட்சிகள் வாக்காளர்களை அணுகும் உத்திகளை வகுத்துக் கொண்டிருக்கின்றனர். அதே நேரத்தில் புதுச்சேரி கலால் துறைக்கு தேர்தல் நேரத்தில் உருவாகும் முக்கிய சவால்களில் ஒன்றான மதுக்கடத்தலை தடுக்கும் முனைப்பில் களமிறங்கியுள்ளது.

மது கடத்தலை தடுக்க புதுச்சேரியில்-15, காரைக்கால்-10, ஏனாம்-10, மாகி-6 என மாநிலம் முழுவதும் 41 சோதனை சாவடிகள் ஏற்படுத்தப்பட உள்ளன.

புதுச்சேரி பிராந்தியத்தை பொறுத்தவரை மதகடிப்பட்டு, திருக்கனூர், கோரிமேடு, அய்யங்குட்டிப் பாளையம், கனகசெட்டிக்குளம், தவளக்குப்பம், மடுகரை, சோரியாங்குப்பம் முள்ளோடை, சேதராப்பட்டு, உச்சிமேடு, குருவிநத்தம், மணமேடு, கரையாம்புத்தூர், காமராஜர் மணிமண்டபம் உள்ளிட்ட 10 இடங்களில் இந்த தற்காலிக சோதனை சாவடிகள் அமைக்கப்படுகின்றன.

இந்த கலால் சோதனை சாவடிகள் புதுச்சேரி மாநிலத்திற்குள் உள்ளே, வெளியே வரும் வாகனங்களை தடுத்து நிறுத்தி, பணம், மதுபாட்டில்கள், பரிசு பொருட்கள் வாக்காளர்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றனவா என கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த கலால் சோதனை சாவடிகளுக்கு மின்வசதி, இருக்கை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தவும் கண்காணிப்பு கேமராக்கள் நிறுவுவதற்கான டெண்டர் பணிகளையும் கலாத்துறை முடுக்கிவிட்டுள்ளது.

இதுமட்டுமின்றி கலால் பறக்கும் படைகள் அமைப்பதற்கான பணிகளையும் இப்போதே தொடங்கிவிட்டது. கடந்த 2021 சட்டசபை தேர்தலின் போது புதுச்சேரியில் ரூ.25 லட்சம் மதிப்புள்ள மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News