நள்ளிரவு 1 மணிவரை மதுபான விற்பனைக்கு அனுமதி
- பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
- 1 மணி வரை மதுகடைகள் செயல்பட அனுமதி அளித்துள்ளதன் மூலம் குடிமகன்களுக்கு இந்த புத்தாண்டு மகிழ்ச்சியடைய செய்துள்ளது.
புதுச்சேரி:
புதுச்சேரியில் ஒவ்வொரு ஆண்டும் ஆங்கில புத்தாண்டு வெகு விமரிசையாக கொண்டாடப்படும்.
இதையொட்டி புதுச்சேரியில் உள்ள நட்சத்திர ஓட்டல்கள், ரிசார்ட்டுகள், தங்கும் விடுதிகள், ரெஸ்டோ பார்கள் மற்றும் பொது இடங்களில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள். கேளிக்கை நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.
குறிப்பாக தனியார் ஓட்டல்களில் ஆட்டம்-பாட்டம் என புத்தாண்டு கொண்டாட்டம் களைக்
கட்டும். இதற்கான முன்பதிவு தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது.
புதுச்சேரியில் ஆங்கில புத்தாண்டை மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழ வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான இளைஞர்கள், இளம் பெண்கள் வருகை தருவார்கள். சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் அரசு சார்பிலும், தனியார் சார்பிலும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
புதுச்சேரி மாநிலத்தை பொறுத்தவரை மதுபான கடைகள் வழக்கமாக காலை 8 மணி முதல் இரவு 11 மணி வரை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ரெஸ்டோ பார்கள் நள்ளிரவு 12 மணி வரை செயல்பட அனுமதி உள்ளது.
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு மதுபான கடைகளை கூடுதல் நேரம் திறக்க சிறப்பு அனுமதி வழங்கப்படுவது வழக்கம். அதன்படி வருகிற 2025-ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டையொட்டி மதுபானகடைகள், பார்களை கூடுதல் நேரம் திறக்க கலால்துறை அனுமதி வழங்கியுள்ளது.
இதுகுறித்து புதுச்சேரி அரசு கலால்துறை துணை ஆணையர் மேத்யூ பிரான்சிஸ் மதுபான கடை
களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
புதுச்சேரியில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு டிசம்பர் 31-ந் தேதி நள்ளிரவு வரை மதுபான விற்பனைக்கு சிறப்பு அனுமதி (உரிமம்) வழங்கப்படுகிறது.
அதன்படி மதுபானம் விற்பனை செய்யும் கடைகள் (சில்லரை, மொத்த விற்பனை) இரவு 11 மணி முதல் 11.30 மணி வரை சிறப்பு அனுமதி பெற ரூ.5 ஆயிரம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் மதுபார்களுடன் செயல்படும் மதுபான கடைகளுக்கு இரவு 11 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை செயல்பட ரூ.10 ஆயிரமும், சுற்றுலா பிரிவு' (ரெஸ்டோ, ஓட்டல்களுடன் இணைந்த மது பார்களுக்கு) ரூ.5 ஆயிரமும், ஓட்டல்களில் சிறப்பு அனுமதி பெற்று மதுவிருந்துடன் கேளிக்கை நிகழ்ச்சிகள் நடத்துபவர்களுக்கு ரூ.15 ஆயிரமும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
எனவே கூடுதலாக மதுபான விற்பனை செய்ய விரும்புவோர் உரிய கட்டணம் செலுத்தி சிறப்பு அனுமதி பெற்றுக்கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
குடிமகன்களுக்கு கொண்டாட்டம் கடந்த காலங்களில் புத்தாண்டையொட்டி நள்ளிரவு 12 மணிவரை மட்டுமே மதுகடைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு வந்தது. தற்போது 1 மணி வரை மதுகடைகள் செயல்பட கலால்துறை அனுமதி அளித்துள்ளதன் மூலம் குடிமகன்களுக்கு இந்த புத்தாண்டு மகிழ்ச்சியடைய செய்துள்ளது.