புதுச்சேரி

தமிழகத்தை போல புதுச்சேரியிலும் கிட்னி திருடும் மோசடி கும்பல்

Published On 2025-10-18 15:02 IST   |   Update On 2025-10-18 15:02:00 IST
  • போலி ஆவணங்களை தயார் செய்து மோசடியை அரங்கேற்றி வருவதாக கூறப்படுகிறது.
  • சின்னஞ்சிறு மாநிலமான புதுச்சேரியை மையமாக வைத்து பல்வேறு மோசடி செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

புதுச்சேரி:

ஏழை மக்களின் வறுமையை பயன்படுத்தி அவர்களின் கிட்னிக்கு சில லட்சம் கொடுத்து விட்டு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வாயிலாக பல கோடி ரூபாயை சுருட்டிய கும்பல் கடந்த சில வாரங்களுக்கு முன் தமிழகத்தில் சிக்கியது.

இச்சம்பவத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனை அதிகாரிகள், ஊழியர்கள், ஏஜெண்டுகளுக்கு தொடர்பு உள்ளதாகவும், தனியார் மருத்துவமனைகளை நடத்தும் அரசியல்வாதிகளும், இதன் பின்புலத்தில் உள்ளதாகவும் புகார் எழுந்தது.

அதை தொடர்ந்து நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் விசைத்தறி தொழிலாளர்களிடம் நடத்தப்பட்ட கிட்னி திருட்டு வெளிச்சத்திற்கு வந்ததால் திருச்சி மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் 2 தனியார் மருத்துவமனைகளுக்கு, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கான அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் புதுச்சேரியில் புறநகர் பகுதியில் உள்ள பிரபல மருத்துவமனையில் கிட்னி மாற்று அறுவை சிகிச்சையில் கடந்த சில நாட்களாக ஈடுபட்டு வரும் 'பகீர்' தகவல் தற்போது வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த கும்பல், தமிழகத்தை போல புதுச்சேரியிலும் கிட்னி தானம் கொடுப்பவர், பெறுபவரின் உறவினர் என போலி ஆவணங்களை தயார் செய்து மோசடியை அரங்கேற்றி வருவதாக கூறப்படுகிறது.

தமிழகத்தை சேர்ந்த மோசடி மற்றும் குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் சின்னஞ்சிறு மாநிலமான புதுச்சேரியை மையமாக வைத்து பல்வேறு மோசடி செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதில் கிட்னி மோசடி கும்பலும் இணைந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News