புதுச்சேரி

சட்டவிரோத கட்டிடங்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்காத புதுச்சேரி கலெக்டருக்கு ஐகோர்ட் நோட்டீஸ்

Published On 2025-08-21 12:56 IST   |   Update On 2025-08-21 12:56:00 IST
  • கட்டிடத்தை அகற்ற அதிகாரிகள் காலம் தாழ்த்தியதாக கூறப்படுகிறது.
  • சென்னை ஐகோர்ட்டில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை பிரபாதேவி தாக்கல் செய்தார்.

புதுச்சேரி:

புதுச்சேரி முத்துப்பிள்ளைபாளையம், மாரியம்மன் கோவில் தெருவில் வசிப்பவர் வீரராகு மனைவி பிரபாதேவி. இவருக்கு சொந்தமான இடம் புதுச்சேரி என்ஜினீயரிங் கல்லூரிக்கு எதிரே உள்ளது. இவ்விடத்தை அதே பகுதியைச் சேர்ந்த தனிநபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்து சட்ட விரோதமாக கட்டிடம் கட்டியதாக கூறப்படுகிறது

இதை அகற்றுமாறு மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பிரபாவதி தேவி தரப்பில் பலமுறை கோரிக்கை மனு அளித்தும், நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து சென்னை ஐகோர்ட்டில் பிரபாவதி தரப்பில் முறையிடப்பட்டது.

மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு 12 வாரங்களுக்குள் மேற்கண்ட கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்த கடந்த 26.09.2023 அன்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது. ஆனால் கட்டிடத்தை அகற்ற அதிகாரிகள் காலம் தாழ்த்தியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து புதுச்சேரி மாவட்ட கலெக்டர், நகரமைப்பு குழும இயக்குனர் மற்றும் நில அளவை பதிவேடு துறை தாசில்தார் ஆகியோருக்கு எதிராக, சென்னை ஐகோர்ட்டில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை பிரபாதேவி தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு கடந்த 13-ந் தேதி, விசாரணைக்கு வந்தது. இதை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு சட்டவிரோத கட்டிடங்களை அகற்ற நடவடிக்கை எடுக்காத கலெக்டர் உள்பட 3 பேருக்கும், நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு செப்டம்பர் 10-ந் தேதிக்கு வழக்கை தள்ளிவைத்தது.

Tags:    

Similar News